search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெர்சல் திரைப்படத்திற்கு ராகுல் காந்தி ஆதரவு: மோடியின் பெயரை குறிப்பிட்டு டுவிட்டரில் கருத்து
    X

    மெர்சல் திரைப்படத்திற்கு ராகுல் காந்தி ஆதரவு: மோடியின் பெயரை குறிப்பிட்டு டுவிட்டரில் கருத்து

    விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் மெர்சல் படத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    தீபாவளியன்று வெளியான நடிகர் விஜய் நடித்த ‘மெர்சல்’ படம் அரசியல் வசனங்களால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் படத்தில் மருத்துவர்களின் செயல்பாடுகளை கடுமையாக விஜய் சாடுகிறார். மத்திய அரசின் பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. வரி, டிஜிட்டல் மயம் ஆகியவற்றின் பாதிப்பும் படத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

    ஏரி-குளங்கள் வீட்டு மனைகளாக மாறி வருவது, மழை நீரை சேமிக்க தவறுவது, வியாபாரமாகி வரும் கல்வி, இலவசங்கள் என மாநிலத்தின் அவலங்களையும் மெர்சல் படத்தில் எடுத்து கூறியிருக்கிறார்கள்.

    மொத்தத்தில் இது விஜய்-யின் அரசியல் படமாக அமைந்திருப்பதாக ரசிகர்கள் கருதுகிறார்கள். ஆனால், மத்திய அரசை குறை கூறியிருப்பதற்காக நடிகர் விஜய்க்கு பா.ஜனதாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. விஜய்யை தாக்கி கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

    மெர்சல் படத்தை பா.ஜனதா அரசியலாக்கி இருப்பதால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி மெர்சல் பட கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

    முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு ஆகியோரைத் தொடர்ந்து கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் மெர்சல் படத்திற்கு ஆதரவாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.



    ‘மிஸ்டர் மோடி, திரைப்படம் என்பது தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழியின் ஆழமான வெளிப்பாடு ஆகும். மெர்சல் படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலம் தமிழின் பெருமையை மதிப்பிழக்கச் செய்யாதீர்கள்’ என ராகுல் டுவிட் செய்துள்ளார்.

    Next Story
    ×