

தமிழக வீரரின் இந்த வரலாற்று சாதனையைப் பாராட்டி முதலமைச்சர் விஜய் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.
ஜப்பானில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026-இல், ஸ்குவாஷ் விளையாட்டின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழகத்தைசேர்ந்த வீரர் அபய் சிங்கிற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில், மலேசியாவின் முன்னணி வீரரான இன்க் எயின் யோவை எதிர்கொண்ட அபய் சிங், கடுமையாகப் போராடி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஒற்றையர் ஸ்குவாஷ் பிரிவில் இந்தியாவுக்குக் கிடைக்கும் மிக முக்கியப் பதக்கங்களில் ஒன்றாக இது அமைந்துள்ளது.
தமிழக வீரரின் இந்த வரலாற்று சாதனையைப் பாராட்டி முதலமைச்சர் விஜய் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், "ஜப்பானில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்குவாஷ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள நமது தமிழ்நாட்டின் ஸ்குவாஷ் வீரர் அபய் சிங் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது சிறப்பான சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும். ஸ்குவாஷ் வீரர் அபய் சிங் அவர்களின் இவ்வெற்றி, தமிழ்நாட்டின் இளம் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்குப் புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த 28 வயதான அபய் சிங், சர்வதேச அளவில் ஏற்கனவே பல பதக்கங்களை வென்று நாட்டின் முன்னணி ஸ்குவாஷ் வீரராகத் திகழ்ந்து வருகிறார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் அவர் வென்றுள்ள இந்த வெள்ளிப் பதக்கத்திற்குப் பல்வேறு விளையாட்டு அமைப்புகளும், தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களும், அரசியல் தலைவர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.