லோசான் டைமண்ட் லீக்: 9 செ.மீ இடைவெளியில் நீரஜ் சோப்ராவை வீழ்த்தி ருமேஷ் பத்திரகே ஹாட்ரிக் சாதனை!

மூன்றாவது சுற்றில், இலங்கை வீரர் ருமேஷ் பத்திரகே 88.14 மீட்டர் தூரம் எறிந்து மீண்டும் முதலிடத்தைக் கைப்பற்றினார்.
NeerajChopra-RumeshPathirage
Published on

சுவிட்சர்லாந்தின் லோசான் நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற டைமண்ட் லீக் தடகள போட்டியில், இந்தியாவின் ஈட்டி எறிதல் நட்சத்திரமும் ஒலிம்பிக் பதக்க வெற்றியாளருமான நீரஜ் சோப்ரா 88.05 மீட்டர் தூரம் எறிந்து இந்த ஆண்டின் தனது மிகச்சிறந்த செயல்பாட்டைப் பதிவு செய்தார். இருப்பினும், இலங்கையின் வளர்ந்து வரும் 23 வயதான ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் பத்திரகே வெறும் 9 சென்டிமீட்டர் வித்தியாசத்தில் நீரஜ் சோப்ராவை பின்னுக்குத் தள்ளி ஹாட்ரிக் சாதனை படைத்தார்.

போட்டியின் முதல் சுற்றில் பத்திரகே 85.99 மீட்டர் வீசி முன்னிலை பெற்றார். ஆனால், இரண்டாவது சுற்றில் நீரஜ் சோப்ரா அபாரமாகச் செயல்பட்டு 88.05 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து தற்காலிகமாகப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார். இதையடுத்து நடைபெற்ற மூன்றாவது சுற்றில், இலங்கை வீரர் ருமேஷ் பத்திரகே 88.14 மீட்டர் தூரம் எறிந்து மீண்டும் முதலிடத்தைக் கைப்பற்றினார்.

அடுத்தடுத்த சுற்றுகளில் நீரஜ் சோப்ராவால் இந்த இலக்கை முறியடிக்க முடியாமல் போனதால் அவர் இரண்டாவது இடத்துடன் வெள்ளிப் பதக்கத்தை நிறைவு செய்தார். கிரெனடா நாட்டின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 86.69 மீட்டர் தூரம் வீசி மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

2026 ஆம் ஆண்டின் இந்த சீசனில் நீரஜ் சோப்ராவை ருமேஷ் பத்திரகே வீழ்த்துவது இது தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகும். இதற்கு முன்னதாக தோஹா டைமண்ட் லீக் மற்றும் கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளிலும் பத்திரகே நீரஜைத் தோற்கடித்து தங்கம் வென்றிருந்தார். இந்த போட்டியில் தங்கப் பதக்கத்தை தவறவிட்டாலும், 88.05 மீட்டர் வீசியதன் மூலம் டைமண்ட் லீக் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும் வாய்ப்பில் நீரஜ் சோப்ரா வலுவான புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com