முதல் டெஸ்டில் நியூசிலாந்துக்கு இந்தியா பதிலடி- கே.எல்.ராகுல் சதம்!

நியூசிலாந்து அணியின் ஸ்கோரான 368 ரன்னை தாண்டி இந்திய அணி முன்னிலை பெற்று பதிலடி கொடுத்தது.
KL Rahul
Published on: 

இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெல்லிங்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

3-வது நாள் ஆட்டம்

நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 368 ரன் குவித்தது. நிக்கோல்ஸ் (175 ரன், அவுட் இல்லை), பிலிப்ஸ் (118) ஆகியோர் சதம் அடித்தனர். பும்ரா 4 விக்கெட்டும், ஆகாஷ் தீப் 3 விக்கெட்டும், கம்போஜ் 2 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 159 ரன் எடுத்து இருந்தது.

ஜெய்ஸ்வால் 85 ரன்னில் ஹென்றி பந்தில் வெளியேறினார். கே.எல். ராகுல் 52 ரன்னுடனும், தேவ்தத் படிக்கல் 16 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. 209 ரன்கள் பின்தங்கி, கைவசம் 9 விக்கெட் என்ற நிலையில் இந்திய அணி தொடர்ந்து ஆடியது.

கே.எல். ராகுல் சதம்

இருவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் 56-வது ஓவரில் இந்தியா 200 ரன்னை தொட்டது. படிக்கல் 98 பந்துகளில் 9 பவுண்டரியுடன் 50 ரன்னை எடுத்தார்.

5-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 2-வது அரைசதமாகும். மதிய உணவு இடைவேளையின் போது இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 239 ரன் எடுத்து இருந்தது. கே.எல். ராகுல் 93 ரன்னிலும், படிக்கல் 53 ரன்னிலும் இருந்தனர். மதிய உணவு இடைவேளைக்கு பிறகு கே.எல். ராகுல் சதத்தை பதிவு செய்தார்.

207 பந்துகளில் 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 100 ரன்னை எடுத்தார். 71- வது டெஸ்டில் ஆடும் ராகுலுக்கு இது 13-வது சதமாகும். நியூசிலாந்துக்கு எதிராக முதல் செஞ்சூரியை அடித்தார்.

படிக்கல் 80 ரன்னில் அவுட்

81-வது ஓவரில் நியூசிலாந்து புதிய பந்தை எடுத்தது. இதற்கு பலன் கிடைத்தது. தேவ்தத் படிக்கல் 80 ரன்னில் ஜேமிசன் பந்தில் போல்டு ஆனார். 175 பந்துகளில் 10 பவுண்டரியுடன் இந்த ரன்னை எடுத்தார். அப்போது ஸ்கோர் 295 ஆக இருந்தது. 2- வது விக்கெட் ஜோடி 165 ரன் எடுத்தது.

அடுத்து கேப்டன் சுப்மன் கில் களம் வந்தார். இந்திய அணி 85.1-வது ஓவரில் 300 ரன்னை எடுத்தது. தேனீர் இடைவேளையின்போது 2 விக்கெட் இழப்புக்கு 344 ரன் எடுத்து இருந்தது.

கே.எல். ராகுல் 124 ரன்னிலும், சுப்மன் கில் 36 ரன்னிலும் இருந்தனர்.

சுப்மன்கில் அரைசதம்

கேப்டன் சுப்மன்கில்லும் சிறப்பாக விளையாடி 66 பந்துகளில் 50 ரன்னை தொட்டார். இதில் 5 பவுண்டரியும், 1 சிக்சரும் அடங்கும்.

நியூசிலாந்து அணியின் ஸ்கோரான 368 ரன்னை தாண்டி இந்திய அணி முன்னிலை பெற்று பதிலடி கொடுத்தது. கே.எல்.ராகுலும், சுப்மன்கில்லும் தொடர்ந்து சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தனர்.

136 ரன்னில் வெளியேற்றம்

அபாரமாக ஆடி வந்த கே.எல்.ராகுல் 136 ரன்னில் ஆட்டம் இழந்தார். 290 பந்துகளில் 9 பவுண்டரி, 2 சிக்சருடன் அவர் இந்த ரன்னை எடுத்தார். அவரது விக்கெட்டை நாதன் சுமித் கைப்பற்றினார்.

அப்போது ஸ்கோர் 386 ஆக இருந்தது. 3-வது விக்கெட் ஜோடி 91 ரன் எடுத்தது.

4-வது விக்கெட்டுக்கு சுப்மன்கில்லுடன், ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இந்திய அணி 107.4-வது ஓவரில் 400 ரன்னை குவித்தது. கில் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

X