

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோற்றத்துக்கு குறித்து இந்திய ஏ அணி கேட்பன் திலக் வர்மா பேசியுள்ளார்.
வளர்ந்து வரும் வீரர்களுக்கான 50 ஓவர் கொண்ட ஆசிய கிரிக்கெட் தொடர் கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்த தொடரின் 8-ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா 'ஏ' அணி - பாகிஸ்தான் 'ஏ' அணிகள் மோதின. பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
இந்நிலையில் இந்தத் தோல்விக்குப் பிறகு கேப்டன் திலக் வர்மா செய்தியாளர்களிடம் அதுகுறித்து பேசினார்.
அப்போது அவர், "அபிஷேக் சர்மா ஆட்டத்தைத் தொடங்கிய விதமும், பின்னர் ஷாபாஸ் அகமது என்னுடன் களத்தில் அமைத்த பார்ட்னர்ஷிப்பும் முக்கியமானதாக இருந்தது.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக, நாங்கள் விரைவாக ரன்கள் எடுக்க வேண்டிய நேரத்தில் ஷாபாஸ் ஆட்டமிழந்தார். அவர் இன்னும் இரண்டு ஓவர்கள் மட்டும் களத்தில் இருந்திருந்தால், என்னால் இந்தியாவுக்குச் சாதகமாக ஆட்டத்தை முடித்திருக்க முடியும்.
இரண்டாவது இன்னிங்ஸின் முதல் 10 ஓவர்களில் பந்து சற்று ஸ்விங் ஆனது. இதற்கு, மிகச் சிறந்த லைன் மற்றும் லென்த்தில் பந்து வீசிய பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் இருவரையுமே பாராட்ட வேண்டும்.
ஆனால் அதே நேரத்தில், மிடில் ஓவர்களில் நாங்கள் அடிக்கடி விக்கெட்டுகளை இழந்தோம். அப்படி நடந்திருக்காவிட்டால், நாங்கள் 47வது அல்லது 48வது ஓவரிலேயே போட்டியை வென்றிருப்போம்" என்றார்.
149 பந்துகளில் போராடி அடித்த சதம் குறித்தும், பொறுப்புடன் இன்னிங்ஸை இறுதிவரை கொண்டு சென்ற வகையில் அதுவே அவரது சிறந்த பேட்டிங் ஆட்டமா என்றும் திலக்கிடம் கேட்கப்பட்டபோது, அவர் "அப்படி நான் சொல்ல மாட்டேன். என்னைப் பொறுத்தவரை, நாங்கள் போட்டியில் வெற்றி பெறும்போதுதான் அது சிறந்தது.
நான் போட்டியில் வெற்றி பெறவில்லை என்றால், அது எனக்குச் சிறந்ததல்ல. இருப்பினும், நான் எப்போதும் இன்னிங்ஸை முடிந்தவரை இறுதிவரை கொண்டு செல்லவே விரும்புவேன், இன்றும் அதுதான் எனது முயற்சியாக இருந்தது.
மற்றொரு பேட்ஸ்மேன் எனக்கு ஆதரவளித்திருந்தால், போட்டியில் வெற்றி பெற்றிருக்க முடியும். ஆனால் ஒரு கேப்டனாக, நீங்கள் பொறுப்பையும் அழுத்தத்தையும் ஏற்க வேண்டும், அதைச் செய்யவே நான் விரும்புகிறேன்." என்றார்.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 49.2 ஓவர்களில் 313 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஹசன் நவாஸ் 79 ரன்களும், மாஸ் சாதகத் 59 ரன்களும், பர்ஹான் யூசுப் 56 ரன்களும் எடுத்தனர். ஷமில் ஹுசைன் 33 ரன்களும், அப்துல் சமத் 28 ரன்களும், முகமது இம்ரான் ரந்தாவா 23 ரன்களும் எடுத்தனர்.
இந்திய அணி சார்பில் ஹர்ஷித் ராணா, சூர்யன்ஷ் ஷெட்ஜ், விப்ராஜ் நிகாம், பிரின்ஸ் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆயுஷ் பதோனி 1 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து 314 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணிக்கு வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அபிஷேக் சர்மா தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
சூர்யவன்ஷி 11 ரன்களில் ஆட்டமிழக்க அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடி 42 பந்துகளில் 70 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். ஆயுஷ் பதோனி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த போதிலும், கேப்டன் திலக் வர்மா நிதானமாக ஆடி ரன் குவிப்பில் கவனம் செலுத்தினார். இவருடன் ஆடிய ஷபாஸ் அகமது 49 பந்துகளில் 56 ரன்களை எடுத்தார்.
இவர்களை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசி வரை போராடிய கேப்டன் திலக் வர்மா 100 ரன்களை எடுத்த போது கடைசி வீரராக தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார்.
314 ரன்களை துரத்திய இந்திய அணி 49.1 ஓவர்களில் 265 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், பாகிஸ்தான் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.