முத்தரப்பு ஒருநாள் தொடர்: இந்திய மகளிர் அணி அறிவிப்பு- ஷபாலி வர்மாவுக்கு இடமில்லை

இத்தொடருக்கான இந்திய அணியில் ஷபாலி வர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.காஷ்வி கௌதம், ஸ்ரீசாரனி, சுச்சி உபாத்யாய் ஆகிய அறிமுக வீராங்கனைகளுக்கு இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
முத்தரப்பு ஒருநாள் தொடர்: இந்திய மகளிர் அணி அறிவிப்பு- ஷபாலி வர்மாவுக்கு இடமில்லை
Published on

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இம்மாத இறுதியில் இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இந்த முத்தரப்பு ஒருநாள் தொடரானது இலங்கையில் ஏப்ரல் 27-ம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

இந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் ஒவ்வொரு அணியும் தலா 4 போட்டிகளில் விளையாடவுள்ளது. அதில் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடவுள்ளன.

இத்தொடரின் முதல் போட்டியில் இலங்கை மகளிர் அணியை எதிர்த்து இந்திய மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இத்தொடரின் அனைத்து போட்டிகளும் கொழும்புவில் உள்ள ஆர் பிரமதோசா கிரிக்கெட் மைதானத்தில் மட்டுமே நடைபெறவுள்ளது.

இந்தாண்டு இந்தியாவில் ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கும் நிலையில், அத்தொடருக்கு தயாராகும் வகையில் இந்த முத்தரப்பு தொடரானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையில் இந்திய மகளிர் அணி களமிறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. துணைக்கேப்டனாக ஸ்மிருதி மந்தனாவும் தொடர்கிறார்.

அதேசமயம் இத்தொடருக்கான இந்திய அணியில் ஷபாலி வர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும் ரேணுகா சிங் தாக்கூர் மற்றும் டைட்டஸ் சாது ஆகியோரும் காயம் காரணமாக இந்த முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிக்கவில்லை. 

இருப்பினும் நடந்து முடிந்த மகளிர் பிரீமியர் லீக் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய காஷ்வி கௌதம், ஸ்ரீசாரனி ஆகியோரும், உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட சுச்சி உபாத்யாய் ஆகிய அறிமுக வீராங்கனைகளுக்கு இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முத்தரப்பு தொடருக்கான இந்திய மகளிர் அணி:

ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், யாஸ்திகா பாட்டியா, தீப்தி ஷர்மா, அமன்ஜோத் கவுர், காஷ்வீ கௌதம், சினே ராணா, அருந்ததி ரெட்டி, தேஜல் ஹசாப்னிஸ், ஸ்ரீ சரணி, சுசி உபாத்யாய்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com