

ஆசிய போட்டிகள் வரலாற்றில் மிக இளம் வயதில் தங்கம் வென்ற பெருமையை ஜப்பானை சேர்ந்த 11 வயது சிறுவன் பெற்றுள்ளான்.
ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரில் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் இ-ஸ்போர்ட்ஸ் போட்டிகளும் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில் 'புயோ - புயோ சாம்பியன்ஸ்' போட்டியில் 11 வயது ஜப்பான் சிறுவன் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளான்.
'புயோ புயோ' என்பது உலகப் புகழ்பெற்ற ஒரு புதிர் விளையாட்டு ஆகும். செல்போனில் காணப்படும் பபுள் ஷூட்டர் கேம் போல ஒரே நிறத்திலான பபுள்களை ஒன்றிணைக்கும் போட்டி இது.
வீரர்களின் விரைவான சிந்தனை மற்றும் புத்திசாலித்தனத்தை சோதிக்கும் இந்த விளையாட்டு, இந்த ஆண்டு ஜப்பான் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முதன்முறையாக அதிகாரப்பூர்வ போட்டி நிகழ்வாக அறிவிக்கப்பட்டது.
ஜப்பானை சேர்ந்த 11 வயது சிறுவன் குரிஹாரா, புயோ - புயோ சாம்பியன்ஸ் இறுதிப்போட்டியில் தென் கொரியாவின் 24 வயதான காங் டோங்ஷினை 10-2 என்ற கணக்கில் வீழ்த்தி குரிஹாரா தங்கப் பதக்கத்தை வென்றார்.
முன்னதாக அரையிறுதிப் போட்டியில் தாய்லாந்தின் 28 வயதான தனரக் வோங்கிட்குனை 10-1 என்ற கணக்கில் வீழ்த்தி குரிஹாரா இறுதிப் போட்டிக்கு முன்னேயிருந்தது குறிப்பிடதக்கது.
"வென்றதில் மகிழ்ச்சி. தங்கப் பதக்கம் பார்க்க மிகவும் அழகாகவும் பளபளப்பாகவும் உள்ளது," என 11 வயது குரிஹாரா தனது வெற்றி பற்றி குறிப்பிடுகிறார்.
பதக்க நம்பிக்கையுடன் அதே போட்டியில் பங்கேற்ற இந்தியாவின் நட்சத்திர விளையாட்டாளர் பரிதோஷ், சிறப்பாக விளையாடிய போதிலும் காலிறுதிச் சுற்றில் வெளியேற்றப்பட்டார்.
குரிஹாரா தனது ஆரம்பப் பள்ளியின் முதல் வகுப்பில் படிக்கும்போதே புயோ புயோ விளையாடத் தொடங்கினார். பின்னர் அவர் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றார்.
மேலும், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தனது தொழில்முறை வீரருக்கான உரிமத்தையும் பெற்றார்.
மூத்த வீரர்களைத் தொடர்ந்து தோற்கடிக்கும் ஒரு வீரராக குரிஹாரா தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகிறார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் வரலாற்றில் மிக இளம் வயதில் பதக்கம் வென்றவர்கள் குறித்த விரிவான அதிகாரப்பூர்வப் பதிவு எதுவும் இல்லை.
இருப்பினும் இந்த போட்டியில் வென்றதன் மூலம் குரிஹாரா , ஆசிய கோப்பை வரலாற்றில் தங்கப் பதக்கம் வென்ற மிக இளம் வயது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
2018 ஜகார்த்தா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், 12 வயதான இந்தோனேசிய வீராங்கனை புங்கா நிமாஸ் பெண்கள் ஸ்கேட்போர்டிங் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
2023 ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், 13 வயதான சீன வீராங்கனை குய் சென்ஷி பெண்கள் ஸ்ட்ரீட் ஸ்கேட்போர்டிங் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.