

2027 ஐ.பி.எல். சீசனுக்கான மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந்தேதி கோவாவில் நடைபெறுகிறது. இதற்கான வீரர்கள் தக்கவைப்பு விவரங்களை வருகிற 17-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று 10 அணிகளுக்கும் ஐ.பி.எல். நிர்வாகம் காலக்கெடு விதித்துள்ளது.
இதைத் தொடர்ந்து வீரர்களுக்கான பரிமாற்ற வர்த்தக பேச்சுவார்த்தையில் ஒவ்வொரு அணியும் ஈடுபட்டு வருகின்றன. இதுவரை 10 வீரர்கள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே ஐ.பி.எல். மினி ஏலத்தில் 7 வங்காளதேச வீரர்கள் பதிவு செய்துள்ளார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. வங்காளதேச கிரிக்கெட் வாரியம் இதை உறுதிப்படுத்தியது. ஐ.பி.எல். மினி ஏலத்துக்கு முன்பு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) பல்வேறு கிரிக்கெட் வாரியங்களை தொடர்பு கொள்வது வழக்கம்.
அதேமாதிரி தற்போது பி.சி.சி.ஐ. தொடர்பு கொண்டது. வங்காளதேச கிரிக்கெட் வாரியமும் அந்த பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி முஷ்டாபிசுர் ரகுமான், நகீத் ரானா, ரிஷாத் உசேன், ஹசன் மகமூத், தவ்ஹித் ஹர்தோய், தஷ்கின் அகமது, ஷோரிபுல் இஸ்லாம் ஆகிய 7 வங்காள தேச வீரர்கள் மினி ஏலத்தில் தங்களது பெயர்களை பதிவு செய்கிறார்கள்.
கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஐ.பி.எல். மினி ஏலத்தில் வங்காள தேச வேகப்பந்து வீரரான முஷ்டாபிசுர் ரகுமானை ரூ.9.20 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஏலத்தில் எடுத்தது.
வங்காள தேசத்தில் நடந்த கலவரத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டதை தொடர்ந்து ஐ.பி.எல். போட்டியில் முஷ்டாபிசுர் ரகுமான் பங்கேற்க இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து கொல்கத்தா அணி நிர்வாகம் அவரை விடுவித்தது.
இதை தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பையை வங்காளதேசம் புறக்கணித்தது. தங்கள் போட்டியை இலங்கைக்கு மாற்றுமாறு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விடுத்த வேண்டுகோளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நிராகரித்தது.
இதை தொடர்ந்து வங்காளதேசம் 20 ஓவர் உலக கோப்பையில் இருந்து விலகியது. அந்த அணிக்கு பதிலாக ஸ்காட்லாந்து கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்டது.
முஷ்டாபிசுர் ரகுமானின் 10 மாத சர்ச்சைக்கு பிறகு வங்காளதேச வீரர்கள் 7 பேர் ஐ.பி.எல். மினி ஏலத்தில் பதிவு செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.