

2030ஆம் ஆண்டுக்குள் ஏஐ காரணமாக மனித குலம் அழியும் என்ற கூற்று குறித்து என்விடியா நிறுவன சிஇஓ ஜென்சன் ஜுவாங் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு குறித்த கவலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சக்திவாய்ந்த ஏஐ அமைப்புகள் கட்டுப்பாட்டை மீறினால், அவை மனிதகுலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்று அஞ்சப்படுகிறது.
2030க்குள் ஏஐ தொழில்நுட்பத்தால் மனித குலமே அழியும் பேராபத்து இருப்பதாக கூறி, கிளாட் ஏஐ செயலியை நிர்வகிக்கும் ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் ஆய்வாளர் ஜேக்கப் கோக்சோன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
எனவே 2030ஆம் ஆண்டுக்குள் ஏஐ காரணமாக மனித குலம் அழியும் எனவு பலர் கூறத்தொடங்கியுள்ளனர்.
ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என என்விடியா தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங் தெரிவித்துள்ளார்.
சிபிஎஸ் நியூஸ் உடனான சமீபத்திய நேர்காணலில் அத்தகைய பேரழிவு ஏற்படுவதற்கு எந்த சாத்தியமும் இல்லை என்று ஹுவாங் தெரிவித்தார்.
ஏஐ காரணமாக உலகம் அழியும் என்ற வாதம் அர்த்தமற்றது. சிலர் விடுத்து வரும் எச்சரிக்கைகளுக்குப் பின்னால் அரசியல், வணிக நலன்கள் அல்லது பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கம் இருக்கலாம் என அவர் தெரிவித்தார்.
மாறாக நிறுவனங்கள் ஏஐயின் வளர்ச்சியை விரைவுபடுத்த வேண்டும் என்று ஹுவாங் அழைப்பு விடுத்துள்ளார்.
இருப்பினும், பாதுகாப்பின் அடிப்படையில் அவர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.
முழுமையாகத் தயாராகாத மற்றும் பாதுகாப்பற்ற ஏஐ மாடல்கள் சந்தைக்குக் கொண்டுவரப்படக்கூடாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஏஐ வளர்ச்சியின் வேகம் குறைக்கப்பட வேண்டும் என ஓபன்ஏஐ தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் மற்றும் ஆந்த்ரோபிக் தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடி உள்ளிட்டோர் கருத்து தெரிவித்த நிலையில் என்விடியா தலைவரின் கருத்து வந்துள்ளது.
செயற்கை நுண்ணறிவைப் புரிந்துகொள்வதற்கும் ஒழுங்குபடுத்துவதற்குமான முயற்சிகளை, அதன் வளர்ச்சி வேகம் மிஞ்சிவிடக்கூடும் என்று அமோடி எச்சரித்ததை தொடர்ந்து இந்த விவாதம் எழுந்துள்ளது.
ஏஐ வளர்ச்சி வேகத்தை குறைத்தால் அது சீனாவுக்கு சாதகமாகிவிடும் எனக் கூறிய டிரம்ப் அமோடியை கண்டித்ததும் குறிப்பிடத்தக்கது.
செயற்கை நுண்ணறிவு குறித்து புதிய சட்டங்கள் தேவையில்லை என ஹுவாங் இதற்கு முன்னர் வாதிட்டிருந்தார்.
பாதுகாப்பானது, தனிப்பட்ட நிறுவனங்களின் பொறுப்பாகக் கருதப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியானது, மனிதகுலத்திற்குப் பயனளிக்கும் வகையிலும் மனிதக் கட்டுப்பாட்டின் கீழும் செய்யப்பட வேண்டும் என்று மைக்ரோசாப்ட் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதெல்லா சமீபத்தில் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.