

சென்னை அணியில் இம்ரான் தாஹிர் நீக்கப்பட்டு டு பிளிசிஸ் சேர்க்கப்பட்டுள்ளார். சென்னை அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:- 1. ஷேன் வாட்சன், 2. அம்பதி ராயுடு, 3. சுரேஷ் ரெய்னா, 4. டு பிளிசிஸ், 5. டோனி, 6. சாம் பில்லிங்ஸ், 7. வெயின் பிராவோ, 8. ஜடேஜா, 9. கரண் சர்மா, 10. தீபக் சாஹர், 11. சர்துல் தாகூர்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் தவான் காயம் காரணமாக இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக ரிக்கி புய் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் ஜோர்டான் நீக்கப்பட்டு பில்லி ஸ்டேன்லேக் சேர்க்கப்பட்டுள்ளார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:- 1. ரிக்கி புய், 2. சகா, 3. கேன் வில்லியம்சன், 4. யூசுப் பதான், 5. மணிஷ் பாண்டே, 6. ஷாகிப் அல் ஹசன், 7. தீபக் ஹூடா, 8. பில்லி ஸ்டேன்லேக், 9. புவனேஸ்வர் குமார், 10. ரஷித் கான், 11. சித்தார்த் கவுல்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஷேன் வாட்சன், டு பிளிசிஸ் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். இந்த ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் 2 ரன்கள் மட்டுமே எடுத்தது. 2-வது ஓவரை ஸ்டேன்லேக் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் டு பிளிசிஸ் கேட்சில் இருந்து தப்பினார். இந்த ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் 2 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் முதல் இரண்டு ஓவரில் சென்னை அணி 4 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. சன்ரைசர்ஸ் ஐதராபத் அணி நேர்த்தியான பந்து வீச்சை வெளிப்படுத்தியது.
3-வது ஓவரை ஷாகிப் அல் ஹசன் வீசினார். இந்த ஓவரில் நான்கு ரன்கள் எடுத்தது. 4-வது ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை வாட்சன் சிக்சருக்கு தூக்கினார். தொடர்ந்து வாட்சன் வாணவேடிக்கை காட்டுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 15 பந்தில் 1 சிக்சருடன் 9 ரன்கள் மட்டுமே எடுத்தார்.