

GTA 6 சுமார் 2.36 பில்லியன் டாலர் வருவாயை ஈட்டியுள்ளது.
13 வருடக் காத்திருப்புக்குப் பின் கடந்த வியாழக்கிழமை கிராண்ட் தெப்ட் ஆட்டோ 6 (GTA 6) வீடியோ கேம் வெளியானது.
சென்சார் டவர் அறிக்கைபடி, GTA 6 முன்பதிவுகள் மற்றும் முதல் நாள் விற்பனை மொத்தம் 24.5 மில்லியனுக்கும் அதிகமான யூனிட்களை எட்டி, சுமார் 2.36 பில்லியன் டாலர் (ரூ. 21,952 கோடி) வருவாயை ஈட்டியுள்ளது.
இந்த ஆண்டு உலகளவில் அதிக வசூல் செய்த திரைப்படமான 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே', திரையரங்குகளில் ஓடியவரை செய்த மொத வசூலே 2.5 பில்லியன் டாலர் தான்.
ஆனால் வெளியான முதல் நாளிலேயே இந்த ஓப்பன் வேர்ல்ட் ஆக்ஷன் அட்வென்ச்சர் வீடியோ கேம் அந்த சாதனையை நெருங்கியது.
GTA 6ஐ உருவாக்கிய ராக்ஸ்டார் நிறுவனமும் அதன் தாய் நிறுவனமான டேக் டூவும், விற்பனை விவரங்களை இன்னும் வெளியிடவில்லை.
ஆனால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஆர்டர்கள் வந்தவண்ணம் உள்ளதாக கூறியுள்ளன.
இது வரலாற்றிலேயே மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றாக மாறியுள்ளது.
புளோரிடாவை தழுவி உருவாக்கப்பட்ட லியோனிடா மாகாணத்தின் குற்றவாளிகளை கதாபாத்திரங்களாக கொண்டு இதன் கதை நகர்கிறது.
லூசியா மற்றும் அவளது கூட்டாளியான ஜேசன் ஆகிய இருவரே முதன்மை கதாபாத்திரம் ஆவர்.
GTA 6ஐ உருவாக்க 1 பில்லியன் டாலருக்கும் அதிகமாக செலவாகியிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவே வரலாற்றிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடியோ கேம் என்ற பெருமையை பெற்றுத் தந்துள்ளது.
ஜிடிஏ 6 மிகவும் பிரபலமடைவதால், மற்ற சிங்கிள் பிளேயர் கேம்களில் கேமர்கள் செலவிடும் நேரத்தை 10% குறைக்கும் என்று சென்சார் டவர் கூறியுள்ளது.
விளையாட்டின் விற்பனையில் சுமார் முக்கால் பங்கு பிளேஸ்டேஷன் 5 இலும், மீதமுள்ளவை எக்ஸ்பாக்ஸிலும் நடந்துள்ளதாக சென்சார் டவர் தெரிவித்துள்ளது.
கேமிங் சந்தை ஆராய்ச்சி நிறுவனமான நிக்கோ பார்ட்னர்ஸ், இந்த ஆண்டு ஜிடிஏ 6 உலகளவில் 3 பில்லியன் டாலருக்கும் அதிகமான விற்பனையை எட்டும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.
வரும் ஆண்டுகளில் GTA 6 மூலம் ராக்ஸ்டார் நிறுவனம் இன்னும் அதிக பணம் சம்பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
GTA 6, இதுவரை இல்லாத மிக அற்புதமான கேமிங் அனுபவங்களில் ஒன்றாக பாராட்டப்பட்டுள்ளது.
இந்த விளையாட்டின் வன்முறைக் காட்சிகள் ஜப்பானில் தணிக்கைக்கு உள்ளாகியுள்ளன. முந்தைய GTA வெளியீடுகளை போலவே, இதுவும் சீனாவில் விற்பனைக்கு அங்கீகரிக்கப்படவில்லை.