முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி

ஆப்கானிஸ்தான் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ரஷித் கான் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Afghanistan Win
Published on: 

ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே மற்றும் வங்கதேசம் அணிகள் இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தத் தொடரின் முதல் போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் வங்கதேசம் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஜிம்பாப்வே அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில், நேற்றிரவு நடந்த இரண்டாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதின. அபு தாபியில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

செதிகுல்லா அதிரடி சதம்:

ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்க வீரராக களிறங்கிய ரஹ்மனுல்லா குர்பாஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய இப்ராஹிம் சத்ரான் 90 ரன்களை குவித்த போது தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். செதிகுல்லா அட்டல் அதிரடியாக ஆடி 102 ரன்களை விளாசினார்.

இவரைத் தொடர்ந்து களமிறங்கியவர்களில் ஹஸ்மதுல்லா ஷாஹிதி 28 ரன்களை எடுக்க மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 294 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஜிம்பாப்வே அணி சார்பில் பிராட் எவான்ஸ், எர்னெஸ்ட் மசுகு தலா 3 விக்கெட்டுகளையும், பிளெசிங் முசர்பானி 2 விக்கெட்டுகளையும், சிக்கந்தர் ராசா 1 விக்கெட் கைப்பற்றினர்.

ஆப்கானிஸ்தான் அபாரம்:

சற்றே கடின இலக்கை துரத்திய ஜிம்பாப்வே அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கியவர்களில் ஒருவரான பென் கர்ரன் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகி வெளியேறினார். பிறகு களமிறங்கிய தஃபஸ்வா சிகா 2 ரன்களிலும், பிரென்டன் டெய்லர் 1 ரன் எடுத்தும் ஆட்டமிழந்தனர்.

பிறகு களமிறங்கிய கேப்டன் சிக்கந்தர் ராசா நிதானமாக ஆடி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தி ரன் குவிப்பில் கவனம் செலுத்தினார். தொடக்க வீரராக களமிறங்கிய ப்ரியன் பென்னெட் 31 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் ராசா 80 பந்துகளை எதிர்கொண்டு 48 ரன்களை எடுத்த போது அவுட் ஆகி வெளியேறினார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரியான் பர்ல் 31 ரன்களை எடுத்தார்.

எனினும், அடுத்தடுத்து வந்தவர்கள் ரன் குவிக்க தடுமாறினர். இதனால் ஜிம்பாப்வே அணி 38.4 ஓவர்களில் வெறும் 136 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி 158 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ரஷித் கான் 4 விக்கெட்டுகளையும், பசல்ஹக் ஃபரூக்கி 2 விக்கெட்டுகளையும், கசன்ஃபர் மறஅறும் முகமது நபி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com