

ஜிம்பாப்வே மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரை இந்திய அணி 3-0 என கைப்பற்றியது.
இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இன்று நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 121 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணிக்கு தொடக்கம் கொடுத்த கேப்டன் ஸ்மிருதி மந்தனா ரன் ஏதும் எடுக்காமலும், இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஷஃபாளி வெர்மா 8 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதனால், இந்திய அணி தொடக்கத்திலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.
எனினும், ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் தொடக்கத்தில் களமிறங்கிய பிரதிகா ராவல் நிதானமாக ஆடி ரன் குவிப்பில் கவனம் செலுத்தினர். பிரதிகா 67 பந்துகளில் 61 ரன்களை எடுத்து தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார்.
ஹர்மன்பிரீத் கவுர் 121 பந்துகளில் 126 ரன்களை விளாசினார். பிறகு களமிறங்கிய தீப்தி ஷர்மா அதிரடியாக ஆடி 86 பந்துகளில் 106 ரன்களை விளாசினார். இதனால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 328 ரன்களை குவித்தது.
சற்றே கடின இலக்கை துரத்திய ஜிம்பாப்வே மகளிர் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் தொடக்க வீரான லோரின் ஃபிரி 6 ரன்களுக்கு அவுட் ஆனார். எனினும், அடுத்தடுத்து வந்தவர்கள் ரன் குவிப்பில் கவனம் செலுத்தினர். மொடெஸ்டர் 49 ரன்களும், சிபோ முகெரி-டிரிபானோ 46 ரன்கள், பிலொவ்டு 34 ரன்கள், கேப்டன் ஜோசஃபைன் 22 ரன்கள் நயாஷா 20 ரன்கள் எடுத்தனர்.
எனினும், அடுத்தடுத்து களமிறங்கியவர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் ஜிம்பாப்வே மகளிர் அணி 48.5 ஓவர்களில் 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், இந்திய அணி 121 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய வைஷ்ணவி 4 விக்கெட்டுகளையும், தீப்தி ஷர்மா 3 விக்கெட்டுகளையும், சயாலி, ஜிந்திமணி மற்றும் ஸ்ரீசராணி தலா 1 விக்கெட் கைப்பற்றினர். இன்றைய வெற்றி மூலம் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.