2026 வார ராசிபலன்- தனுசு, மகரம், கும்பம், மீனம்

அதிக அளவில் முதலீடு செய்யக்கூடிய நல்ல தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள்
rasipalan
Published on

தனுசு

எண்ணங்கள் விருப்பங்கள் நிறைவேறும் வாரம். லாப ஸ்தானத்தில் சுக்கிரன் ஆட்சி பலம் பெறுகிறார். இதுவரை காதல் திருமணத்திற்கு தடை விதித்த பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிப்பார்கள். திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்த தம்பதிகள் சேர்ந்து வாழக்கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும். திருமணம் ஆன தம்பதிகள் மகிழ்ச்சியுடன் நிம்மதியாக வாழ்வார்கள். விவாகரத்து வழக்குகள் தள்ளுபடி ஆகும். நண்பர்கள் தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்கள் வாழ்க்கை துணை ஆகியவர்களால் சகாயமான பலன்கள் நடக்கும். கூட்டுத் தொழிலில் நிலவிய பகைமை மறையும். அதிக அளவில் முதலீடு செய்யக்கூடிய நல்ல தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள். சமுதாய அங்கீகாரம் கூடும். செல்வாக்கு புகழ் அந்தஸ்தை அதிகரிக்க கூடிய நல்ல சந்தர்ப்பங்கள் தேடி வரும். சமுதாய அந்தஸ்து நிறைந்த புதிய நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். சிலருக்கு இரண்டாவது குழந்தை பிறக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட குறைபாடுகள் சீராகும். ஆனந்தத்தையும் அதிகரிக்க கற்பக விநாயகரை வழிபடவும்.

மகரம்

மனதில் தெளிவு பிறக்கும் வாரம். ராசிக்கு உச்ச குரு மற்றும் நீச்ச செவ்வாயின் பார்வை உள்ளது. புதிய தெளிவான சிந்தனைகளின் மூலம் முடிவுகளை எடுப்பீர்கள். இலக்கை நிர்ணயம் செய்வீர்கள். லட்சியத்தை அடைய அதிகம் உழைக்க நேரும். செய்தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அரசாங்க பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். கடன் தொடர்பான சர்ச்சைகள் முழுமையாக விலகி தொழிலில் பல்வேறு வெற்றிகளை அடைவீர்கள். தொழிலில், நிலவி வந்த சிக்கல்கள் நீங்கும். அதிக முதலீடு கொண்ட செயல்களைத் தவிர்க்கவும். இயன்றவரை வேலையை மாற்றாமல் இருப்பது நல்லது. தந்தை வழிச் சொத்துக்களில் உடன் பிறந்தவர்களுடன் சிறு பிணக்கு மன பேதம் தோன்றும். சுபச் செய்திகளால் சுபவிரயங்கள் ஏற்படும். பெண்கள் நண்பிகள் மற்றும் உறவுகளுக்கு தங்க நகைகளை இரவல் கொடுக்க கூடாது. சிலருக்கு இடப் பெயர்ச்சியால் நல்ல மாற்றமும், முன்னேற்றமும் ஏற்படும். ராகு கேதுவின் சஞ்சாரம் சற்று சாதகமற்று இருப்பதால் கோட்சார ரீதியாக திருமணத் தடை ஏற்படலாம். மேலும் பல பாக்கியங்களை அடைய மகாலட்சுமியை வழிபடவும்.

கும்பம்

புதிய வாய்ப்புகள் உருவாகும் வாரம். பாக்கிய ஸ்தான அதிபதி சுக்கிரன் ஆட்சி பலம் பெறுகிறார். சிந்தனைகளின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும். எண்ணற்ற புதிய வாய்ப்புகள் தேடி வரும். கடின உழைப்பு லாபத்தை ஈட்டித்தரும். தொழிலில் கூட்டாளிகளால் சாதகமான சூழல் ஏற்பட்டு தனலாபம் அடைவீர்கள். உள்நாட்டு பணம், வெளிநாட்டு பணம் என உங்கள் கையில் தாராளமாக பணம் புழங்கும். எதிர்பாராத சில விரயங்கள் ஏற்பட்டாலும் இது நல்ல எதிர்காலத்திற்கான அஸ்திவாரமாக அமையும். வாழ்நாள் லட்சியமான கவுரவப் பதவிகள் தேடி வரும். திருமண முயற்சிகள் வெற்றியில் முடியும். குரு மற்றும் ராகு கேதுக்கள் சொத்துகள் தொடர்பான விசயத்தில் சிறு மன உளைச்சலைத் தரலாம். சுய ஜாதக தசா புக்திக்கு ஏற்ப வீடு, வாகன முயற்ச்சியில் ஈடுபடுவது நல்லது. 13.9.2026 அன்று பின்னிரவு 1.26 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிரிகளையும், நம்பிக்கை துரோகிகளையும் அடையாளம் காண்பிப்பார்கள். பலருக்கு வெளியூர், வெளிநாட்டிற்கு சென்று பிழைப்பு நடத்தும் சூழ்நிலை உண்டாகும். சுப பலன்களை அதிகரிக்க, தினமும் பால முருகனை வழிபடவும்.

மீனம்

அதிர்ஷ்டத்தின் மேல் ஆர்வம் கூடும் வாரம். ராசி அதிபதி குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் 2,9ம் அதிபதி செவ்வாயுடன் இணைந்து குரு மங்கள யோகத்தை ஏற்படுத்திகிறார். உழைப்பின் மேல் ஆர்வம் குறைந்து அதிர்ஷ்டத்தை நோக்கி பயணிக்கும் எண்ணம் மேலோங்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வியாபாரிகளுக்கு அரசின் மானியம் கிடைக்கும். வியாபாரத்தில் நிலவி வந்த எதிர்ப்புகள் விலகும்.ஏற்றுமதி, இறக்குமதி வணிகர்களுக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். ஜென்மச் சனியின் காலம் என்பதால் உடலையும் மனதையும் கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பது நல்லது. மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கும். குலதெய்வ பிரார்த்தனைகள் நிறைவேறும். காதல் விவகாரங்கள் வெற்றியை தரும். 13.9.2026 அன்று பின்னிரவு 1.26 முதல் 16.9.2026 காலை 10.49 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிறு சோர்வு, அசதி அலுப்பு அவ்வப்போது தோன்றி மறையும். கண் திருஷ்டி, போட்டி-பொறாமை போன்றவற்றால் வைத்தியச் செலவு உருவாகும். பேச்சில் நிதானமும் பொறுமையும் தேவை. சுப பலனை அதிகரிக்க ஆஞ்சநேயரை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com