

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. விராட் கோலி, சுப்மன் கில் சதம் விளாசினர்.
இந்த நிலையில் 2-வது போட்டி கவுகாத்தியில் இன்று மதியம் தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தொடங்கியது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜான் கேம்ப்பெல், கார்ட்டி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கார்ட்டி 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ஷாய் ஹோப் களம் இறங்கினார்.
ஜான் கேம்ப்பெல் அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் 2 சிக்ஸ், 7 பவுண்டரிகளுடன் அரைசதம் விளாசினார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 10 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் குவித்தது.
அரைசதத்தை தொடர்ந்து கேம்ப்பெல் சிறப்பாக விளையாடி சதம் விளாசினார். அவர் 65 பந்தில் 9 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் சதம் விளாசினார். வெஸ்ட் இண்டீஸ் வீரரின் 5-வது அதிவேக சதம் இதுவாகும்.
தொடர்ந்து விளையாடிய அவர் 68 பந்தில் 101 ரன்கள் எடுத்த நிலையில் குர்னூர் பிரார் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது வெஸ்ட் இண்டீஸ் 18.1 ஓவரில் 147 ரன்கள் குவித்திருந்தது. அவர் ஆட்டமிழந்தாலும் கேப்டன் ஷாய் ஹோப் நிலைத்து நின்று விளையாடி வருகிறார்.
ஜான் கேம்ப்பெல் முதல் போட்டியில் அரைசதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.