மைக்ரோசாஃப்ட் முடக்கம்: பெருநிறுவனங்களை சார்ந்திருப்பதால் உலக பொருளாதாரத்திற்கு ஏற்படும் பெரும் ஆபத்துகள்!

வழக்கமாக டேட்டா சென்டர்கள் உலகெங்கிலும் உள்ள கணினிகள் மூலம் பயனர் கோரிக்கைகளின் சுமையைப் பகிர்ந்துகொள்ளும்.
Microsoft Outage
Published on: 
Summary

சேவை வழங்கத் தவறியதற்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு நாளொன்றுக்கு 800 மில்லியன் அமெரிக்க டாலர் வரை ஒப்பந்தத் தொகை மற்றும் பெருத்த நற்பெயர் இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

கடந்த வாரம் மைக்ரோசாஃப் நிறுவனத்தில் ஏற்பட்ட மாபெரும் தொழில்நுட்ப முடக்கம் உலகம் முழுவதும் உள்ள டிஜிட்டல் சேவைகளை முற்றிலுமாக ஸ்தம்பிக்கச் செய்தது. அவுட்லுக், டிம்ஸ் மற்றும் கோபிலட் உள்ளிட்ட மிக முக்கியமான சேவைகள் பாதிக்கப்பட்டு, சுமார் 430 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மின்னஞ்சல் மற்றும் உள்நாட்டுத் தொடர்புகள் முற்றிலும் முடங்கியதால், பல்வேறு நாடுகளின் அரசுகளும் வர்த்தக நிறுவனங்களும் பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளன. சேவை வழங்கத் தவறியதற்காக மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு நாளொன்றுக்கு 800 மில்லியன் அமெரிக்க டாலர் வரை ஒப்பந்தத் தொகை மற்றும் பெருத்த நற்பெயர் இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

ஒட்டுமொத்த நெட்வொர்க் சரிவு

வழக்கமாக டேட்டா சென்டர்கள் உலகெங்கிலும் உள்ள கணினிகள் மூலம் பயனர் கோரிக்கைகளின் சுமையைப் பகிர்ந்துகொள்ளும். ஆனால், அண்மையில் செய்யப்பட்ட ஒரு சிறிய கட்டமைப்பு மாற்றத்தால் மைக்ரோசாஃப்ட் தனது சில கணினிகளின் மீதான கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சுமையைப் பகிர்ந்துகொள்ள முடியாத கணினிகள் பயனர் கோரிக்கைகளை மற்ற அமைப்புகளின் மீது திணித்ததால் ஒட்டுமொத்த நெட்வொர்க்கும் செயலிழந்தது. இதற்கிடையே, துண்டிக்கப்பட்ட தொலைபேசிகள், மின்னஞ்சல் செயலிகள் மற்றும் வர்த்தக அமைப்புகள் அனைத்தும் ஒரே நேரத்தில் மீண்டும் இணைக்க முயன்றது நிலைமையை மேலும் மோசமாக்கியது.

அதிகார குவிப்பு

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மென்பொருள் என்பது ஒருமுறை வாங்கும் பொருளாக இருந்தது, இதனால் நுகர்வோரிடம் அதிகாரம் இருந்தது. ஆனால், தொலைத்தொடர்பு மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளைப் பின்பற்றி மென்பொருள் நிறுவனங்கள் வாடகை முறைக்கு மாறியதால் நிலைமை மாறியது. பயனர்கள் தங்களுக்குத் தேவையான அம்சங்களை வாங்குவதற்குப் பதிலாக, தங்கள் ஒட்டுமொத்த இயக்கக் கருவிகளையும் மென்பொருள் சேவை வழங்குநர்களிடம் ஒப்படைத்துவிட்டனர். 2008-ஆம் ஆண்டு உலகப் பொருளாதார நெருக்கடியின்போது வங்கிகள் "தோல்வியடைய முடியாத அளவுக்கு பெரியவை" என்று கருதப்பட்டதை போலவே, தற்போது முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களும் அதே நிலையை எட்டியுள்ளன.

டிஜிட்டல் இறையாண்மை

இணையத்தில் நடக்கும் பெரும்பாலான செயல்பாடுகள் கூகுள், மைக்ரோசாஃப்ட், மெட்டா, அமேசான் மற்றும் கிரவுட்ஸ்ட்ரைக் போன்ற ஒரு சில நிறுவனங்களையே சார்ந்துள்ளன. இந்தத் தொழில்நுட்பப் பெருநிறுவனங்கள் தோல்வியடையும் போது, அவை அரசுகளின் பிணையெடுப்பைக் கோருவதில்லை. மாறாக, ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரமும் அந்தச் சரிவுக்கான விலையைக் கொடுக்க வேண்டியுள்ளது. இந்த ஆபத்தைத் தவிர்க்க ஐரோப்பிய நாடுகள் பரவலாக்கப்பட்ட கிளவுட் உள்கட்டமைப்புகளையும் உள்ளூர் மென்பொருட்களையும் தீவிரமாக ஆதரித்து வருகின்றன. அமெரிக்கத் தொழில்நுட்பச் சரிவுகள் உள்ளூர் மருத்துவமனைகளையோ அல்லது அவசரகால சேவைகளோ பாதிக்காத வண்ணம் உலக நாடுகள் டிஜிட்டல் இறையாண்மையை வளர்த்துக்கொள்வது காலத்தின் கட்டாயமாகும்.

X