பாலியல் வழக்கில் ஜாமீனில் வந்த கிரிக்கெட் வீரருக்கு மீண்டும் வாய்ப்பு!

பெங்கால் கிரிக்கெட் சங்கம் அவருக்கு மீண்டும் அணியில் வாய்ப்பளித்துள்ளது.
Abhishek Poral
Published on: 

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ள இந்திய ஐபிஎல் கிரிக்கெட் வீரரும், விக்கெட் கீப்பருமான அபிஷேக் போரலுக்கு மீண்டும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ரஞ்சி கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்கும் 16 பேர் கொண்ட பெங்கால் அணியில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

திருமணம் செய்வதாக ஏமாற்றியதாக புகார்

மருத்துவ மாணவி ஒருவரைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி பாலியல் ரீதியாக அத்துமீறியதாகக் கூறி, கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் மொக்ரா காவல்துறையினரால் கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி அபிஷேக் போரல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் ஒரு மாத காலத்திற்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்த அவருக்கு, சின்சுரா நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

கிரிக்கெட் களத்தில் வாய்ப்பு

ஜாமீனில் வெளிவந்து வெறும் 11 நாட்களே ஆன நிலையில், பெங்கால் கிரிக்கெட் சங்கம் அவருக்கு மீண்டும் அணியில் வாய்ப்பளித்துள்ளது. ரஞ்சி கோப்பைத் தொடருக்கு முன்னதாக நடைபெறும் பயிற்சிப் போட்டிகளுக்கான 16 பேர் கொண்ட பெங்கால் அணியில் அபிஷேக் போரலின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தால் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்படாத வரை ஒரு வீரர் போட்டிகளில் பங்கேற்கத் தடையுமில்லை என்ற பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் கொள்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லி கேபிடல்ஸ் அணியின் முதன்மை விக்கெட் கீப்பர்-பேட்டராக விளையாடி பிரபலமான 23 வயதான அபிஷேக் போரல், தன் மீதான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுத்து வருகிறார். வழக்கு விசாரணை தொடர்ந்து நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சூழலில், அவர் மீண்டும் கிரிக்கெட் மைதானத்திற்குத் திரும்புவது விளையாட்டு ரசிகர்களிடையேயும் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com