

நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.
5 ஒருநாள் தொடரில் 3 போட்டி முடிவில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், வெல் லிங்டனில் நடந்த 2-வது போட்டியில் 4 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.
இந்த 2 ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டு டக்வொர்த்-லீவிஸ் விதிப்படியே முடிவு நிர்ணயிக்கப்பட்டது. ஹேமில்டனில் நடைபெற வேண்டிய 3-வது போட்டி மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 4-வது ஒருநாள் ஆட்டம் மவுன்ட் மவுங்கானுவில் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
கடைசி 2 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணிக்கு ஸ்ரேயாஸ் அய்யர் கேப்டனாக பணியாற்றுகிறார். டெஸ்டில் கவனம் செலுத்துவதற்காக வழக்கமான கேப்டன் சுப்மன் கில்லுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
இஷான் கிஷனுக்கு துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் இடத்தில் அவர் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்றபடி அணியில் மாற்றம் இருக்காது என்றே கருதப்படுகிறது.
ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான அணி நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றும் ஆர்வத்துடன் இருக்கிறது. இந்த போட்டியாவது மழையால் பாதிக்கப்படக்கூடாது என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
சான்ட்னெர் தலைமையிலான நியூசிலாந்து அணி வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது. தோற்றால் ஒருநாள் தொடரை இழந்துவிடும். 20 ஓவர் தொடரை ஏற்கனவே இழந்துவிட்டதால் அந்த அணி வெற்றி பெற கடுமையாக போராடும். பிரெட் ரேன்டெல் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
இரு அணிகளும் ஒருநாள் போட்டியில் 126 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 65-ல், நியூசிலாந்து 52-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டை ஆனது. 8 போட்டி முடிவு இல்லை.
நாளைய போட்டி இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. சோனி ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.