மகரம்
மகர ராசியினருக்கு பிறக்கப் போகும் பராபவ ஆண்டு தொழிலில் வெற்றியும், மேன்மையும் லாபமும் உண்டாகும் வருடமாக அமைய நல்வாழ்த்துக்கள். ஆண்டு முழுவதும் ராசி அதிபதி சனி பகவான் மூன்றாம் இடமான வெற்றி ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். 2.6.2026 முதல் குருபகவான் சம சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பார்.
5.12.2026 வரை ராகு பகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்திலும் கேது பகவான் அஷ்டமஸ்தானத்திலும் சஞ்சரிப்பார். அதன் பிறகு ராகு பகவான் ராசியிலும் கேது பகவான் சமசப்த மஸ்தானத்திலும் சஞ்சரிப்பார்கள்.
பராபவ ஆண்டு பொது பலன்கள்
உழைப்பில் ஆர்வம் நிறைந்த உழைப்பால் உயர்ந்த மகர ராசியினருக்கு பிறக்கப் போகும் பராபவ ஆண்டு ராசியை குரு பார்ப்பதால் தெய்வ நம்பிக்கை கூடும் .குடும்ப முன்னேற்றத்திற்கு சுப செலவுகள் செய்வீர்கள்.
நல்லார் உறவும், நண்பர்கள் ஆதரவும் உறவினர்கள், ஒத்துழைப்பும் அமோகமாக அமையும். சொந்தத் தொழில் செய்பவர்கள் அதிக முனைப்புடன் விடா முயற்சியுடன் செயல்பட்டால் பெரும் லாபம் கிட்டும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தற்காலிக வேலையில் இருப்பவர்களுக்கு பணி நிரந்தரம் ஏற்படும்.
புதிய தொழில் முயற்சிக்கு உகந்த நேரம். தொழில் பங்காளிகளை சாதுர்யமாக பேசி சமாளிப்பீர்கள்.அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். சமூக சேவைக்காக அதிக அலைச்சல் மிகுந்த பயணம் செய்ய நேரும். சிலர் வாடகைக்கு வசிக்கும் வீட்டை விலைக்கு வாங்குவார்கள்.
மனைவி மூலம் ஸ்திர சொத்துக்களின் சேர்க்கை உண்டாகும். பிரிந்த தம்பதிகள் சேர்ந்து வாழத் துவங்குவார்கள். திருமணத் தடை அகலும்.கலப்பு திருமணங்கள் அதிகம் நடக்கும்.
குடும்பத்தில் ஏதாவது செலவு இருந்து கொண்டே இருக்கும். அவ்வப்போது சிறு சோர்வு, அசதி அலுப்பும் தோன்றி மறையும். அடிக்கடி கை கால்களில் உடம்புகளில் வலி இருந்து கொண்டே இருக்கும். உடல் ஆரோக்கியத்தில், உணவு விசயத்தில் அக்கறையும் கவனமும் தேவை. வைத்தியம் பலன் தரும்.சகோதரர் வகையில் வரவு உண்டு.
சுமாராக படித்த மாணவர்கள் படிப்பில் நல்ல கவனம் செலுத்தி அதிக மதிப்பெண் பெறுவார்கள். படிப்பை இடையில் நிறுத்தியவர்கள் மீண்டும் கல்வியை தொடர்வார்கள். சிலருக்கு புனித ஸ்தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும்.
சிறு தூர இடப்பெயர்ச்சி, வீடு மாற்றம், வேலை மாற்றம், ஊர் மாற்றம் ஏற்படலாம்.பிறருக்கு உதவும் குணம் அதிகமாகும். வீண் அலைச்சல் தூக்கமின்மை இருக்கும். போட்டி, பொறாமையால் கண் திருஷ்டி உண்டாகும்.
அண்டை, அயலாருடன் ஏற்பட்ட எல்லைத் தகராறுகள் சீராகும். பேச்சுத் திறமையால் எதையும் சமாளிக்க முடியும்.கடுமையான வார்த்தைகள் பிரயோகம் பண்ணுவதை தவிர்த்தல் நலம். தேவையற்ற கோபத்தை குறைத்தால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது.
உத்திராடம் 2, 3, 4
தடைகள் தகர்ந்து வெற்றி நடை போடும் வருடம்.புதிய வாய்ப்புகள் தேடி வரும்.மனதில் புதிய தெம்பு, தைரியம் குடி புகும். விருப்பங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும். உங்களை அலங்கரித்துக் கொள்வதிலும் ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதிலும் விருப்பம் கூடும்.
குடும்ப உறவுகளின் செயல்களில் நன்மை இருக்கும். கடந்த கால சங்கடங்கள் விலகி முன்னேற்ற பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். இதுவரை சந்தித்த பிரச்சனைகள் பனி போல் விலகும்.துக்கத்தால் தூக்கமின்றி தவித்தவர்களுக்கு நிம்மதியான தூக்கம் வரும்.
மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை மாறி படிப்பில் ஆர்வம் உண்டாகும்.வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாகும்.பெண்களுக்கு வேலை பார்க்கும் இடத்தில் பாதுகாப்பு கூடும்.
சிலருக்கு திருமணம் நடந்தாலும் மனதிற்கு பிடிக்காத தகுதி குறைந்த திருமணமாகவோ இருக்கும்.பெரிய எதிர்பார்ப்புகளைக் குறைத்தால் சிரமங்களை எளிதில் கடந்து விடலாம்.
திருவோணம்
பொருளாதாரத்தில் தன்னிறைவு உண்டாகும் வருடம்.ராசியை குரு பார்ப்பதால் மனக் கவலைகள் அகலும்.லாபம் இல்லாத செயல்களில் ஈடுபடமாட்டீர்கள்.வாழ்க்கையே போராட்டமாக இருந்த நிலை மாறும்.சீரான தொழில் வளர்ச்சியால் மன நிம்மதி கூடும். முடங்கி கிடந்த, தடைபட்ட அனைத்து செயல்களும் வெற்றி வாய்ப்பை தேடித்தரும்.
வெளிநாட்டு வேலை கிடைக்கும். செலவுகள், விரயங்கள் குறையும். சேமிப்புகள் கூடும்.ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்குதல் அல்லது நிலத்தில் முதலீடு செய்தல் போன்ற நல்ல பலன்கள் நடக்கும். தடைபட்ட வாடகை வருமானம், குத்தகை பணம் வரத்துவங்கும்.
சிலருக்கு புதிய நகைகள், ஆபரணங்கள் வாங்கும் யோகம் ஏற்படும்.பெற்றோர்கள் பெரியோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் தெளிவு ஏற்படும்.குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு பெருகும்.
அவிட்டம் 1,2
திருமண விஷயத்தில் விழிப்புடன் செயல்பட வேண்டிய வருடம். ராசிக்கு வலுவான சர்ப்ப தோஷம் உள்ளதால் எந்த செயலையும் பல முறை யோசித்து செயல்பட வேண்டும்.வெற்றி மீது வெற்றி வந்து உங்களை சேரும் அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் சுக்கிர பகவானை சேரும். தொழில் கடனை குறைக்க புதிய வழிபிறக்கும்.
தேவைக்கு பணவசதி கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும்.தொழில் லாபங்கள் மறு முதலீடாக மாறும். புதிய தொழில் ஒப்பந்தம், பங்குச் சந்தை முதலீடுகளால் சுப பலன் ஏற்படும்.மேலதிகாரிகள் அதிகப் பணிச்சுமையை தரலாம்.
சிலர் பணியில் இருந்து விலகிக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். சொந்தங்களையும் சுற்றி இருப்பவர்களையும் பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
திருமணம்
ராசியை ராசியை குரு பார்ப்பதால் திருமண தடை அகலும் சுய ஜாதக ரீதியான தோஷங்களும் சாபங்களும் விலகும். அதே நேரத்தில் 1, 2, 7 ,8ம் இடங்களுக்கு ராகு கேதுக்களின் சம்பந்தம் இருப்பதால் கோச்சார ரீதியான சர்ப்ப தோஷத்தால் சிலருக்கு திருமணத் தடை ஏற்படலாம்.உரிய பரிகாரங்கள் வழிகாட்டு முறைகளை கடைபிடிக்கும் போது தோஷ நிவர்த்தி உண்டாகும்.
ராசிக்கு ஏழில் குரு கேது சேர்க்கை ஏற்படுவதால் நண்பர்கள் தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்கள் வாழ்க்கை துணையால் சில மனக்கசப்புகள் ஏற்படலாம்.
திருமண வாழ்க்கையில் விவாகரத்து பெற்ற ஆண், பெண்களுக்கு மறுமணம் நடைபெறும்.
பொருளாதாரம்
உபரி வருமானங்கள் அதிகம் கிடைக்கும். ஐஸ்வர்யம் பெருகும். தங்கம் இல்லாதவர்களுக்கும் நகை சேரும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உள்ளது. இதுவரை சொத்து இல்லாதவர்களுக்கு சொத்து கிடைக்கும்.
சூழ்நிலைக்கு ஏற்ப உங்கள் செயல்பாட்டினை மாற்றி அகலக் கால் வைக்காமல் இருப்பதை வைத்து நிம்மதி அடைய முயற்சி செய்ய வேண்டும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு பங்குதாரர்களால் வருமானம் உயரும்.பணவரவு திருப்தி தரும்.புதிய முதலீடுகள் செய்வீர்கள்.
அழகு, ஆடம்பர நவீன பொருட்கள், தங்க, வெள்ளி நகை சேர்க்கை அதிகரிக்கும். திருமணம், வீடு, வாகனம் என சுப செலவுகளும் ஏற்படலாம்.சேமிப்பு கரையும்.பங்குச் சந்தை வர்த்தகத்தை தவிர்க்கவும். அதிக கவனத்துடன் பணிகளில் ஈடுபட்டால் நஷ்டம் ஏற்படாமல் காப்பாற்ற முடியும்.
பெண்கள்
வருமானம் உயர்வதால் உங்கள் செல்வாக்கு சொல்வாக்கிற்கு மதிப்பு இருக்கும்.குடும்பத்தில் நிம்மதி நிறைந்திருக்கும் கடன் சார்ந்த பாதிப்புகள் குறையும்.அடமான நகைகளை மீட்கக் தேவையான பண உதவி கிடைக்கும்.
அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, புதிய சலுகைகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வீட்டில் சுப நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.எல்லாம் முறையாக நடந்தாலும் எதிர்காலம் பற்றிய பயமும் அவ்வப்போது வந்து மறையும் பிறரின் குடும்ப விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. மனம் மற்றும் உடலை கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பது நல்லது.
பரிகாரம் மகர ராசியினர் சனிக்கிழமைகளில் காவல் தெய்வங்களை வழிபடுவதால் செல்வாக்கு சொல்வாக்கு உயரும்