முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்: வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஆப்கானிஸ்தான்

கேப்டன் ரஹ்மத் ஷா நிதானமாக விளையாடி 90 பந்துகளில் 67 ரன்களை எடுத்தார்.
AFG Win
Published on: 

ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே, வங்கதேசம் அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.

முதல் போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் வங்கதேசம் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஜிம்பாப்வே அணி 99 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 158 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது.

வங்கதேசம் சொதப்பல்:

இந்நிலையில், நேற்ற நடந்த மூன்றாவது போட்டியில் வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. ஷார்ஜாவில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த வங்கதேசம் அணி தொடக்கத்திலேயே விக்கெட்களை இழந்து தடுமாறியது. 28 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், சயீப் ஹாசன் மற்றும் பர்வேஸ் ஹொசைன் ஜோடி 5-ஆவது விக்கெட்டுக்கு பொறுப்புடன் ஆடி ரன் குவிப்பில் கவனம் செலுத்தியது.

இந்த ஜோடி 93 ரன்கள் சேர்த்த நிலையில் சயீப் ஹாசன் 41 ரன்னில் அவுட்டானார். ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் பர்வேஸ் ஹொசைன் சிறப்பாக ஆடி அரை சதம் கடந்தார். அவர் 70 ரன் சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதியில், வங்கதேசம் அணி 41.2 ஓவரில் 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 4 விக்கெட்டுகளையும், அஸ்மதுல்லா ஒமர்சாய், யாமின் அஹமத்சாய் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

ஆப்கானிஸ்தான் அபாரம்:

161 ரன்களை எடுத்தாலே வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் 6 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறினார். பிறகு களமிறங்கிய செதிக்குல்லா அட்டல் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரராக களமிறங்கிய இப்ராகிம் சத்ரான் 34 ரன்களை எடுத்த போது தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார்.

கேப்டன் ரஹ்மத் ஷா நிதானமாக ஆடி ரன் குவிப்பில் கவனம் செலுத்தினார். இவருடன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹஷ்மதுல்லா ஷாஹிதி 54 பந்துகளில் 36 ரன்களை எடுத்தார். கேப்டன் ஷா 90 பந்துகளில் 67 ரன்களை எடுத்தார். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 35.3 ஓவர்களில் வெறும் 3 விக்கெட்டுகளை இழந்து 16 ரன்களை எடுத்தது. வங்கதேசம் சார்பில் டஸ்கின் அகமது 2 விக்கெட்டுகளையும், முஸ்தபிசுர் ரஹ்மான் 1 விக்கெட் கைப்பற்றினர்.

இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று அணிகள் இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு ஆப்கானிஸ்தான் அணி முன்னேறியது. இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியும் ஷார்ஜாவில் நடைபெறுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com