ஜெர்சி நிற சர்ச்சை: ஹாக்கி இந்தியா இயக்குநர் பணியிடை நீக்கம்!

நோட்டீஸ் கிடைத்த 4 வாரங்களுக்குள் பதிலளிக்க கோரப்பட்டுள்ளது.
காவி நிறத்திற்கு மாற்றப்பட்ட ஜெர்சி - ஹாக்கி இந்தியா இயக்குநர் பணி நீக்கம்!
Published on

கடந்த ஜூலை மாதம் இந்திய ஹாக்கி அணியின் ஜெர்சி நிறம், நீலத்தில் இருந்து காவிக்கு மாற்றப்பட்டது.

இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழ, ஹாக்கி மைதானங்களும், வீரர்களின் ஜெர்சியும் ஒரேநிறத்தில் இருப்பதால் பந்தை பாஸ் செய்வது, வீரர்களை அடையாளம் காண்பது கடினமாக இருந்ததாகவும், அதனாலேயே நிறம் மாற்றப்பட்டதாகவும் ஹாக்கி இந்தியா விளக்கம் அளித்தது.

இதனைத்தொடர்ந்து கடந்த வாரம் மீண்டும் ஜெர்சி நீல நிறத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் ஹாக்கி இந்தியா அணியின் தலைமை இயக்குநர் ஸ்ரீவஸ்தவா பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவரின் அனைத்து அதிகாரங்களும் பறிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஸ்ரீவஸ்தவாவிடம் விளக்கம் கேட்டு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஹாக்கி இந்தியா தலைவர் திலீப் திர்கே, வழக்கறிஞர் மூலம் ஸ்ரீவஸ்தவாவிற்கு அனுப்பியுள்ள நோட்டீஸில், அவர் உடனடியாகப் பணிகளில் இருந்து விலகவும், தனது விளக்கத்தை நோட்டீஸ் கிடைத்த 4 வாரங்களுக்குள் சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

ஸ்ரீவஸ்தவா மீது 8 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதில் சில முக்கிய காரணங்கள்;

உலகக் கோப்பை பயணம்

ஹாக்கி இந்தியா லீக் மற்றும் பிற பணிகளில் கவனம் செலுத்துவதற்காக அவரை இந்தியாவில் தங்க ஹாக்கி இந்தியா தலைவர் திலீப் திர்கே அறிவுறுத்தியும், அவரது இ-மெயில் உத்தரவை மீறி ஸ்ரீவஸ்தவா அண்மையில் நடந்த உலகக் கோப்பை தொடருக்குப் பயணம் மேற்கொண்டது முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.

ஜெர்சி சர்ச்சை

மேலும் உலகக் கோப்பை ஹாக்கி தொடரின்போது, முறையான ஆலோசனை மற்றும் அனுமதி பெறாமல் தேசிய அணியின் ஜெர்சி நிறத்தை காவி நிறத்திற்கு மாற்ற தன்னிச்சையாக முடிவெடுத்தது.

அணியின் சீருடையில் செய்யப்பட்ட மாற்றம், “குடியரசுத் தலைவர் அல்லது செயற்குழுவுடன் முன் கலந்தாலோசிக்காமல் செயல்படுத்தப்பட்டு, பகிரங்கமாக வெளியிடப்பட்டது” என ஸ்ரீவஸ்வதாவிற்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒழுங்கு நடவடிக்கை எடுக்காமை

தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் போது சில வீரர்கள் மற்றும் தலைமை பயிற்சியாளர் கிரெய்க் ஃபுல்டன் ஆகியோர் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக வந்த புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியது உள்ளிட்ட 8 குற்றச்சாட்டுகள் ஸ்ரீவஸ்வதாமீது பட்டியலிடப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com