2027 உலகக் கோப்பைக்கு நேரடித் தகுதி பெற்றது ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் சார்பில் சிறப்பாக பந்துவீசிய கசன்ஃபர் மற்றும் ரஷித் கான் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Afghanistan Win
Published on

அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், 2027-ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு ஆப்கானிஸ்தான் அணி நேரடித் தகுதியை உறுதி செய்தது.

அயர்லாந்து நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்ட நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்தது.

இந்த நிலையில் இரு அணிகள் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி பெல்ஃபாஸ்ட்-இல் நடந்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து பேட்டிங் ஆடிய அயர்லாந்து அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ஆப்கானிஸ்தான் வெற்றி:

அந்த அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கிய ஆன்டி பால்பிர்னி 7 ரன்களுக்கும், கேப்டன் பால் ஸ்டிர்லிங் 23 ரன்களுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து வந்த கேட் கார்மைக்கேல் 32 ரன்களை எடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்தவர்களில் கவின் ஹூயி அதிகபட்சமாக 36 ரன்களும், ஜெய் மூந்த்ரா 31 ரன்களையும் அடித்தனர்.

இறுதியில் 46.3 ஓவர்கள் முடிவில் 206 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது. ஆப்கானிஸ்தான் சார்பில் சிறப்பாக பந்துவீசிய கசன்ஃபர் மற்றும் ரஷித் கான் தலா 3 விக்கெட்டுகளையும், யாமின் அகமதுசாய் 2 விக்கெட்டுகளையும், ஃபசல்ஹக் பரூக்கி மற்றும் அசமதுல்லா ஓமர்சாய் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

எளிய இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்க வீரர்களான ரஹ்மதுல்லா குர்பாஸ் சிறப்பாக ஆடி 71 ரன்களை எடுத்தார். அடுத்து வந்தவர்களில் செய்திகுல்லா அடல் 27 ரன்களும், ஹஷ்மதுல்லா ஷாஹிதி 22 ரன்களும், ரஷித் கான் 37 ரன்களும் அடித்தனர். முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 44.5 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் வித்தியாசத்தில் 207 ரன்களை எடுத்து மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நேரடி தகுதி:

தற்போது தரவரிசையில் 8-ஆவது இடத்தில் உள்ள ஆப்கானிஸ்தான், இதன் மூலம் அடுத்த ஆண்டு தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு நேரடி தகுதியை பெற்றது.

உலகக் கோப்பை தகுதிக்கு ஒரு வெற்றி மட்டுமே தேவை என்ற நிலையில் இந்தப் போட்டிக்கு வந்த ஆப்கானிஸ்தான் அணி, ஏற்கனவே இரண்டாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்தை 92 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் ஆப்கானிஸ்தான் பங்கேற்பது இது நான்காவது முறையாகும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com