ஆரத்தி எடுக்கும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா: நத்தம் விஸ்வநாதன் மீது திமுக புகார்

ஆரத்தி எடுக்கும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக அ.தி.மு.க. வேட்பாளர் நத்தம் விஸ்வநாதன் மீது தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் தி.மு.க. புகார் அளித்துள்ளது.
நத்தம் விசுவநாதன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தபோது எடுத்த படம்.
நத்தம் விசுவநாதன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தபோது எடுத்த படம்.
Published on

சென்னை:

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்த புகார் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக நத்தம் விஸ்வநாதன் போட்டியிடுகிறார். அவர் பிரசாரம் மேற்கொள்ளும் போது அவருக்கு ஆரத்தி எடுக்கிறார்கள்.

அப்படி ஆரத்தி எடுக்கும் நபர்களுக்கெல்லாம் நத்தம் விஸ்வநாதனும் அவரது ஆதரவாளர்களுக்கு பணம் கொடுக்கின்றனர். இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு முற்றிலும் முரணானதாகும்.

இதுதொடர்பான வீடியோ தங்களின் பார்வைக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே நத்தம் விஸ்வநாதன் மீதும் அவரது ஆதரவாளர்கள் மீதும் உடனடியாக சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், ஒரு அரசியல் கட்சியைப் பற்றி விமர்சிப்பது, அவர்களின் அரசியல் கொள்கைகள், திட்டங்கள், பழைய பதிவுகள், பணிகள் ஆகியவை பற்றி மட்டும்தான் இருக்க வேண்டும். வேட்பாளர்களின் பொது வாழ்க்கைக்கு தொடர்பு இல்லாத தனிப்பட்ட வாழ்க்கை விவகாரங்கள் பற்றி பேசக்கூடாது என்றும் ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது என்றும் தேர்தல் நடத்தை விதியில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் அதை மீறும் வகையில், https://muttrupullifordmk.com/ என்ற இணையதளத்தில் எங்கள் கட்சி மற்றும் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான, உண்மைக்குப் புறம்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த உண்மையற்ற தகவல்களை பலர் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர்.

அந்த இணையதளம், அ.தி.மு.க. கட்சியின் பின்னணியில் செயல்படுகிறதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே அந்த இணையதளத்திற்கு உடனே தடை விதிக்க வேண்டும். அதன் ஒருங்கிணைப்பாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆளும் கட்சியில் இருந்து கொண்டு தேர்தலில் போட்டியிடும் யாரும் தங்களின் விளம்பரத்திற்காக அரசுப் பணத்தை பயன்படுத்தக் கூடாது. ஆனால் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தனது தேர்தல் பிரசாரங்களை https://stopcorona.tn.gov.in என்ற அரசின் இணையதளத்தில் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.

அந்த பதிவுகளை உடனே அகற்ற உத்தரவிட வேண்டும். இந்த தேர்தல் விதி மீறல் தொடர்பாக அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com