டி20 தொடருக்கு முன் ஒருநாள் தொடர் நடைபெற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும்: சுப்மன் கில்

அனைத்து போட்டிகளிலும் முன்னணி வீரர்கள் விளையாட விரும்புகிறேன்.
சுப்மன் கில்
சுப்மன் கில்
Published on: 

இந்தியா- நியூசிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. இதற்கு முன்னதாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 3-2 எனக் கைப்பற்றியது.

ஒருநாள் தொடர் முடிவடைந்த உடன் இரண்டு போட்டிகள் டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. அடுத்த வருடம் தென்ஆப்பிரிக்காவில் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முன்னேற வேண்டியுள்ளது. இரண்டிற்கும் நியூசிலாந்து தொடர் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

பும்ராவுக்கு ஒருநாள் தொடரில் ஓய்வு

ஆனால் போட்டிகள் தொடர்ந்து நடத்தப்படுவதால் வீரர்கள் இடைவெளியின்றி விளையாட வேண்டியுள்ளது. இதனால் ஒருநாள் தொடர் முழுவதும் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர் டெஸ்ட் தொடரில் விளையாடுவார். அதேபோல் சுப்மன் கில் கடைசி இரண்டு போட்டிகளில் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டி20 தொடருக்கு முன்னதாக 50 ஓவர் கிரிக்கெட் நடத்தப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அனைத்து வீரர்களும் இரண்டு தொடர்களிலும் விளையாடியிருப்பார்கள் என்று இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சுப்மன் கில் கூறியதாவது:-

ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய இரண்டு தொடர்களுமே மிக முக்கியமானவை. என் கையில் அதிகாரம் இருந்து, அனைத்து வீரர்களும் உடல் தகுதியுடன் இருந்திருந்தால், உலக கோப்பையில் விளையாடத் திட்டமிட்டுள்ள அனைத்து வீரர்களையும் முழு ஒருநாள் தொடரிலும் களமிறக்க விரும்பியிருப்பேன். ஆனால், இரண்டு டெஸ்ட் போட்டிகளும் மிக முக்கியமானவை.

இரண்டு தொடர்களுக்கும் இடையில் இடைவெளி மிகக் குறைவு

முதலில் ஒருநாள் போட்டிகள், பிறகு டி20 அதன் பின் டெஸ்ட் போட்டிகள் என வரிசை அமைந்திருந்தால், நாங்கள் எங்களது வலிமையான அணியுடன் ஐந்து ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியிருக்க முடியும். ஆனால், ஒருநாள் தொடருக்கும் டெஸ்ட் போட்டிகளுக்கும் இடையிலான இடைவெளி மிகக் குறைவாக இருந்ததால், எங்களால் அவ்வாறு செய்ய முடியவில்லை.

ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான தொடர் மிகவும் சுவாரஸ்யமாக அமைந்தது, இது புள்ளிப்பட்டியலில் ஒரு நல்ல சமநிலையை ஏற்படுத்தியுள்ளது. இங்கே நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் நாங்கள் சிறப்பாகச் செயல்பட்டு, அதன் பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டால், இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பு எங்களுக்குக் கிடைக்கும்.

இரண்டு தொடர்களும் முக்கியமானவை

ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய இரண்டு தொடர்களுமே மிக முக்கியமானவை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, டி20 தொடருக்கும் டெஸ்ட் தொடருக்கும் இடையில் ஒருநாள் போட்டிகள் நடைபெறுவதால், டெஸ்ட் அணியில் உள்ள வீரர்கள் கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

X