டி20 லீக் போட்டிகளால் டெஸ்ட் வீரர்கள் முன்னதாகவே ஓய்வு பெறுவது கவலை அளிக்கிறது: MCC தலைவர்

குறைவான போட்டிகளில் விளையாடி அதிக வருமானம் ஈட்ட முடிந்தால், ஒரு வீரரை அதற்காக குறை சொல்ல முடியாது.
டெஸ்ட் கிரிக்கெட்
டெஸ்ட் கிரிக்கெட்
Published on: 

இந்தியாவில் பிரான்சைஸ் அடிப்படையில் ஐ.பி.எல். டி20 லீக் நடப்பது போன்று பெரும்பாலான நாடுகளில் டி20 லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் அதிக தொகை கொடுத்து வீரர்கள் ஏலம் எடுக்கப்படுவதால், டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதை விட பெரும்பாலான வீரர்கள் டி20 லீக்குகளில் மட்டும் விளையாட நினைக்கிறார்கள்.

அதிக வருமானம்

ஏனென்றால் குறைவான நாட்களில் குறைந்த அளவிலான டி20 போட்டிகளில் விளையாடினால் அதிக பணம் கிடைக்கிறது. நாட்டிற்கான டெஸ்ட் போட்டியில் விளையாடினால் ஐந்து நாட்கள் கடுமையாக விளையாட வேண்டும். சம்பளம் குறைவு. இதனால் பெரும்பாலான நாட்டின் வீரர்கள் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார்கள்.

இந்த நிலையில் உலகளாவிய கிரிக்கெட்டிற்கு விதிமுறைகளை வகுத்து கொடுத்து, ஸ்பிரிட் ஆஃப் கேம் ஆக விளங்கும் MCC-யின் கிரிக்கெட்டிற்கான தலைவர் பிராசர் ஸ்டீவர்ட், இது தொடர்பாக கவலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிராசர் ஸ்டீவர்ட் கூறியதாவது:-

பிரான்சைஸ் கிரிக்கெட்டில் (franchise cricket) அதிக வருமானம் கிடைப்பதால், வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து முன்னதாகவே ஓய்வு பெறுவதை நாம் காண்கிறோம். குறைவான போட்டிகளில் விளையாடி அதிக வருமானம் ஈட்ட முடிந்தால், ஒரு வீரரை அதற்காக குறை சொல்ல முடியாது. ஏனெனில் தற்போதைய சூழல் அப்படித்தான் உள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதை காண விரும்புகிறோம்

இது உண்மையில் MCC-க்குரிய விவகாரம் அல்ல. இது ICC மற்றும் பிற நிர்வாக அமைப்புகள் சார்ந்த விஷயம். அனைவருக்குமான ஒரு கிரிக்கெட் அட்டவணையை உருவாக்குவதே இதன் நோக்கம். சிறந்த வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதையே நாங்கள் காண விரும்புகிறோம்.

அதேவேளையில், டெஸ்ட் கிரிக்கெட்டிற்குத் தேவையான நிதியை வழங்க உதவக்கூடிய இந்த பிரான்சைஸ் லீக்குகளின் தேவை, முக்கியத்துவம் மற்றும் மதிப்பையும் நாங்கள் முழுமையாக அங்கீகரிக்கிறோம்.

எனவே, எல்லாவற்றிற்கும் ஒரு இடம் உண்டு என்றே நான் கருதுகிறேன். ஆனால், போட்டி அட்டவணை மிகவும் நெருக்கடியாக உள்ளது. சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள், குறுகிய கால வடிவங்களில் (short formats) விளையாடுவதற்காக மட்டும், பலரும் விரும்புவதை விட முன்னதாகவே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது கவலைக்குரிய விசயமாகும்.

இவ்வாறு பிராசர் ஸ்டீவர்ட் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com