

மைக்ரோசாப்ட் சேவைகள் செயலிழப்பு குறித்து சத்யா நாதெல்லா வருத்தம் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஏற்பட்ட மாபெரும் தொழில்நுட்ப முடக்கம் உலகம் முழுவதும் உள்ள டிஜிட்டல் சேவைகளை முற்றிலுமாக ஸ்தம்பிக்கச் செய்தது.
அவுட்லுக்கில் தொடங்கிய இந்தச் செயலிழப்பு, படிப்படியாக டீம்ஸ், கோபைலட், மைக்ரோசாப்ட் 365, ஷேர்பாயிண்ட் மற்றும் ஒன்டிரைவ் போன்ற அனைத்து முக்கிய சேவைகளுக்கும் பரவியது. சுமார் 430 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
மின்னஞ்சல் மற்றும் உள்நாட்டுத் தொடர்புகள் முற்றிலும் முடங்கியதால், பல்வேறு நாடுகளின் அரசுகளும் வர்த்தக நிறுவனங்களும் பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளன.
இந்நிலையில் இந்த இடையூறு குறித்து மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரச்சினையை தடுப்பதில் நிறுவனம் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்க வேண்டும் என்று அவர் ஒப்புக்கொண்டார்.
சிஎன்பிசி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், மென்பொருளில் inactive ஆக இருந்த ஒரு bug, குறிப்பிட்ட அளவு பயனர் போக்குவரத்தை எதிர்கொண்டபோது திடீரென கணினியை செயலிழக்கச் செய்ததாக அவர் குறிப்பிட்டார்.
சோதனை செயல்பாட்டின் போது இதுபோன்ற குறைபாடுகளை கண்டறிய நிறுவனம் தவறிவிட்டதாகவும், ஒரு சிறிய குறைபாடு உலகளவில் பாதிப்பை ஏற்படுத்துவதை தவிரக்க வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் நாதெல்லா ஒப்புக்கொண்டார்.
இந்த நிகழ்வு, ஒட்டுமொத்த தொழில்நுட்பத் துறையும் எதிர்கொள்ளும் ஒரு பரந்த சவாலைப் பிரதிபலிக்கிறது என்று நாதெல்லா குறிப்பிட்டார்
"செயற்கை நுண்ணறிவு, மென்பொருள் உருவாக்கம் மற்றும் Bug கண்டறிதலை வேகப்படுத்தியிருந்தாலும், பழைய தொழில்நுட்பங்களில் அப்டேட்களை அவசரமாக மேற்கொள்வது செயல்பாடுகளில் சிக்கலுக்கு வழிவகுக்கும்.
பழைய அமைப்புகளால் புதிய அப்டேட்களை தாங்க முடியாததால் இதுபோன்ற எதிர்பாராத சிக்கல்கள் எழுகின்றன" என்று அவர் மேலும் கூறினார்.