

ஆசிய விளையாட்டில் பெண்கள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது இலங்கை.
ஆசிய விளையாட்டில் பெண்கள் கிரிக்கெட்டின் அரையிறுதி போட்டிகள் ஜப்பானில் நடந்து வருகின்றன.
ஜப்பானின் நிஷின் நகரில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் இலங்கை, பாகிஸ்தான் வீராங்கனைகள் மோதினர். டாஸ் வென்ற இலங்கை மகளிர் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்தது. ஆயிஷா ஜபார் 71 ரன்னும், ஷபார் ஜுல்பிகர் 54 ரன்னும் எடுத்தனர்.
3வது விக்கெட்டுக்கு ஆயிஷா ஜபார் - ஷபார் ஜுல்பிகர் ஜோடி 115 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து, 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனை கேப்டன் சமாரி அடப்பட்டு ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார்.
சமாரி அடப்பட்டு அரை சதம் கடந்து 50 பந்தில் 6 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 83 ரன்கள் குவித்தார்.
ஹாசினி பெரேரா அவருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். அவர் 42 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், இலங்கை அணி 17.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியது.
மற்றொரு அரையிறுதியில் இந்தியா, வங்கதேசம் ஆகிய அணிகள் மோதி வருகின்றன.