

இந்தியா- நியூசிலாந்து இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான முதல் போட்டி இன்று ஆக்லாந்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்தின் வில் யங், டிம் ஷெய்பெர்ட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
வில் யங் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹென்ரி நிக்கோல்ஸ் 9 ரன்களில் வெளியேறினார்.
அடுத்து டிம் ஷெய்பெர்ட் உடன் டேரில் மிட்செல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறிது நேரம் தாக்குப்பிடித்தது. என்றாலும் டிம் ஷெய்பெர்ட் 38 ரன்களிலும், டேரில் மிட்செல் 28 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அர்ஷ்தீப் சிங், குர்னூர் பிரார், கம்போஜ் சிறப்பாக பந்து வீச நியூசிலாந்து 40.2 ஓவரில் 185 ரன்களில் சுருண்டது. அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளும், குர்னூர் பிரார் 3 விக்கெட்டுகளும், அன்ஷுல் கம்போஜ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் 186 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரோகித் சர்மா ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
அடுத்து சுப்மன் கில் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இருவரும் நிலைத்து விளையாடினர். இதற்கிடையே மழை அடிக்கடி குறுக்கிட்டது. இதனால் இந்தியாவுக்கு 32 ஓவரில 143 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. விராட் கோலி 35 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
சுப்டன் கில் 37 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார்.
51 பந்துகளில் 13 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 74 ரன்கள் விளாசிய நிலையில் விராட் கோலி ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 19.4 ஓவரில் 124 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து வந்த அக்சர் படேல் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.
5-வது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ் அய்யருடன் கே.எல். ராகுல் ஜோடி சேர்ந்தார். ஷ்ரேயாஸ் அய்யர் 13 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்தியா 22.4 ஓவரில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது போட்டி வெலிங்டனில் 7-ந்தேதி நடக்கிறது.