புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் பக்தர்கள் கொட்டும் மழையிலும் நீண்ட வரிசையில் நின்று தரிசனம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று தனி நபர் அர்ச்சனைகள், விசேஷ பூஜைகள் ரத்து செய்யப்பட்டது.
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் பக்தர்கள் கொட்டும் மழையிலும் நீண்ட வரிசையில் நின்று தரிசனம்
Published on
Summary

புதுச்சேரி நகர பகுதியில் இன்று அதிகாலை இடியுடன் லேசான மழை பெய்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் மணக்குள விநாயகரை தரிசனம் செய்தனர்.

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தங்க கவசம் அணிவிப்பு

விநாயகர் சதுர்த்தியையொட்டி புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 5 மணிக்கு மணக்குள விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கும் தங்க கவசம், உற்சவருக்கும் தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. வண்ண விளக்குகள் மற்றும் புஷ்ப அலங்காரத்தில் மணக்குள விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று தனி நபர் அர்ச்சனைகள், விசேஷ பூஜைகள் ரத்து செய்யப்பட்டது. பக்தர்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்யும் வகையில், சர்வ திவ்ய தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, தடுப்பு கட்டைகளும் அமைக்கப்பட்டிருந்தது. இன்று அதிகாலை முதலே மணக்குள விநாயகரை தரிசிக்க பக்தர்கள் திரண்டனர். நீண்ட கியூ வரிசையில் நின்று தர்ம தரிசனத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ரூ.100 கட்டணம் செலுத்தியும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். புதுச்சேரி நகர பகுதியில் இன்று அதிகாலை இடியுடன் லேசான மழை பெய்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் மணக்குள விநாயகரை தரிசனம் செய்தனர்.

லட்டு பிரசாதம்

அனைத்து பக்தர்களுக்கும் இடைவிடாது லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது. மதியம் 2 மணிக்கு நடை சாத்தப்பட்டு, 3 மணிக்கு பூஜைகளுடன் மீண்டும் நடை திறக்கப்படுகிறது. இரவு 10 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com