

சீன ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பீஜிங் நகரில் நடந்தது. இதில் பெண்கள் ஒற்றையரில் நேற்று அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான சீனாவின் கின்வென் ஜாங், பிரெஞ்சு ஓபன் சாம் பியனான மிரா ஆன்ட்ரீவாவுடன் (ரஷியா) மல்லுக்கட்டினார்.
முதல் செட்டில் 5-5 என்று வரை நீயா-நானா என கடும் சவால் நீடித்தது. 11-வது கேமில் ஆன்ட்ரீவாவின் சர்வீசை முறியடித்த ஜாங், அந்த செட்டை வசப்படுத்தினார்.
2-வது செட்டிலும் ஆக்ரோஷமாக ஆடிய அவர்கள் 4-4 என சமநிலையில் இருந்தனர். அதன் பிறகு அடுத்த இரு கேம்களில் ஜாங்கின் கை ஓங்கியது. இறுதியில் ஒரு ஏஸ் சர்வீசுடன் வெற்றிக்கனியை பறித்தார்.
ஒரு மணி 43 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தின் முடிவில் கின்வென் ஜாங் 7-5, 6-4 என்ற நேர் செட்டில் ஆன்ட்ரீவாவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை உச்சி முகர்ந்தார்.
22 ஆண்டுகால சீன ஓபன் டென்னிஸ் வரலாற்றில் சீன வீராங்கனை ஒருவர் மகுடம் சூடுவது இதுவே முதல் முறையாகும். மொத்தத்தில் இது அவரது 6-வது பட்டமாகும்.
கின்வென் ஜாங்குக்கு ரூ.11 கோடி பரிசும், ஆயிரம் தரவரிசை புள்ளிகளும் கிடைத்தது. ஆன்ட்ரீவா ரூ.6 கோடியை பரிசாக பெற்றார்.
உலக தரவரிசையில் 54-வது இடம் வகிக்கும் 24 வயதான கின்வென் ஜாங் இந்த வெற்றியின் மூலம் இன்று வெளியாகும் புதிய தரவரிசையில் முதல் 30 இடங்களுக்குள் நுழைகிறார்.
சீனாவில் நடந்து வரும் ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்க ஓபன் சாம்பியனும், 2-ம் நிலை வீரருமான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 6-4, 6-7 (8-10), 6-3 என்ற செட் கணக்கில் குயன்டின் ஹேலிசை (பிரான்ஸ்) தோற்கடித்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
இந்த ஆண்டில் அவர் ருசித்த 60-வது வெற்றி இதுவாகும். அலெக்ஸ் டி மினார் (ஆஸ்திரேலியா). ஜாக்குப் மென்சிக் (செக்குடியரசு), ஹூபெர்ட் ஹர்காக்ஸ் (போலந்து), கரண் கச்சனோவ் (ரஷியா), டேவிடோவிச் போகினா (ஸ்பெயின்) ஆகியோரும் தங்களது ஆட்டத்தில் வெற்றி பெற்றனர்.
அதே சமயம் 4-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பென் ஷெல்டன் 6-7 (5-7), 6-7 (3-7) என்ற செட்டில் பிரான்சின் ஆர்துர் கியாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.