search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் நாளை 3 மாநில எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் ஆதரவு திரட்டும் ராம்நாத் கோவிந்த்
    X

    சென்னையில் நாளை 3 மாநில எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் ஆதரவு திரட்டும் ராம்நாத் கோவிந்த்

    ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிடும் ராம்நாத் கோவிந்த் ஆதரவு திரட்டுவதற்காக நாளை சென்னை வருகிறார். அப்போது 3 மாநில எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் ஆதரவு திரட்டுகிறார்.
    சென்னை:

    ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிடும் ராம்நாத் கோவிந்த் ஆதரவு திரட்டுவதற்காக நாளை சென்னை வருகிறார்.

    பகல் 12 மணியளவில் சென்னை வரும் அவருக்கு விமான நிலையத்தில் பா.ஜனதா சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    சென்னை பயணத்தில் 3 மாநில எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் ஆதரவு திரட்ட திட்டமிட்டுள்ளார்.

    அதன்படி முதலில் மாலை 3 மணியளவில் ஐ.டி.சி. ஓட்டலில் புதுவை மாநில என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி மற்றும் எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.

    கேரளாவில் பா.ஜனதாவுக்கு ஒரே ஒரு எம்.பி. ஓ.ராஜகோபால். அவரும் சென்னைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

    அ.தி.மு.க.வின் இரு அணிகளுமே பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்து விட்டன. எனவே இரு அணியினரையும் தனித்தனியாக சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


    ரஷிய கலாச்சார மையத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியினரை சந்திக்கிறார். இதில் அவரது ஆதரவு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கலந்து கொள்கிறார்கள்.

    அதையடுத்து கலைவாணர் அரங்கில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியினரை சந்திக்கிறார். இதில் எடப்பாடி ஆதரவு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த நிகழ்வுகளில் மத்திய மந்திரிகள் ஜெ.பி.நட்டா, பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜனதா தேசிய செயலாளர் முரளிதரராவ், தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

    தமிழக சுற்றுப்பயணத்தை முடித்த பிறகு 4-ந் தேதி ஆந்திர மாநிலம் விஜயவாடா, தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஆகிய நகரங்களில் அந்த மாநில எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் ஆதரவு திரட்டுகிறார்.

    இதில் மத்திய மந்திரிகள் அருண்ஜெட்லி, வெங்கையா நாயுடு ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். ஆந்திர மாநிலங்களை ஆளும் தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி மற்றும் எதிர்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    தென்மாநில சுற்றுப்பயணத்தை 5-ந் தேதி கர்நாடக மாநிலம் பெங்களூரில் நிறைவு செய்கிறார். அங்கு மத்திய மந்திரிகள் அனந்தகுமார், தாவர்சந்த் கெலாட், பா.ஜனதா பொது செயலளர் சரோஜ்பாண்டே ஆகியோருடன் அந்த மாநில எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் ஆதரவு திரட்டுகிறார்.

    அதை தொடர்ந்து 6 மற்றும் 7-ந் தேதிகளில் வடகிழக்கு மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டுகிறார்.
    Next Story
    ×