

இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பட்லர் மற்றும் அந்நாட்டின் முன்னாள் வேகப்பந்து வீரர் ஸ்டுவர்ட் பிராட் ஆகியோர் 21-ம் நூற்றாண்டின் சிறந்த டாப் 10 பந்து வீச்சாளர்களை தேர்ந்து எடுத்துள்ளனர்.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ராவுக்கு 3-வது இடத்தை அளித்துள்ளனர். ஆஸ்திரேலியாவை சேர்ந்த மெக்ராத், இலங்கையை சேர்ந்த சுழற்பந்து ஜாம்பவான் முரளிதரன் ஆகியோரை பின்னுக்கு தள்ளி அவர்கள் பும்ராவை 3-வது இடத்தில் வைத்துள்ளனர்.
நவீன கிரிக்கெட் உலகில் சிறந்த பந்து வீச்சாளரான பும்ரா 243 போட்டிகளில் விளையாடி 511 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். 18 முறை 5 விக்கெட்டுக்கு மேல் எடுத்துள்ளார்.
இந்த பட்டியலில் ஆஸ்திரேலியாவின் மறைந்த சுழற்பந்து வீரர் வார்னே முதல் இடத்தில் உள்ளார். இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 2-வது இடத்தில் உள்ளார்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த மெக்ராத், கம்மின்ஸ் ஆகியோர் 4-வது மற்றும் 5-வது இடங்களில் உள்ளனர். சர்வதேச போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவரான இலங்கை வீரர் முரளிதரனை அவர்கள் 6-வது இடத்தில் வைத்துள்ளனர்.
முரளிதரன் 1,347 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். 20 ஆண்டுகால அவரது பயணத்தில் உலக கோப்பை (1996), ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியை (2002) வென்றுள்ளார்.
தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த ஸ்டெய்ன் 7-வது இடத்திலும், ரபடா 8-வது இடத்திலும், பெல்லாக் 9-வது இடத்திலும், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீரர் ஸ்டார்க் 10-வது இடத்துக்கு தேர்வாகி உள்ளனர்.