

ஆசிய விளையாட்டு போட்டிகளில் தனிநபர் பிரிவில் இந்திய வீரர், வீராங்கனைகள் ஏமாற்றம் அளித்தாலும், அணிகள் பிரிவில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.
ஜப்பானின் அய்சி-நகோயா நகரில் நடைபெற்ற 20-வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா சார்பில் 495 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். 36 விளையாட்டுகளில் பங்கேற்றனர்.
இந்த முறை இந்திய அணி 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் என மொத்தம் 85 பதக்கங்கள் வென்று பதக்கப் பட்டியலில் 4-வது இடம் பிடித்தது.
கடந்த முறை 100-க்கும் மேற்பட்ட பதக்கங்களைக் குவித்து இந்தியா புதிய சாதனை நிகழ்த்தியது. ஆனால் இந்த முறை அந்த இலக்கை தொட முடியவில்லை.
கடந்த ஆசிய விளையாட்டை விட தற்போது பதக்கங்களின் எண்ணிக்கை குறைந்தது மிகப்பெரிய ஏமாற்றமே. 2023-ம் ஆண்டு சீனாவின் ஹாங்சோ நகரில் நடந்த ஆசிய போட்டியில் 28 தங்கம், 38 வெள்ளி, 40 வெண்கலம் ஆக மொத்தம் 106 பதக்கம் பெற்று இருந்தது.
கடந்த முறையைவிட தற்போது 21 பதக்கம் குறைந்துள்ளது. குறிப்பாக, தங்கத்தில் 7 பதக்கத்தை இழந்துள்ளோம். தனி நபர் பிரிவில் இந்த முறை ஏமாற்றம் அளித்தது. அதே நேரத்தில் அணிகள் பிரிவில் அபாரமாக செயல்பட்டுள்ளது.
கடந்த ஆசிய விளையாட்டில் தடகளத்தில் 6 தங்கம் உள்பட 29 பதக்கம் கிடைத்தது. தற்பாது 1 தங்கம் உள்பட 24 பதக்கமே பெற்றுள்ளது. தனிநபர் பிரிவில் ஒரு தங்கம் கூட இந்த முறை கிடைக்காதது பரிதாபமே. கடந்த முறை தனிநபர் பிரிவில் மட்டும் 5 தங்கம் கிடைத்தது. இதேபோல் துப்பாக்கிச் சுடுதலிலும் பின்னடைவு காணப்பட்டது.
கடந்த ஆசிய விளையாட்டில் 7 தங்கம் உள்பட 22 பதக்கம் கிடைத்தது. தற்போது 3 தங்கமே கிடைத்தது. துப்பாக்கிச் சுடுதலில் மட்டும் 7 பதக்கம் குறைந்துள்ளது.
ஸ்குவாஷ், பேட்மிண்டன், டென்னிஸ், குதிரையேற்றம் ஆகிய விளையாட்டுகளில் கடந்த முறை தலா 1 தங்கம் கிடைத்தது. ஆனால் இந்த முறை இந்த விளையாட்டுகளில் தங்கம் கிடைக்கவில்லை. அதேநேரத்தில் குத்துச்சண்டை, மல்யுத்தம், கோல்ப் ஆகிய போட்டிகளில் தங்கம் கிடைத்துள்ளது. கடந்த தடவை இந்த விளையாட்டுகளில் தங்கம் கிடைக்கவில்லை.
இந்தியாவுக்கு அதிக தங்கப்பதக்கம் கிடைத்தது வில்வித்தை போட்டியில்தான். இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் கடந்த ஆசிய விளையாட்டை போலவே இந்த முறையும் அதே மாதிரி 5 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் ஆக மொத்தம் 9 பதக்கம் கிடைத்தது.
வில்வித்தைக்கு அடுத்தபடியாக குத்துச்சண்டையில் 3 தங்கம் உள்பட 6 பதக்கமும், மல்யுத்தத்தில் 2 தங்கம் உள்பட 6 பதக்கமும் வந்தன.
கடந்த தடவை போலவே கிரிக்கெட், கபடியில் ஆண்கள், பெண்கள் என 2 பிரிவிலும் தங்கம் கிடைத்தது. ஹாக்கியைப் பொறுத்தவரை கடந்த முறை ஆண்கள் பிரிவில் முதலிடத்தைப் பிடித்தது. இந்த முறை ஆண்கள், பெண்கள் என இரண்டு பிரிவிலும் தங்கம் கிடைத்தது. 44 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மகளிர் ஹாக்கி அணி ஆசிய விளையாட்டில் சாதித்தது.
துப்பாக்கிச் சுடும் வீராங்கனை நீருதண்டா, வில்வித்தை வீராங்கனைகள் கும்கும் மோஹோக், சிகிதா தனிபார்த்தி, வில்வித்தை வீரர் சதீல் யாதவ் ஆகியோர் தலா 2 தங்கம் வென்றனர். அவர்கள் தனிநபர் பிரிவிலும், அணிகள் பிரிவிலும் சாதித்தனர். இதில் நீரு தண்டா, கும்கும் ஆகியோர் வெள்ளிப் பதக்கமும் பெற்றனர். இருவரும் மொத்தம் 3 பதக்கம் பெற்று முத்திரை பதித்தனர்.
தமிழகத்தைச் சேர்ந்த வித்யா 1 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் ஆக மொத்தம் 3 பதக்கம் வென்று பெருமை சேர்த்தார். அவர் 400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டத்தில் வெண்கலம் வென்றார். 4x400 மீட்டர் பெண்கள் தொடர் ஓட்டத்தில் தங்கமும், 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் வெள்ளியும் பெற்றார்