பராபவ வருடம் புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநா தன் செவ்வாய் வெற்றிகள் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். சுக ஸ்தானத்தில் குருவும், ஜீவன ஸ்தானத்தில் புதனும் உச்சம் பெற்றிருக்கின்றனர். சுக்ரன் சொந்த வீட்டில் பலம் பெற்று சஞ்சரிக்கிறார். உச்சம் பெற்ற குருவின் பார்வை தொழில் ஸ்தானத்தில் பதிகிறது. எனவே வியாபாரம் வெற்றிநடைபோடும். வருமானம் அதிகரிக்கும். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்துமுடிப்பீர்கள். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவங்கள் நிறைய நடைபெறும். தற்சமயம் ஏழரைச் சனியில் விரயச் சனியின் ஆதிக்கம் நடைபெறுகிறது. எனவே சுபவிரயங்கள் செய்ய முன்வருவீர்கள்.
புரட்டாசி 3-ந் தேதி (20.9.2026) அன்று கடக ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு நீச்சம் பெறுகிறார். ராசிநாதன் வலிமையிழக்கும் இந்த நேரத்தில் மனக்குழப்பம் அதிகரிக்கும். மாற்றுக் கருத்துடையோரின் எண்ணிக்கை கூடும். பொருளாதாரத் தடை அகலும். உடன்பிறப்புகளின் உதவி எதிர்பார்த்த அளவிற்கு கிடைக்காது. அண்ணன், தம்பிகளுக்குள் மனவருத்தம் ஏற்படும் இன்னல்களுக்கு இடையே வாங்கிய சொத்தை, விற்கும் நிலை உருவாகலாம். அதேநேரம் செவ்வாய் உங்கள் ராசிக்கு அஷ்டமாதிபதி என்பதால், சில நற்பலன்களும் நடைபெறும். நீண்ட நாட்களாக வராத பாக்கிகள் வசூலாகும். சென்ற சில மாதங்களாக தொழிலில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய, நீங்கள் எடுத்த புதிய முயற்சி பலன் தரும். உத்தியோகத்தில் வேலைப் பளு, திறமைக்குரிய அங்கீகாரம் இல்லாதது போன்ற காரணங்களால், வேறு நிறுவனத்திற்கு போகலாமா என்று சிந்திப்பீர்கள். சிலருக்கு நல்ல நிறுவனத்தில் இருந்து அழைப்புகள் வரலாம்.
உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், புரட்டாசி 6-ந் தேதி (23.9.2026) அன்று துலாம் ராசிக்குச் செல்கின்றார். அவர் சப்தம ஸ்தானத்தில் சுக்ரனோடு இணைந்து 'புத-சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார். எனவே பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புகழ் கூடும். கல்யாணக் கனவு நனவாகும். உங்களுக்கோ, உங்களைச் சார்ந்த குடும்பத்தினருக்கோ, உங்கள் குழந்தைகளுக்கோ, உடன்பிறப்புகளுக்கோ திருணம் நடைபெறுவதில், இதுநாள் வரை தாமதம் ஏற்பட்டிருக்கலாம். இப்போது அதற்கான வாய்ப்பு கைகூடும். வராது என்று நினைத்த தொகை வந்துசேரும். வாடகை கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும்.
மீன ராசியில் வக்ர இயக்கத்தில் இருக்கும் சனி பகவான் மீது, உச்ச குருவின் பார்வை பதிகின்றது. ஏழரைச் சனியில் விரயச் சனியின் ஆதிக்கம் இப்பொழுது நடைபெறுகிறது. எனவே நல்ல விரயங்களைச் செய்வது நல்லது. குறிப்பாக இல்லம் கட்டிக் குடியேறுவது அல்லது இடம் வாங்குவது, வாகனப் பழுதுகளை சீர் செய்வது, பெண் பிள்ளைகளின் திருமணத்தை முன்னிட்டு சீர்வரிசை பொருட்களை வாங்கிச்சேர்ப்பது போன்றவற்றில் அக்கறை செலுத்துவது நல்லது. இடமாற்றம், உத்தியோக மாற்றம் இனிமை தரும் விதம் அமையும். வக்ர சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு இப்பொழுது எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு உயரும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு திடீர் திடீரென வருமானம் வந்துசேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு. கலைஞர்களுக்கு நட்பால் நன்மை கிடைக்கும். மாணவ- மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு சுபச்செலவுகள் அதிகரிக்கும். வருமானம் திருப்தி தரும். குடும்ப முன்னேற்றம் கூடும்.