

இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்கள் வீராட் கோலி, ரோகித் சர்மா. டெஸ்ட் மற்றும் 20 ஓவர் ஆட்டத்திலும் ஓய்வு பெற்ற அவர்கள் ஒருநாள் போட்டியில மட்டுமே விளையாடி வருகிறார்கள்.
2027-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் விளையாடுவதை இருவரும் இலக்காக கொண்டுள்ளனர். 50 ஓவருக்கான இந்த உலக கோப்பைபோட்டி அக்டோபர் 2-ந் தேதி முதல் நவம்பர் 21-ந் தேதி வரை தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியாவில் நடக்கிறது.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக சமீபத்தில் நடந்த ஒருநாள் தொடரின்போது இருவரும் சதம் அடித்து சாதித்தனர். திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் வீராட்கோலி 139 ரன்னும், கவுகாத்தியில் நடைபெற்ற 2-வது போட்டியில் ரோகித் சர்மா 101 ரன்னும் எடுத்த னர். அதோடு சண்டிகரில் நடந்த 3-வது போட்டியில் ரோகித் சர்மா 92 ரன்னும் எடுத்தார்.
உலக கோப்பையின்போது வீராட் கோலிக்கு 39 வயதாகவும், ரோகித் சர்மாவுக்கு 40 வயதாகவும் இருக்கும்.
இந்தநிலையில் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் மூத்த வீரர்களான வீராட்கோலி, ரோகித்சர்மா ஆகியோர் இடம் பெறுவார்களா? என்பது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் மிதுன்மன்ஹாஸ் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
2027 உலக கோப்பை போட்டிக்கான அணி தேர்வுக்கு உடல் தகுதி மற்றும் செயல்திறனே அளவு கோளாக இருக்கும். வயது ஒரு பெரிய பிரச்சினை கிடையாது.
கிரிக்கெட் வாரியத்தை பொறுத்தவரை இது குறித்து கருத்து கூறும் நிலையில் நாங்கள் இல்லை. ஏனென்றால் இது முழுக்க முழுக்க தேர்வு குழுவினர் மற்றும் பயிற்சியாளர்கள் சார்ந்த விஷயம்.
ஆனால் எனது பார்வையில் ஒருவரை தேர்ந்து எடுப்பதற்கு உடல் தகுதியும், திறமையும் அளவு கோளாக இருக்க வேண்டுமே தவிர நிச்சயமாக வயது ஒரு காரணமாக இருக்கக் கூடாது.
விராட், ஹர்திக் , ரோகித் ஆகியோர் அணியில் இருப்பது கேப்டன் சுப்மன் கில்லுக்கு பொறுப்புகளை கையாள்வதில் நிச்சயமாக உதவும்.
மேலும், பும்ரா போன்றவர்கள் பந்துவீச்சு பிரிவை வழிநடத்த துணையாக இருக்கும். இதேபோல பீல்டிங் பணிகளை வழிநடத்தவும் ஒருவர் இருக்க முடியும்.
எனவே இது பணிச்சுமையைப் பகிர்ந்து கொள்வது பற்றிய விஷயமாகும். அணி நெருக்கடியான சூழலை எதிர்கொள்ளும்போது கடினமான தருணங்களில் சிறப்பாக செயல்பட்ட தங்கள் அனுபவத்தின் அடிப்படையில் மூத்த வீரர்கள் முக்கிய ஆலோசனைகளை வழங்க முடியும்.
அவர்கள் நெருக்கடியான சூழல்களை எதிர்கொண்டுள்ளனர். பல முக்கியமான தருணங்களில் சிறப்பாக செயல்பட்டு வெற்றியைத் தேடித்தந்துள்ளனர். எனவே, இது ஒரு சிறந்த கலவையாக அமைகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.