

முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் சென்னை ஓபன் பெண்கள் டென்னிஸ் போட்டி இன்று தொடங்குகிறது.
3-வது சென்னை ஓபன் சர்வதேச பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 8-ந்தேதி வரை நடக்கிறது.
250 தரவரிசை புள்ளிகளை வழங்கும் இந்த போட்டியில் ஒற்றையர் பிரிவில் 32 வீராங்கனைகளும், இரட்டையர் பிரிவில் 16 ஜோடிகளும் இடம் பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் இணைந்து நடத்தும் இந்த போட்டியை வெற்றிகரமாக நடத்துவதற்கு தமிழக அரசு ரூ.10 கோடி நிதியுதவி அளித்துள்ளது.
போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.2.69 கோடியாகும். ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்லும் வீராங்கனைக்கு ரூ.35½ லட்சமும், இரட்டையர் பிரிவில் வாகை சூடும் ஜோடிக்கு ரூ.13 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.
இந்த டென்னிஸ் திருவிழாவில் உலக தரவரிசையில் 47-வது இடம் வகிக்கும் ஜேனிஸ் டிஜென் (இந்தோனேசியா), மேக்டா லினெட் (போலந்து), கேதர்ஜினா காவா (போலந்து), பன்னா உத்வர்த்தி (ஹங்கேரி), போலினா குடெர்மித்தோவா (உஸ்பெகிஸ்தான்). ஜில் டைச் மேன் (சுவிட்சர்லாந்து), சவாங்காவ் (தாய்லாந்து), லின்டா புருவிர்தோவா (செக்குடியரசு), அனஸ்டசியா ஜகரோவா (ரஷியா) உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
நடப்பு சாம்பியனும், போட்டித் தரநிலையில் முதலிடம் வகிப்பவருமான ஜேனிஸ் டிஜென் தனது முதல் சுற்றில் 'வைல்டு கார்டு' வீராங்கனை அமெரிக்காவின் கேத்ரின் ஹயை எதிர்கொள்கிறார்.
இந்திய தரப்பில் ஒற்றையர் பிரிவில் மாயா ரேவதி, வைஷ்ணவி அத்கர், சஹஜா யமலாபள்ளி ஆகியோருக்கு நேரடியாக பிரதான சுற்றில் களம்காணும் வகையில் 'வைல்டு கார்டு' சலுகை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த மாயா முதல் சுற்றில் போலந்தின் கேதர்ஜினா காவாவுடன் மல்லுக்கட்டுகிறார்.
இதேபோல் இரட்டையரில் மாயா, சக நாட்டவரான ஸ்ரீவள்ளி பாமிதிபதியுடன் ஜோடி சேருகிறார். மற்றொரு இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா, ஜப்பானின் ஹிரோகோ குவாட்டாவுடன் கைகோர்த்துள்ளார். உள்ளூர் வீராங்கனைகள் என்பதால் இவர்கள் மீது மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
முதல் நாளான இன்று போட்டிகள் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி நடைபெறும். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி சென்னையில் நடக்க இருப்பது இதுவே கடைசி முறையாகும். 2027-ம் ஆண்டில் இந்த போட்டி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவுக்கு மாற்றப்பட உள்ளது.
அக்டோபர்- நவம்பர் மாதங்களில் சென்னையில் பருவமழை காலம் என்பதால் அதை நடத்துவதில் பெரும் சவால்கள் உள்ளன. அத்துடன் பிலிப்பைன்சில் அலெக்சாண்ட்ரா ஈலாவின் வருகைக்கு பிறகு அங்கு டென்னிசுக்கு வரவேற்பு அதிகரித்து உள்ளது. இத்தகைய காரணங்களால் பெண்கள் டென்னிஸ் சங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.