ஜெய்ஸ்வால், யாஷ் ரதோட் சதம்: இந்தியா- நியூசிலாந்து `ஏ' டெஸ்ட் டிரா

முதல் போட்டியில் சரியாக விளையாடாத ஜெய்ஸ்வால், இதில் 155 ரன்கள் விளாசினார்.
ஜெய்ஸ்வால்
ஜெய்ஸ்வால்
Published on: 

முதல் இன்னிங்சில் இந்தியா `ஏ' 346 ரன்கள் சேர்ப்பு

இந்தியா- நியூசிலாந்து `ஏ' அணிகளுக்கு இடையில் அதிகாரப்பூர்வமற்ற 4 நாட்கள் கொண்ட 3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி டிராவில் முடிவடைந்த நிலையில், 2-வது போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் கடந்த அக்டோபர் 31-ந்தேதி தொடங்கியது. இந்தியா ஏ அணி கேப்டன் துருவ் ஜூரல் (105) சதம் அடிக்க இந்தியா ஏ முதல் இன்னிங்சில் 346 ரன்கள் குவித்தது.

நியூசிலாந்து `ஏ' முதல் இன்னிங்சில் 424 ரன்கள் குவிப்பு

பின்னர் நியூசிலாந்து ஏ முதல் இன்னிங்சை தொடங்கியது. மேத்யூ போய்லே 110 ரன்களும், டீன் பாக்ஸ்கிராப்ட் 93 ரன்களும் அடிக்க நியூசிலாந்து ஏ 424 ரன்கள் குவித்தது.

78 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா `ஏ' 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 32 ரன்கள் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் 20 ரன்களுடனும், சாய் சுதர்சன் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல் ஏமாற்றம்

இன்று 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. சாய் சுதர்சன் நேற்றைய 11 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் முதல் பந்திலேயே டக்அவுட் ஆனார்.

அடுத்து 3-வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால் உடன் யாஷ் ரதோடு ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஜெய்ஸ்வால் 119 பந்துகளில் சதம் விளாசினார். ரதோடு சதம் விளாசினார்.

ஜெய்ஸ்வால் 155, யாஷ் ரதோட் 100

இந்தியா `ஏ' அணி 2 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்திருக்கும்போது, ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் வெற்றித் தோல்வியின்றி போட்டி டிராவில் முடிவடைந்தது. ஜெய்ஸ்வால் 155 ரன்களும், யாஷ் ரதோட் 100 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இரண்டு போட்டிகள் டிராவில் முடிவடைந்த நிலையில், 3-வது மற்றும் கடைசி போட்டி லிங்கனில் (Lincoln) வருகிற 7-ந்தேதி தெடாங்குகிறது.

X