

சென்னை:
தமிழக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கட்சி 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பா.ஜனதா சார்பில் ஏற்கனவே 17 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
தளி, ஊட்டி, விளவங்கோடு ஆகிய தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருந்தனர்.
காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை பொறுத்து பா.ஜனதா வேட்பாளர்களை அறிவிக்கலாம் என்று காலதாமதம் செய்யப்பட்டது.
இந்தநிலையில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட நிலையில் பா.ஜனதா சார்பில் விடுபட்ட 3 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
தளி தொகுதி பா.ஜனதா வேட்பாளராக நாகேஷ் குமார், ஊட்டி தொகுதி பா.ஜனதா வேட்பாளராக போஜராஜன், விளவங்கோடு தொகுதி பா.ஜனதா வேட்பாளராக ஆர்.ஜெயசீலன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தளி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் ராமச்சந்திரனை எதிர்த்து பா.ஜனதா வேட்பாளர் நாகேஷ்குமார் போட்டியிடுகிறார்.
ஊட்டி தொகுதி பா.ஜனதா வேட்பாளர் போஜராஜன் கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் செல்வாக்கு மிக்கவர். இவர் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.கணேசை எதிர்த்து போட்டியிடுகிறார்.
விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக விஜயதரணி எம்.எல்.ஏ. போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் ஆர்.ஜெயசீலன் களம் காண்கிறார்.