ராசிபலன்

மேஷம்- 2026 தமிழ்ப்புத்தாண்டு ராசிபலன்

சூரியன் உச்சமாகும் மேஷ ராசியில்பிறந்தவர்களுக்கு தன்னம்பிக்கை தைரியம் அதிகம் இருக்கும்.

எதிலும் வெற்றிவாகை சூட விரும்பும் மேஷ ராசியினருக்கு பராபவ வருட தமிழ் புத்தாண்டு சாதகமாக அமைய நல்வாழ்த்துக்கள்.இந்த தமிழ் புத்தாண்டு முழுவதும் சனிபகவான் ராசிக்கு 12ம்மிடத்தில் நின்று விரயச் சரியாக பலன் தருவார்.

ஜூன் 2, 2026 வரை குரு பகவான் சகாய ஸ்தானத்தில் வெற்றி ஸ்தானத்தில் சஞ்சரிப்பார். அதன் பிறகு நான்கா மிடமான சுகஸ்தானத்தில் உச்சமடைய போகிறார்.

ஆண்டின் துவக்கத்தில் பஞ்சம ஸ்தானத்தில் கேது பகவானும் லாப ஸ்தானத்தில் ராகு பகவானும் நிற்கிறார்கள். 5.12.2026 அன்று ராகு பகவான் தொழில் ஸ்தானத்திற்கு செல்கிறார். கேது பகவான் சுக ஸ்தானத்திற்கும் சென்று குருவுடன் சேர்க்கை பெறுகிறார்.

பராபவ ஆண்டின் பொது பலன்கள்

சூரியன் உச்சமாகும் மேஷ ராசியில்பிறந்தவர்களுக்கு தன்னம்பிக்கை தைரியம் அதிகம் இருக்கும்.விதியின் மேல் நம்பிக்கை குறைவு. எது நடந்தாலும் பரவாயில்லை நான் பார்த்துக் கொள்கிறேன் என்ற கோட்பாடுடன் செயல்படுவார்கள்.

இதுவரையில் சந்தித்த மனசஞ்சலம் மற்றும் போராட்டமான வாழ்க்கை முடிவுக்கு வரும்.இந்த தமிழ் புத்தாண்டில் மேஷ ராசியினருக்கு 9,12ம் அதிபதியான குரு பகவான் சுகஸ்தானத்தில் உச்சம் பெறுவது மிக சிறப்பான வாழ்வியல் மாற்றத்தை ஏற்படுத்தித் தரக்கூடிய அமைப்பாகும்.

இதுவரை வாழ்வில் தடைபட்ட அனைத்து விதமான பாக்கிய பலன்களையும் அனுபவிப்பீர்கள்.திருமணம், குழந்தைபேறு வீடு, வாகன யோகம்,புதிய தங்க நகைகள் என உங்கள் வயதிற்கு ஏற்ற விருப்பங்கள் தேவைகள் நிறைவேறும்.

பெற்றோர்கள் பெரியோர்கள் முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். தாய் தந்தை வழி சொத்து கிடைப்பதில் நிலவிய தடை தாமதங்கள் அகலும். சுய உழைப்பிலும் சிறப்பான வீடு மனை வாகன யோகம் உண்டு. சிலருக்கு வெளியூர், வெளிநாட்டுக்கு சென்று குடியேறும் விருப்பம் அதிகரிக்கும். கற்றக்கல்வி பலன் தரும். மாணவர்கள் கல்வியில் தனித்திறமையுடன் திகழ்வார்கள்.

அரசியல்வாதிகளின் செல்வாக்கும் புகழும் உயரும். அரசியலில் தனித்தன்மையுடன் மிளிர்வார்கள். இந்த ஓராண்டு உங்களுக்கு ஒரு பொற்காலமாக அமையப் போவதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. போராட்டமாக இருந்த வாழ்க்கை பூ பூக்கும் நந்தவனமாகும். எதையெல்லாம் அடைய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அவற்றை பட்டியலிட்டு திட்டமிட்டு செயல்பட்டு ஆதாயம் அடைவீர்கள்.

ஆன்ம பலம் பெருகும். கடனால் பட்ட அவமானத்திலிருந்து மீள்வீர்கள். காலை சுற்றிய பாம்பாக இருந்த பிரச்சனைகள் இருந்த இடம் தெரியாது. தடைகள் தகரும். செயல்களில் வேகம் கூடும். அரசியல்வாதிகள் இந்த ஓராண்டுக்குள் இழந்த அரசியல் சாம்ராஜ்ஜியங்களையும் பொது மக்களின் ஆதரவையும் மீட்டுப் பெறுவீர்கள்.வெளிநாட்டிற்கு செல்லும் முயற்சி வெற்றிபெறும்.

புதிய தொழில், கூட்டுத் தொழில் முயற்சி வெற்றி தரும். வாழ்க்கைத் துணையுடன் நிலவிய கருத்து வேறுபாடு சீராகும். என் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உதவிட ஆள் இல்லையே என மனம் வருந்திய நிலை மாறும். நீங்கள் நாலு பேருக்கு உதவி செய்யும் படியாக உங்கள் வாழ்வாதாரம் உயரும்.சமுதாய அங்கீகாரம் அதிகமாகும்.

உங்கள் ஆலோசனைக்கு ஒரு கூட்டமே காத்து கிடக்கும்.ஒரு வருட காலத்தில் வாழ்கையில் திருப்புமுனையான பல நல்ல சம்பவங்கள் நடக்கப் போகிறது. பிரபலமானவர்களின் நட்பால் ஆதாயம் உண்டு.புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள், பதவிகள் தேடி வரலாம். வழக்குகளில் வெற்றி நிச்சயம்.

அசுவினி

மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனக் குழப்பம் விலகி தெளிவான மன நிலையுடன் சிந்தித்து செயல்படுவீர்கள். மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். சிறிய இடப்பெயர்ச்சி செய்ய நேரும். குடியிருக்கும் வீடு,தொழில் நடத்துமிடம் என ஏதாவது ஒரு இடமாற்றம் செய்ய நேரும்.வெளியூர், வெளிநாட்டில் இருப்பவர்கள் நான்கைந்து மாதங்கள் பூர்வீகம் வந்து செல்லலாம்.

பூர்வீகத்தில் இருப்பவர்கள் வேலை விஷயமாக குறுகிய காலம் வெளிநாடு சென்று வரலாம்.பல்வேறு சுப பலன்கள் தேடி வந்து கொண்டே இருக்கும். உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு நீங்கள் காணும் கனவுகள் பலிதமாகும் காலமாகும்.செவித்திறன் குறைதல், சீழ்வடிதல் போன்ற காது தொடர்பான பாதிப்புகள் குறையும்.

ஆவணங்கள் தொடர்பான சர்ச்சைக்கள் முடிவுக்கு வரும்.தொலைந்த ஆவணங்கள் மீண்டும் கிடைக்கும்.உயில் எழுத ஏற்ற காலம்.தந்தை, தந்தை வழி முன்னோர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாட்டை குறைப்பது நல்லது.

பரணி

செல்வாக்கு அதிகரிக்கும். நினைத்ததை சாதித்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு நிச்சயம் உண்டு.புதிய தொழில் முயற்சிகள் வெற்றி பெரும். இதுவரை உங்களுக்கு போட்டியாகவும் பகையாகவும் இருந்தவர்கள் உங்களின் திறமை தெரிந்து நட்பு பாராட்டலாம்.

நிதி நிறுவனங்கள் மூலம் தொழிலுக்கு தேவையான முதலீடுகள் கிடைக்கும்.கோவில் திருப்பணியில் ஈடுபடும் ஆர்வம் வரும். தான தர்மம் செய்து புண்ணிய பலனை கூட்டுவீர்கள்குடும்ப, குல கவுரவத்தை உயர்த்த ஆண் வாரிசு பிறக்கும்.

வீடு மாற்றம், ஊர் மாற்றம். நாடு மாற்றம் என அவரவர் வயதிற்கு தகுந்த நல்ல சுபமான மாற்றங்கள் நடக்கும். பெரிய மனிதர்களின் ஆசி கிட்டும். உயர் கல்வி முயற்சி வெற்றியாகும்.

நீண்ட நாள் வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். தடைபட்ட குலதெய்வ வழிபாடு தொடரும். சித்தர்கள் மற்றும் ஆன்மீக குருமார்களின் நல் ஆசி கிடைக்கும். ஆன்மீக சுற்றுலா செல்லும் வாய்ப்பு ஏற்படும்.

கிருத்திகை 1

மன நிறைவும், நிம்மதியும் ஏற்படும். உங்களின் தனித் திறமை வெளிஉலகத்திற்கு தெரிய வரும். எண்ணிய எண்ணம் பலிதமாகும். செய்யும் வேலைகளை தெளிவான மனநிலையோடு விரைவாக செய்து முடிக்க குருபகவான் உங்களுக்கு ஆசி வழங்குவார்.

பொது நலமான சிந்தனை தோன்றி அதன் படி செயல்பட்டு நற்பெயர் பெறுவீர்கள். சமூகத்தில் மதிப்பு மரியாதை ஏற்படும்.நீண்ட நாட்களாக என்னவென்றே தெரியாத நோய் தாக்கம் இருப்பவர்களுக்கு எந்த வைத்தியம் செய்தால் நோய் பூரணமாக குணமாகும் என்ற புரிதல் ஏற்படும்.

உடலும், மனமும் புத்துணர்வு பெறும். முன்னேற்றத்திற்கான வழி பிறக்கும்.புதிய சிந்தனைகள் உதயமாகும். உழைப்பிற்கான உண்மையான பலனை அறுவடை செய்வீர்கள்.பணியிட மாற்றம் கிடைக்கும்.உபரி வருமானங்கள் அதிகம் கிடைக்கும். ஐஸ்வர்யம் பெருகும். ஏழரை சனியின் காலம் என்பதால் கடன், ஆரோக்கியம் போன்றவற்றில் கவனம் தேவை.

திருமணம்

ஒருவரின் ஜாதகத்தில் எந்த விதமான குறைபாடுகள் இருந்தாலும் ஏழரைச் சனியின் காலத்தில் சுய ஜாதக ரீதியான குறைகள் விலகி திருமண வாய்ப்புகள் தேடி வரும்.காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிப்பார்கள். எட்டாம் இடத்திற்கு குரு பார்வை கிடைப்பதால் பெண்களுக்கு மாங்கல்ய தோஷமாக என்று நல்ல மண வாழ்க்கை அமையும்.

பொருளாதாரம்

ராசிக்கு நான்காம் இடமான சுகஸ்தானத்தில் டிசம்பர் முதல் குரு கேது சம்பந்தம் ஏற்பட போகிறது. தெருக்கோடியில் ஐந்திற்கும், பத்திற்கும் அல்லாடிய நிலை மாறப்போகிறது. தனவரவு இரட்டிப்பாகும். செலவுகள் குறையும்.

சேமிப்பு உயரும். பங்குச்சந்தை முதலீடுகள் பல மடங்கு லாபத்தை பெருக்கித்தரும். அதிர்ஷ்டம் பேரதிர்ஷ்டமாகும்.இது விரயச் சனியின் காலம் என்பதால்உடன் பிறந்த சகோதர, சகோதரிகளின் வாழ்வில் ஏற்படும் கடனுக்கு அல்லது குடும்பத்திற்கு நீங்கள் பணம் செலவு செய்ய நேரும். அவர்களின் சுமை தாங்கியாக இருக்க வேண்டிய காலம்

பெண்கள்

குடும்பத்திற்காக சளைக்காமல் உழைத்த பெண்களுக்கு இது வரை குண்டு மணி தங்கம் இல்லாத பெண்களுக்கும் நகை சேரும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உள்ளது.

சுப செலவுகள் அதிகரிக்கும்.ஆன்மீக பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். கருப்பை நோய் பாதிப்பு குறையும் . குடும்ப உறுப்பினர்களின் செய்கையால் ஏற்பட்ட மன உளைச்சல் சீராகும்.

பரிகாரம்

செவ்வாய்க்கிழமைகளில் சிகப்பு அரளிமாலை அணிவித்து முருகனை வழிபடுவதாலும் கந்த சஷ்டி கவசம் கேட்பதாலும் நன்மைகள் அதிகரிக்கும்.