ராசிபலன்

கடகம்- 2026 தமிழ்ப்புத்தாண்டு ராசிபலன்

காலத்தால் அவமானப்படுத்திய வழக்குகளிருந்து விடுபடுவீர்கள்.

கடகம்

புத்துணர்வுடன் செயல்படும் கடக ராசியினருக்கு பிறக்கப் போகும் பராபவ ஆண்டு எண்ணங்களும் லட்சியங்களும் ஈடறேக்கூடிய ஆண்டாக அமைய நல்வாழ்த்துக்கள்.

ஆண்டு முழுவதும் சனி பகவான் ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பார். 2.6.2026 முதல் ஜென்ம ராசியில் குரு பகவான் சஞ்சரிப்பார். 5.12.2026 முதல் ராசிக்குள் கேதுவும் அஷ்டம ஸ்தானத்தில் ராகு பகவானும் நின்று பலன் தருவார்கள்.

பராபவ ஆண்டு பொது பலன்கள்

கவலைப்படுவதற்காகவே பிறந்தவர்கள் கடக ராசியினர்கள். தங்களுக்கு நல்லது நடந்தாலும் கெட்டது நடந்தாலும் கற்பனை பயத்தால் கவலையை அதிகரித்துக் கொள்ளும் இயல்பு இவர்களுக்கு அதிகமாக உண்டு. தற்போது ஜென்ம ராசிக்குள் நுழையும் குரு பகவானும் கேது பகவானும் என்ன பலன் வழங்குவார்கள் என்ற கற்பனை பயம் இவர்களுக்கு வரத்துவங்கும்.

ஜென்ம ராசியில் குருபகவான் சஞ்சாரம் செய்யும் காலத்தில் கெளரவம் புகழ், அந்தஸ்து உயரும். ஆயுள் பயம் விலகும். நல்ல பழக்க வழக்கம் உண்டாகும். நன்மை, தீமையை பகுத்தாயும் திறன் மேம்படும். உடலும், மனமும் புத்துணர்வு அடையும். ஆன்ம பலம் பெருகும்.தொழில் வளம் பெருகும். கூட்டுத் தொழிலில் நிலவிய சண்டை சச்சரவுகள் விலகும். சோதனைகள் சாதனைகளாக மாறும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் புரிவர்களுக்கு தொழில் தொடர்பான வெளிநாட்டு பயணங்கள் அதிகரிக்கும்.

தொழில் எதிரிகள் விலகுவார்கள்.தொழில் தொடர்பாக மனதில் இருந்த இனம் புரியாத பயம் விலகி எதையும் சமாளிக்கும் மன தைரியம் பெரும். இதுவரை நல்ல உத்தியோகம் இல்லாமல் மன உளைச்சலை சந்தித்தவர்களுக்கு நிம்மதியான மன நிறைவான வேலை கிடைக்கும். ஏற்கனவே நல்ல வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு என சிறப்பான உயர்வு உண்டு.

புத்திர பிராப்தம் உண்டாகும். வயோதிகர்களுக்கு பேரன், பேத்தியை பார்க்கும் யோகமான நேரம்.குடும்பத்துடன் உல்லாசமாக சுற்றுலா சென்று வருவீர்கள். அரசியல்வாதிகள் கருத்து ஒற்றுமை அதிகமாகும். குருவின் பார்வை சுபமானது. பார்க்கும் இடத்தை விருத்தி செய்வார். ஆயுள், ஆரோக்கியம் சார்ந்த பயம் அகலும். படுக்கையில் இருந்தவர்களுக்கு .கூட நாட்பட்ட வியாதிகளின் தன்மை புரியும்.

நோயை வெல்ல முடியும் என்ற மன தைரியம் கூடும். எந்த முறை வைத்தியம் சிறந்தது என்று புரியும். அறுவை சிகிச்சை வரை சென்ற நோய் வந்த சுவடு தெரியாது. குடிப்பழக்கம், போதைக்கு அடிமையானவர்கள் மருத்து உதவியில் சீராக வாய்ப்பு உள்ளது. காலத்தால் அவமானப்படுத்திய வழக்குகளிருந்து விடுபடுவீர்கள்.

கோட்சார கிரகங்களால் கல்விக்கு எந்த தடையும் இருக்காது. படிக்கும் ஆர்வம் கூடும். உயர் கல்விக்குத் தேவையான கடன் உதவி வங்கிகள் மூலம் கிடைக்கும். ஆரோக்கியகேடு வைத்தியத்தில் சீராகும்.ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று புனித நீராடல், புனித தல யாத்திரை செய்து வர வாய்ப்பு கிடைக்கும்.

புனர்பூசம் 4

முயற்சிகளில் வெற்றி உண்டாகும் வருடம். திரிகோணங்கள் பலம் பெறுவதால் தடைபட்ட திருமணம் நடந்து முடியும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை அதிகரிக்கும். பல புதிய வாய்ப்புகள் தேடி வரும். சகோதர சகோதரிகளால் ஆதாயம் உண்டு. சிலருக்கு வீடு மாற்றம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும்.

தந்தைவழி சொத்துக்களில் இருந்துவந்த சிக்கல்கள் நீங்கும்.நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மூளை பலமே மூலதனம் என்று திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு .வெளியூர், வெளிநாட்டு வியாபாரத் தொழில் சம்பந்தமான பிரச்சனைகள் அகலும். விரும்பிய கடன் தொகை கிடைக்கும்.

சிலர் மனமாற்றத்திற்கு குறுகிய காலம் வெளியூர், வெளிநாட்டில் வசிக்கும் மகன் அல்லது மகள் வீட்டிற்குச் சென்று வரலாம். வேலைப்பளு மிகுதியாகும். ஆரோக்கிய கேடு சீராகும்.

பூசம்

மகிழ்ச்சியான வருடம்.குடும்பத்தில் சுப விசேஷங்கள் நடைபெறும்.பண பற்றாக்குறை அகலும். உற்றார் உறவினர் குடும்ப நண்பர்களின் அனுசரணை அதிகமாகும்.அரசாங்க உதவி தேவைகளை நிறைவேற்றும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைக்கும். பெரிய முதலீடுகளில் தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்பும், தொழில் துவங்கும் அமைப்பும் உண்டாகும். வராக் கடன்கள் வசூலாகும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவும், வருகையும் மகிழ்ச்சி தரும்.

ஆரோக்கிய கேட்டால் விடுப்பில் இருந்தவர்கள் மீண்டும் பணிக்குச் செல்லும் வகையில் உடல் நலம் சீராகும். பிற இனத்தவர் மற்றும் மதத்தினரால் நன்மைகள் உண்டாகும். இளம் வயதினர் காதல் வயப்படுவார்கள். குடும்ப உறுப்பினர்கள் வாக்குவாதத்தை தவிர்த்து மன அமைதியை தக்க வைத்துக் கொள்வது நல்லது. பூர்வீக சொத்து தொடர்பான பேச்சுவார்த்தை நடக்க வாய்ப்பு உள்ளது. விவசாயிகளுக்கு அரசின் ஆதரவு உண்டு.

ஆயில்யம்

காரிய சித்தி உண்டாகும் வருடம்.அதிர்ஷ்டம், பேரதிர்ஷ்டமும் ஒருங்கே கை கொடுக்கும் காலம்.எடுத்த முயற்சியில் எதிர் நீச்சல் போட்டு வெற்றி பெறும் ஆற்றல் உண்டாகும். உங்களின் பெயர், புகழ், உயரும். தொழில் போட்டி, பொறாமை, மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு கவுரவமான பதவி உயர்வு கிடைக்கும். அரசியல் பிரமுகர்கள் ஆசிரியர்கள், ஆலோசகர்கள், நிர்வாகிகள், ஜோதிடர்கள்,பத்திரிக்கையாளர்கள் சாதகமான பலன் பெறுவார்கள்.வீடு கட்டும் பணி துரிதமடையும்.

ஆரோக்கிய குறைபாடு அகலும். மருத்துவச் செலவு குறையும். சகோதர, சகோதரிகளின் அன்பும், பாசமும், சந்திப்பும் மனதில் உற்சாகத்தை அதிகரிக்கும்.காரியத் தடைகள் மற்றும் துரதிர்ஷ்டங்கள் விலகும்.அரசியல் பிரமுகர்கள் கட்சியையும், தொண்டர்களையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியம். மனம், வாக்கு, இரண்டடையும் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

திருமணம்

தடைபட்ட திருமணம் ஜுன் மாதத்திற்கு மேல் நடைபெறும். பொருத்தமான ஜாதகம் வந்து மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். இது வரை ஏதாவது காரணம் கூறி திருமணத்தை தள்ளியவர்கள் கூட திருமணத்திற்கு ஒத்துக் கொள்வார்கள்.முதல் திருமணம் தோல்வியில் முடிந்த சிலருக்கு இரண்டாவது திருமணம் நடக்கும் வாய்ப்பும் உள்ளது.

பொருளாதாரம்

விரும்பிய வாழ்வியல் மாற்றம் ஏற்படப் போகிறது. குடும்ப தோஷம் விலகும். முக்கிய கிரகங்கள் பெயர்ச்சியாவதால் சில பல மாற்றம் உண்டாகப் போகிறது.நிதி நிலையில் சாதகமான மாற்றம் உண்டு. பொன், பொருள் பற்று அதிகரிக்கும். ஆடம்பரச் பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். வரவு அதிகரித்து செலவு குறையும். கடன் தொல்லை குறையும்.

திட்டமிட்ட செயல்பாட்டால் மகிழ்ச்சி அதிகரிக்கும். பங்குச் சந்தை முதலீடுகள் லாபத்தை பெற்று தரும். தொழில், உத்தியோக அனுகூலம் உண்டு. பற்றாக்குறை பட்ஜெட் அகலும். அடமான நகைகள் மீண்டு வரும். 8ம்மிடத்திற்கு ராகு நுழைந்த பிறகு அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்களான ரேஸ், பங்குச்சந்தை, லாட்டரி கடனை உற்பத்தி செய்யும்.

பெண்கள்

எண்ணங்கள் ஈடேறும் வருடம். மலை போல் துயரம் வந்தாலும் பனி போல் நீங்கி விடும். வெளியூர், வெளிநாட்டு பயணங்களில் ஆதாயம் கிட்டும். பதவியில் நிலவிய குளறுபடிகள் நீங்கும். வேலை மாற்றத்திற்கான விருப்பம் நிறைவேறும். விவாகரத்து வரை சென்ற குடும்ப விஷயம் சீராகும்.

கணவன் மனைவி அந்நியோன்யம் கூடும்.வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் நல்ல குணம் தெரியும். குடும்பத்தில் பிறரின் தலையீட்டால் ஏற்பட்ட பிரச்சனைகள் அகலும். வீடு, வாகன யோகம் உண்டு. அலுவலகத்தில் விண்ணப்பித்த கடன் கிடைக்கும். கற்பனை கவலைகளைத் தவிர்த்து எதார்த்தமாக வாழப் பழக வேண்டும்.

பரிகாரம் ஜென்ம குருவினால் மேன்மையான பலன்களை அடைய வியாழக்கிழமை மாலை 5.30 - 6 மணிக்குள் குபேர லஷ்மியை வழிபட நல்ல பலன்கள் இரட்டிப்பாகும்.