மகரம் - தமிழ் மாத ஜோதிடம்

2024 மார்கழி மாத ராசிபலன்

நம்பி வந்தவர்களுக்கு உதவும் மகர ராசி நேயர்களே!

மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அதுமட்டுமல்ல செவ்வாயின் பார்வையும் சனி மீது பதிகிறது. எனவே வருமானம் எவ்வளவுதான் வந்தாலும், செலவு இரு மடங்காகலாம்.

குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நலக் குறைவும், மருத்துவச் செலவும் ஏற்படும். சகோதர வர்க்கத்தினரின் அனுசரிப்பு குறையலாம். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் மாற்றப்படும். 'தான் உண்டு தன் வேலை உண்டு' என்று இருப்பதே உத்தமம்.

செவ்வாய் - சுக்ரன் பார்வை

மாதத் தொடக்கத்தில் கடகத்தில் உள்ள செவ்வாய், மகரத்தில் சஞ்சரிக்கும் சுக்ரனைப் பார்க்கிறார். சுக்ரன், கும்பத்திற்கு சென்ற பிறகும், அவரை செவ்வாய் பார்க்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவரது பார்வை தொடர்ந்து சுக்ரன் மீது பதிவதால் 'சுக்ர மங்கள யோகம்' உருவாகின்றது. எனவே இல்லத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடைகள் அகலும்.

வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். இடம் வாங்குவது, வீடு வாங்குவது போன்றவற்றில் ஆர்வம் கூடும். சகோதர வர்க்கத்தினரின் பகையை வளரவிடாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

குரு வக்ரம்

உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். அவர் வக்ரம் பெறும் பொழுது நன்மையும், தீமையும் கலந்தே நடைபெறும். இடமாற்றம், வீடு மாற்றம் உறுதியாகலாம். 12-ம் இடத்திற்கு அதிபதி வக்ரம் பெறுவது நன்மைதான்.

என்றாலும் வெற்றிகள் ஸ்தானத்திற்கு அதிபதியாக குரு விளங்குவதால், பஞ்சாயத்துகள் இழுபறி நிலையில் இருக்கும். பாகப்பிரிவினைகள் முடிவடையாது. எதிர்மறை சிந்தனைகள் அதிகரிக்கும். இல்லத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் என்னதான் செய்தாலும் அவர்கள் நன்றி காட்டமாட்டார்கள்.

கும்ப - சுக்ரன்

மார்கழி 15-ந் தேதி, கும்ப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியான அவர் தன ஸ்தானத்திற்கு வருவது நல்ல நேரம்தான். தொட்டது துலங்கும். தொழில் வளம் மேலோங்கும். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறும்.

வீண் வாக்குவாதங்களை கைவிட்டால், பிரச்சினைகளை தவிர்க்கலாம். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. அதிர்ஷ்ட வாய்ப்புகள் வந்து சேரலாம். இருப்பினும் ஏழரைச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது.

தனுசு - புதன்

மார்கழி 17-ந் தேதி, தனுசு ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் 12-ல் சஞ்சரிக்கும் போது, திட்டமிடாது செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். திடீர் மாற்றமும், ஏற்றமும் வரலாம். உத்தியோகத்தில் உயர்பதவிகள் கிடைப்பதற்கான அறிகுறி தோன்றும். வேலை மாற்றம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். கொடுக்கல் - வாங்கல்கள் சரளமாக நடைபெறும்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நட்பால் நன்மை உண்டு. வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் வந்துசேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு. கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் வந்துசேரும். மாணவ- மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக நடைபெறும். பிள்ளைகளுக்கு வேலை கிடைத்து வருமானம் உயரும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

டிசம்பர்: 23, 24, 27, 28, 29, ஜனவரி: 4, 5, 8, 9.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.