ஆசிய விளையாட்டில் மகளிர் கிரிக்கெட் நாளை தொடக்கம்: இந்தியா- ஜப்பான் கால் இறுதியில் மோதல்

இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது.
Indian Womens Team
Published on

20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானில் உள்ள அய்சி - நகோயா நகரில் வருகிற 19-ந்தேதி முதல் அக்டோபர் 4-ந் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 43 விளையாட்டுகள் 71 வகையில் 469 பிரிவில் நடைபெறுகிறது.

மகளிர் கிரிக்கெட் நாளை தொடக்கம்

ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிர் கிரிக்கெட் நாளை (17- ந் தேதி) தொடங்குகிறது. 20 ஓவருக்கான இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம், மலேசியா, சீனா, ஜப்பான், தாய்லாந்து ஆகிய 8 நாடுகள் பங்கேற்கின்றன.

நாக் அவுட் முறையில் போட்டி நடத்தப்படுகிறது. நேரடியாக கால் இறுதி தொடங்குகிறது.

இந்தியா-ஜப்பான்

ஹர்மன்பிரீத் கவூர் தலைமையிலான இந்திய அணி கால் இறுதியில் ஜப்பானை எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது.

இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்புதான் ஆசிய கோப்பையை கைப்பற்றியது. இதனால் ஆசிய விளையாட்டில் தங்க பதக்கம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2022-ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கம் வென்றது. தற்போது சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ளும் ஆர்வத்தில் உள்ளது.

ஆசிய கோப்பை போட்டியில் ஷபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, ஸ்ரீசரணி, திப்தி சர்மா சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி இருந்தனர்.

இலங்கை- மலேசியா

நாளை அதிகாலை 5.30 மணிக்கு நடைபெறும் கால் இறுதியில் இலங்கை-மலேசியா அணிகள் மோதுகின்றன. நாளை மறுநாள் (18-ந் தேதி) நடைபெறும் கால் இறுதி ஆட்டங்களில் சீனா- வங்காளதேசம், பாகிஸ்தான்- தாய்லாந்து அணிகள் மோதுகின்றன. 20-ந்தேதி அரை இறுதி போட்டியும், 22-ந்தேதி இறுதிப் போட்டியும் நடக்கிறது.

ஆண்கள் பிரிவு

ஆண்கள் பிரிவு கிரிக்கெட் 24-ந்தேதி தொடங்குகிறது. கடந்த ஆசிய விளையாட்டில் இந்திய அணி தங்கம் வென்று இருந்தது.

ஷ்ரேயஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணி நேரடியாக கால் இறுதியில் விளையாடுகிறது. 28-ந்தேதி இந்திய அணி ஆடுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com