WPL 2027 அட்டவணை வெளியீடு: முதல் ஆட்டத்தில் பெங்களூரு, மும்பை அணிகள் மோதல்

மகளிர் பிரீமியர் லீக் போட்டிகள் வதோதரா, மும்பை ஆகிய 2 நகரங்களில் நடைபெறுகின்றன.
WPL 2027
Published on: 
Summary

ஐந்தாவது மகளிர் பிரீமியர் லீக் போட்டிக்கான அட்டவணை நேற்று வெளியானது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணி, முன்னாள் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது.

5-வது மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான அட்டவணையை பி.சி.சி.ஐ. நேற்று வெளியிட்டது.

அதன்படி, 2027-ம் ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் போட்டிகள் ஜனவரி 14-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 7-ம் தேதி வரை நடைபெற உள்ளன.

இந்தப் போட்டிகள் வதோதரா, மும்பை ஆகிய 2 நகரங்களில் நடைபெறுகின்றன. இரு மைதானங்களிலும் தலா 11 போட்டிகள் என மொத்தம் 22 ஆட்டங்கள் நடத்தப்பட உள்ளன.

முதல் ஆட்டம்

ஜனவரி 14-ம் தேதி வதோதராவில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, முன்னாள் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. தொடர்ந்து ஜனவரி 24-ம் தேதி வரை 11 போட்டிகள் வதோதராவில் நடைபெறும்.

ஜனவரி 26-ம் தேதி முதல் எஞ்சிய 11 போட்டிகளும் மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற உள்ளன. லீக் சுற்று ஆட்டங்கள் பிப்ரவரி 3-ம் தேதி நிறைவடைகின்றன. லீக் சுற்றின் முடிவில் முதலிடத்தைப் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

இறுதிப்போட்டி

புள்ளிப் பட்டியலில் 2-வது மற்றும் 3-வது இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

மகளிர் பிரீமியர் லீக் சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டி பிப்ரவரி 7-ம் தேதி நடைபெற உள்ளது.

X