

2027 ஐ.பி.எல். சீசனுக்கான மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந் தேதி கோவாவில் நடைபெறுகிறது.
இதற்கான வீரர்கள் தக்கவைப்பு விவரங்களை வருகிற 17-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று 10 அணிகளுக்கும் ஐ.பி.எல். நிர்வாகம் காலக்கெடு விதித்துள்ளது. 15-ந் தேதி என்று முன்பு இருந்ததை மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
வீரர்களுக்கான பரிமாற்ற வர்த்தக பேச்சுவார்த்தையில் அணிகள் ஈடுபட்டு வருகின்றன.
கடந்த ஜூன் மாதம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு மாற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் லக்னோ அணிக்கு சென்றார்.
மேலும், டெல்லி கேபிடல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக சன்ரைசர்ஸ் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் ஜீஷன் அன்சாரி டெல்லி அணியில் இணைந்தார்.
இதேபோல சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்த கலீல் அகமது, நாதன் எல்லீஸ் ஆகியோர் ஐதராபாத் அணிக்கு பரிமாற்றம் செய்யப்பட்டனர். அதற்கு பதிலாக அங்கிருந்து லிவிங்ஸ்டன், எட்வர்ட்ஸ் ஆகியோர் சி.எஸ்.கே. அணிக்கு மாறியுள்ளனர்.
2028-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிக்கு அனைத்து அணிகளும் பெரும்பாலான வீரர்களை மாற்றம் செய்யும். இதற்கான மெகா ஏலம் அடுத்த ஆண்டு டிசம்பரில் நடைபெறும்.
இந்த நிலையில் மெகா ஏலத்துக்கு முன்பாக அணிகள் தக்க வைத்துக் கொள்ள ரூ.40 கோடி கட்டணமாக முன்னணி வீரர்கள் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குறைந்தது 2 நட்சத்திர வீரர்கள் தங்களது அணிகளிடம் இந்த தொகையை கேட்டுள்ளதாக அந்த தகவல் தெரிவிக்கிறது. ஐ.பி.எல் வரலாற்றில் ரூ.40 கோடி சம்பளம் என்பது பிரமிக்க வைப்பதாகும்.
2025 ஏலத்தில் ரிஷப் பண்டை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ரூ.27 கோடிக்கு வாங்கியது. இதுவே ஒரு உரிமையாளர் செலுத்திய அதிகபட்ச தொகையாகும். அதற்கு அடுத்தபடியாக ஸ்ரேயாஸ் அய்யர் ரூ.26.75 கோடிக்கு ஏலம் போனார்.
தற்போது ஐ.பி.எல். அணிகள் ரூ. 120 கோடி வரை செலவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மெகா ஏலத்திற்கான அணிகளின் மொத்த பட்ஜெட் ரூ.150 கோடியாக அதிகரிக்கப்படுகிறது.