மனதில் பட்டதை மறைக்காமல் பேசும் மேஷ ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய் கடக ராசியில் நீச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். எனவே எல்லா காரியங்களிலும் கவனத்தோடு இருக்க வேண்டிய நேரம் இது. குறிப்பாக ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
மருத்துவச் செலவுகளும், மற்ற வழிகளில் வீண் விரயங்களும் ஏற்படலாம். திட்டமிட்ட காரியங்களை செயல்படுத்துவதில் பிரச்சினை வரலாம். எதையும் யோசித்துச் செய்வது நல்லது. பொருளாதாரத்தைப் பொறுத்தவரை வரவு திருப்தி தரும். என்றாலும் செலவு இருமடங்காகும்.
குரு வக்ரம்
ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான், இந்த மாதம் முழுவதும் வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 9, 12-க்கு அதிபதியானவர், குரு. விரயாதிபதியான அவர் வக்ரம்பெறுவது நன்மைதான். என்றாலும் பாக்கியாதிபதியாகவும் அவர் விளங்குவதால், ஒருசில காரியங்களில் தடை, தாமதம் வரத்தான் செய்யும்.
பெற்றோரின் உடல்நலனில் கவனம் தேவை. உற்றார், உறவினர்களின் பகை அதிகரிக்கும். குடும்பப் பிரச்சினைகளை தைரியத்தோடு எதிர்கொள்வீர்கள். கொடுக்கல்-வாங்கல்களில் பொறுப்பு சொல்வதால், தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும்.
சனி - செவ்வாய் பார்வை
கடகத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய், இந்த மாதம் முழுவதும் கும்பத்தில் சஞ்சரிக்கும் சனியைப் பார்க்கிறார். உங்கள் ராசிக்கு தொழில் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதி பதியானவர், சனி பகவான். அவர் சிறப்பாக செயல்பட்டால்தான் தொழில் வளர்ச்சியும், லாபமும் கிடைக்கும். ஆனால் பகைக் கிரகமான செவ்வாயின் பார்வையால், தொழில் மற்றும் உத்தியோகத்தில் குறுக்கீடுகள் அதிகரிக்கும்.
ஒருவரையும் நம்பி செயல்பட இயலாது. தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும். தன்னம்பிக்கை மட்டுமல்லாது, தெய்வ நம்பிக்கையும் அதிகம் தேவைப்படும் நேரம் இது. பண விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள்.
மகர - சுக்ரன்
கார்த்திகை 18-ந் தேதி, மகர ராசிக்கு சுக்ரன் செல் கிறார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், 10-ம் இடத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். இக்காலம் ஒரு இனிய காலமாக அமையும். சிக்கல்களில் இருந்தும், சிரமங்களில் இருந்தும் விடுபடுவீர்கள். பக்கபலமாக இருப்பவர்கள், உங்கள் பணத்தேவையைப் பூர்த்தி செய்யவும் முன்வருவர். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
'புதிதாக முதலீடு செய்து, தொழிலை விரிவுபடுத்தலாமா?' என்று சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்பதவியும், எதிர்பாராத புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். 'நினைத்ததை சாதிக்க வேண்டும்' என்ற எண்ணம் மேலோங்கும்.
செவ்வாய் வக்ரம்
கடக ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய், கார்த்திகை 18-ந் தேதி வக்ரம் பெறுகிறார். செவ்வாய், உங்கள் ராசிநாதனாக மட்டுமல்லாமல் அஷ்டமாதிபதியாகவும் விளங்குபவர். அவர் வக்ரம் பெறும் இந்த நேரத்தில் சில இடர்பாடுகள் நீங்கும். நீண்டநாட்களாக கைகூடாத காரியங்கள் கைகூடும். கடன்சுமை குறைய புதிய யுக்திகளைக் கையாள்வீர்கள். உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழ்வீர்கள். இடமாற்றம் இனிமை தரும் விதம் அமையும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.
வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு மாதத்தின் பிற்பாதியில் நற்பலன் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவர். கலைஞர்கள் பாராட்டு மழையில் நனையும் வாய்ப்பு உண்டு. மாணவ - மாணவிகளுக்கு கல்வியில் அக்கறை கூடும். பெண்களுக்கு குடும்பச்சுமை கூடும். உடல்நலனில் கவனம் தேவை.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்: 16, 17, 20, 21, 22, டிசம்பர்: 2, 4, 8, 9, 13,14.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.