

தனுசு ராசியினரே திருக்கணித பஞ்சாங்கப்படி 5.12.2026 அன்று முதல் அஷ்டம ஸ்தானத்திற்குள் கேது பகவானும் தனம், வாக்கு குடும்ப ஸ்தானத்திற்குள் ராகு பகவானும் நுழைகிறார்கள். இந்த ஒன்றரை ஆண்டில் சனிபகவான் மீனம் மற்றும் மேஷ ராசியில் சஞ்சரிப்பார். குருபகவான் கடகம், சிம்மம், கன்னி ஆகிய ராசிகளில் பயணிப்பார்.
இரண்டாமிடமான தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு நுழையும் ராகுவால் உங்களின் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட போகிறது. தனுசு ராசியினர் வாழ்க்கையில் செட்டிலாகும் காலம் வந்துவிட்டது.இதுவரை வேலை இன்மை மட்டும் வியாபார ஏற்ற இறக்கத்தால் பொருளாதார நெருக்கடி மற்றும் மன உளைச்சலை சந்தித்த நீங்கள் தாராளமான தன வரவை பார்ப்பீர்கள். உங்களின் திடீர் வளர்ச்சி அண்டை அயலார் மற்றும் உற்றார் உறவினர்கள் மத்தியில் தனி அந்தஸ்த்தை பெற்றுத்தரும். பேச்சை தொழிலாக கொண்டவர்களின் பெயர், புகழ், செல்வாக்கு அதிகரிக்கும். வெளிநாட்டு வேலை அல்லது தொழில் மூலம் வாழ்வாதாரம் உயரும். வேற்று மத, இன அல்லது மொழி பேசுபவர்களின் நட்பு கிடைக்கும் அல்லது வாழ்க்கைத் துணை கிடைக்கலாம். அந்திய மொழியை கற்பதில் ஆர்வம் மிகும். அந்நிய மொழி பேசுபவரால் குடும்பத்தில் நிம்மதி குறைவு ஏற்படலாம். இது வாக்கு தோஷம் அதிகரிக்கும் காலம் என்பதால் பேச்சில் நிதானம் தேவை. நிறைவேறாத நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை யாருக்கும் கொடுக்கக் கூடாது. தொழில் மற்றும் உத்தியோக விசயமாக குடும்பத்தை பிரிந்து செல்ல நேரும்.
தனுசு ராசிக்கு 5,12ம் அதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திர சாரத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கும் காலம் நீண்ட நாட்களாக தடைபட்ட குல தெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் முயற்சி வெற்றி தரும். இதுவரை கிடப்பில் கிடந்த பூர்வீக சொத்து தொடர்பான விசயங்களை பேசி முடிக்கும் ஆர்வம் ஏற்படும். எந்த வேலை செய்தாலும் ஆத்மார்த்த ஈடுபாட்டுடன் செய்யவிடமால் ராகு உங்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பார் என்பதால் ஆழ்மனதை கட்டுப்படுத்தும் யோகா, மூச்சுப் பயிற்சி, தியானம் மிக அவசியம். சிலர் குழந்தை பிறப்பிற்கு வைத்தியம் செய்யலாம். பிள்ளைகளை சொந்த பொறுப்பில் கண்காணிக்க வேண்டும். பருவ வயதினர் தவறான காதல் வலையில் சிக்காமல் மனக்கட்டுப்பாடுடன் வாழ முயற்சிக்க வேண்டும். அழகு ஆடம்பர பொருட்கள் வாங்கி வீட்டை அழகு படுத்துவீர்கள். பங்குச்சந்தையில் ஆர்வம் கூடும்.
தனுசு ராசிக்கு அஷ்டமாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திர சாரத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கும் காலம் சந்திரனும் ராகுவும் பகை கிரகங்கள் என்பதால் சுப பலன்கள் குறைவாகவும் அசுப பலன்கள் அதிகமாகவும் இருக்கும். ஒரு சிலருக்கு விபரீத ராஜயோகம் செயல்பட்டு லாட்டரி, ரேஸ், பங்குச் சந்தை, இன்சூரன்ஸ் உயில் சொத்து மூலம் ஆதாயம் கிட்டும். ஆயுள் பயத்தை அதிகரிக்கும் நோய் தாக்கம் ஏற்ப்படலாம். அல்லது பரம்பரை நோய்களான சர்க்கரை, BP அறிகுறி தென்படலாம். வண்டி வாகனங்களில் நீண்ட தூர பிரயாணம் செய்யும் போது கவனம் தேவை. திருமண வாழ்க்கையில் நெருடல், மன வேதனை, களத்திரத்துடன் பிரச்சனை இருக்கும். தவறான வாழ்க்கை துணையை தேர்ந்து எடுப்பது அல்லது வாழ்நாள் முழுவதும் மன வேதனை தரும் மறு விவாகம் ஏற்படும். எனவே சிந்தனையில் கவனத்துடன் இருக்க வேண்டும்.
தனுசு ராசிக்கு பாக்ய ஸ்தான அதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கும் காலம் எந்த வகையில் யார் மூலம் பிரச்சனை வரும் என்று யோசிக்க முடியாத வகையில் ஒரு பிரச்சனை முடியும் முன்பு அடுத்த பிரச்சனை உருவாகும் என்பதால் பொறுமை, சகிப்புதன்மையுடன் இருக்க வேண்டும்.பெரிய நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்கள் தவறான ஒப்பந்தத்திற்கு கையெழுத்திடுவது, மதிப்பு குறைவான சொத்திற்கு அதிக கடன் கொடுப்பது போன்ற செயல்களில் பிரச்சனையை தாமாகவே தேடிக் கொள்வார்கள். நிர்வாகிகள் மனக் கட்டுப்பாட்டை கடைபிடிப்பது அவசியம்.குழந்தை பாக்கியத்தில் கால தாமதம் ஏற்படும். கண், இருதயம் தொடர்பான அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட தடை தாமதம் விலகி சிகிச்சை வெற்றியடையும். உங்கள் ஆழ் மனதில் இனம் புரியாத கவலை மனசஞ்சலம் அதிகரிக்கும்.
வயோதிகர்களுக்கு ஆயுள் பற்றிய சிந்தனை மிகுதியாகும். எந்த வேலை செய்தாலும் மன நிறைவு இருக்காது. பொய்யான வதந்திகளால் பெயர் கெடும். அவமானம் தேடி வரும். நேரத்திற்கு உண்ண உறங்க முடியாமல் வெறுமை உணர்வு உங்களை ஆட்டுவிக்கும். சுக போகத்தை கூட மனக் கஷ்டத்துடனேயே அனுபவிக்க நேரும்.வாழ்வின் நடந்த பல்வேறு அவமானங்களை நினைத்து மனம் வெறுத்து சிலர் இல்வாழ்க்கையில் இருந்து விடுபட்டு சந்நியாச மனநிலைக்கு தள்ளப்படுவார்கள். தனியாக அமைதியாக இருப்பதையே மனம் விரும்பும். புதிய கோர்ட், கேஸ் பிரச்சனை உருவாகலாம். பைல்ஸ், யூரினரி இன்பெக்சன், கல்லடைப்பு, ஹெர்னியா போன்ற அடிவயிறு மற்றும் கழிவு உறுப்புகள் தொடர்பான உடல் உபாதைகளை அதிகப்படுத்துவர் என்பதால் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. ஆக மொத்தத்தில் கேது பகவான் உங்களை சந்நியாச நிலைக்கு தள்ளுவதில் மிகவும் கவனமாக இருப்பார். மனிதன் பிறக்கும் போது பிரச்சனையும் உடன் பிறந்தது என்பதால் கடவுள் நம்பிக்கையுடன் சந்தோசமாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.
தனுசு ராசிக்கு 7,10ம் அதிபதியான புதனின் ஆயில்யம் நட்சத்திர சாரத்தில் கேது பகவான் சஞ்சரிக்கும் காலம் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நிதானமற்ற நிலையில் இருக்கும். அதிக பணம் வரும் போது துள்ளிக் குதிக்க கூடாது. நஷ்டம் ஏற்படும் போது மனம் உடைந்து உட்காரவும் கூடாது. ஏற்றம் இறக்கம் நிறைந்த மனித வாழ்க்கையில் எதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை வரவழைத்துக் கொண்டால் எந்த பிரச்சனையும் வராது. அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு கண் இமைக்கும் நேரத்தில் தவறான தொழில் முதலீட்டில் ஈடுபட நேரும். தொழில் தொடர்பான புதிய முயற்சிகளில் மிகுந்த கவனம் தேவை. உடன் வேலை பார்ப்பவர்கள் தாங்கள் செய்த தவறை உங்கள் மேல் திருப்பி விடலாம்.மேலதிகாரிகளிடம் அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சனை இல்லாமல் இந்த காலகட்டத்தை கடக்க முடியும்.
தனுசு ராசிக்கு 2,3ம் அதிபதியான சனியின் பூசம் நட்சத்திரத்தில் கேது பகவான் சஞ்சுரிக்கும் காலம் தைரியமும் தன்நம்பிக்கையும் உங்களை நல்ல முறையில் வழிநடத்தும் என்பதால் தேவையற்ற மனசஞ்சலத்தை வளர்க்க கூடாது. ஒரு சிலருக்கு பழைய லோனை அதிகரிக்க வேண்டிய குழ்நிலை ஏற்படலாம் அல்லது புதிதாக லோன் போடலாம். ஆவணங்கள் தொடர்பான விசயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். யாருக்கும் ஜாமீன் போடக்கூடாது. கடனால் கவலை ஏற்படும்.மிகக் குறிப்பாக உங்கள் இளைய சகோதர் மற்றும் தாய்மாமன் வகையில் சொத்து மற்றும் பாகப்பிரிவினை தொடர்பான வம்பு வழக்கு உங்களை காயப்படுத்தும். இது போன்ற மன சஞ்சலத்தினால் வீட்டை அல்லது தொழில் நிறுவனத்தை கூட மாற்றுவீர்கள் எனவே ஆவணங்களில் கையெழுத்திடும் முன்பு பலமுறை படித்து பார்த்த பிறகே கையெழுத்து இட வேண்டும்.
தனுசு ராசி அதிபதி மற்றும் நான்காம் அதிபதியான குருவின் புனர்பூசம் நட்சத்திர சாரத்தில் கேது பகவான் சஞ்சரிக்கும் காலம் வாடகை வீட்டில் குடி இருப்பவர்கள் குடியிருக்கும் வீட்டை சகாய விலைக்கு வாங்கி மகிழ்வீர்கள். கால்நடை வளர்ப்பவர்கள் விலங்குகளை கவனமாக பராமரிக்க வேண்டும். தாயின் அன்பும் ஆதரவும் நல் ஆசியும் கிட்டும். தாயாருக்கு உடல் ரீதியான தொந்தரவுகள் இருக்கும்.பூர்வீக சொத்து அல்லது தாய் வழி சொத்து வீடு, கட்டிடம் நிலம் போன்றவற்றில் வில்லங்கம் எல்லைத் தகராறு அவற்றின் பத்திரம் மற்றும் பட்டா போன்ற வற்றில் குழப்பங்கள் இருக்கும். அல்லது பாகப்பிரிவினையால் மன சங்கடம் அதிகரிக்கும். பழைய வாகனத்தை கொடுத்து புதிய இரண்டு சக்கர, நான்கு சக்கர வெள்ளை நிற சொகுசு வாகனம் வாங்குவீர்கள்.
எட்டாமிட கேதுவின் வலையில் இருந்து விடுபட ஜென்ம நட்சத்திர நாளில் விநாயகருக்கு நல்லெண்ணெய் விளக்கேற்றி கொள்ளு தானம் தரவும். சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்து விநாயகர் அஷ்டோத்திரம் மற்றும் விநாயகர் அகவல் படிக்க பொருளாதார மேன்மை உண்டாகும்.
வாழ்க்கையின் உண்மை புரிந்த மகர ராசியினரே! திருக்கணித பஞ்சாங்கப்படி 5.12.2026 அன்று முதல் சம சப்தம ஸ்தானத்திற்குள் கேது பகவானும் ராசிக்குள் ராகு பகவானும் நுழைகிறார்கள். இந்த ஒன்றரை ஆண்டில் சனிபகவான் மீனம் மற்றும் மேஷ ராசியில் சஞ்சரிப்பார். குருபகவான் கடகம், சிம்மம், கன்னி ஆகிய ராசிகளில் பயணிப்பார்.
ஜென்மத்தில் ராகு என்றவுடன் ஆழ்மனதில் கலக்கம் தோன்றும். ஜென்ம ராகு ஜாதகரை நிலையிழக்க செய்வாரே என்ற பயம் உங்களை மனக் குழப்பத்திற்கு இழுத்துச் செல்லும். சனி வீட்டு ராகு என்பதால் பய உணர்வு மேலும் அதிகமாகும். சனிபகவானும் ராகுவும் கடும் பகை கிரகங்கள் என்பதால் இறை வழிபாட்டில் கவனம் செலுத்தி காலத்தை நகர்த்த வேண்டும். உங்களின் செயல்பாடுகள் புகழ் மற்றும் கெளரவத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாகவே இருக்கும். தனித்திறமைகள் வெளிப்படும். எல்லாம் சரியாகவே நடந்தால் கூட நாம் செய்வது சரியா? என்ற இனம் புரியாத பய உணர்வு உங்களுக்குள் இருந்து கொண்டு தான் இருக்கும். ஒரு சிலருக்கு செரிமானக் கோளாறு இருக்கும். ஜென்ம ராசி மற்றும் ஏழில் ராகு, கேதுக்கள் என்பதால் சர்ப்ப தோஷம் உண்டாகும். இந்த தோஷத்தால் திருமணத் தடை மற்றும் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு, ஒற்றுமை குறைவு, உடல் நலக் குறைவு, கருச்சிதைவு போன்ற பிரச்சனைகள் எழும். ஜனன கால ஜாதகத்தில் தற்போது நடைபெறும் தசாபுத்திக்கு ஏற்பவே சுப அசுப பலன்களின் பாதிப்பு இருக்கும் என்பதால் பயப்பட தேவையில்லை.
மகர ராசிக்கு 4,11ம் அதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திர சாரத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கும் காலம் பல வருடங்களாக தீர்க்க முடியாமல் இருந்த பூர்வீக சொத்துதொடர்பான விசயங்கள் முடியும். உங்களுக்கு என்று ஒரு பங்கு உறுதி ஆனால் முடிவு நீங்கள் எதிர்பார்த்த வகையில் சாதகமாக இருக்காது. வாடகைக்கு குடியிருப்பவர்கள் மாறலாம். ஒரு சிலருக்கு வாடகை வருமானம் தடைபடலாம் அல்லது வாடகை வருமானம் தருகின்ற கட்டிடங்களில் சட்ட சிக்கல் ஏற்படும். புதிய வீடு கட்ட அரசின் மானியம் கிட்டும். நல்ல வெளிச்சமான காற்றோட்டம் நிறைந்த பெரிய வீடு கட்டி மகிழ்ச்சி அடைவீர்கள். சிலருக்கு பழைய வீட்டை புதிப்பிக்கும் ஆர்வம் அதிகரிக்கும். நீண்ட நாள் கனவான நான்கு சக்கர வாகன கனவு நிறைவேறும். வீட்டிற்கு தேவையான அழகு ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஒரு சிலருக்கு நடத்தையின் மேல் கலங்கம் ஏற்படுத்தும் விதமான அவப்பெயர் தேடி வரும்.
மகர ராசிக்கு சம சப்தமஸ்தான அதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திர சாரத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கும் காலம் திருமணத் தடை அதிகரிக்கும். தொழில் அல்லது உத்தியோக நிமித்தமாக சிலருக்கு வாழ்க்கை துணையை பிரிந்து வாழ நேரலாம் அல்லது கணவன் மனைவி கருத்து வேறுபாட்டாலும் பிரிய நேரும். சிலருக்கு இரண்டாவது திருமணம் நடக்கும் அல்லது தவறான நட்பு வலையில் மாட்டலாம். ஏழரைச் சனியின் காலத்தில் நீதி மன்ற படி ஏறியவர்களுக்கு இப்பொழுது விவகாரத்து கிடைக்கும். மன நிம்மதிக்காக ஊரை விட்டு, மாநிலம் விட்டு தொலைதூரம் செல்லும் நிலை ஏற்படும். சிலர் துன்பத்தாலும் துயரத்தாலும் வெறுப்படைந்து சன்னியாசம் வாங்குவார்கள் அல்லது தலைமறைவு வாழ்க்கை வாழ நேரும். உற்றார் உறவினர்களுக்கு ஜாமீன் போட்டால் அதற்கு நீங்கள் பொறுப்பு ஏற்கும் நிலை ஏற்படும்.
மகர ராசிக்கு அஷ்டமாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திர சாரத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கும் காலம் இடமாற்றம் செய்ய நேரும். அலைச்சல் மிகுதியான பயணங்கள் அதிகம் உண்டாகும். இடப்பெயர்ச்சியால் சீதோசன ஒவ்வாமை ஏற்பட்டு விடாமல் சளி, காய்ச்சல், இருமல்,மூக்கடைப்பு போன்ற சுவாச கோளாறுக்கு நீண்ட நாள் வைத்தியம் செய்ய நேரும். இளைய சகோதரருக்கும் உங்களுக்கும் பத்திரம், ஆவணம் தொடர்பான சட்ட சிக்கலை சந்திக்க நேரும். உங்களின் சகோதரர் போட்ட ஜாமீன் பொறுப்பிற்கான கடனை நீங்கள் அடைக்க நேரும். இதனால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு கடன் வாங்க நேரும். எப்பொழுதோ நடந்த வழக்கிற்கு இப்பொழுது தீர்ப்பு வந்து சிறை தண்டனை அனுபவிக்க நேரும்.
ஏழாமிடத்தில் உள்ள கேது உங்களை மாறுபட்ட கோணத்தில் சிந்திக்க வைப்பார். தொழில் மாற்றம் வரலாம். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கம் இருக்கும். சில நேரங்களில் பணம் வராது. அல்லது கையில் பணம் தங்காது. அளவில்லாத செலவால் சேமிப்பு கரையும். குடும்ப உறுப்பினர்கள், உடன் பிறந்தவர்கள், உறவினர்கள், நண்பர்களின் எதிர்பாராத பொருளாதார தேவையை நிறைவு செய்ய அதிக பண உதவி செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். கேது பிரிவினை மற்றும் வம்பு வழக்கின் மொத்த குத்தகைதாரர் என்பதால் திருமணம் சற்று காலதாமதமாகும். திருமணமான இளம் தம்பதியினருக்கு கருத்து வேறுபாடும் மனப் போராட்டமும் மிகுதியாகும். கூட்டுக் குடும்பங்கள் பிரிவினையாகும்.தொழில் கூட்டாளிகளால் கருத்து வேறுபாடு ஏற்படும்.எந்த செயலையும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்பட நலம் உண்டாகும்.
மகர ராசிக்கு 6,9ம் அதிபதியான புதனின் ஆயில்யம் நட்சத்திர சாரத்தில் கேது பகவான் சஞ்சரிக்கும் காலம் தொழில் தொடர்பான புதிய புதிய ஞானம் மற்றும் அனுபவங்களை கேதுவின் மூலம் கற்றுக் கொள்ள நேரும். அதிக நேரம் கடுமையாக உழைக்க நேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எவ்வளவு உழைத்தாலும் மேலதிகாரியிடம் நல்ல பெயர் எடுக்க முடியவில்லை என்ற ஆதங்கம் மேலோங்கும். சொந்த தொழில் செய்பவர்களால் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படும். தொழில் கூட்டாளிகள்பிரிந்து செல்வார்கள். புதிய தொழில் கூட்டாளிகள் கிடைப்பதில் சட்டச் சிக்கல் மிகுதியாகும்.சொந்த தொழில் செய்பவர்களுக்கு முதலாளி ஆசை போய் உத்தியோகத்தில் ஆர்வம் ஏற்படும். உத்தியோகத்தில் வெறுப்பு ஏற்பட்டவர்கள் சொந்த தொழிலில் விருப்பம் காட்டுவர்கள்.
மகர ராசியின் அதிபதி மற்றும் தனஸ்தான அதிபதியான சனி பகவானின் பூசம் நட்சத்திர சாரத்தில் கேது பகவான் சஞ்சரிக்கும் காலம் உடல் நிலையிலும் மன நிலையிலும் சங்கடங்கள் இருந்து கொண்டே இருக்கும். நினைத்த காரியத்தை நிறைவேற்றிக் கொள்ள கடுமையாக போராடுவீர்கள்.வெற்றியை மட்டும் குறிக்கோளாக கொண்டு செயல்படுவீர்கள். வரவு, செலவு வழக்கம் போல் இயல்பாக இருக்கும். வராக்கடன்கள், நிலுவை சம்பளம் வசூலாகும். குடும்பத்தின் நிம்மதிக்காக கோபத்தை வெல்லும் சூட்சமத்தை கற்பீர்கள்.உங்கள் கனவுகளும் திட்டங்களும் லட்சியங்களும் நிறைவேறும். ஆரோக்கிய தொல்லைகள் அதிகரிக்கும். தேவையற்ற விவாதத்திலிருந்து சற்று விலகிச் செல்லவும். ஏற்றம் இறக்கம் நிறைந்த வாழ்க்கையில் எதையும் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். எந்த காரியத்தையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்ய வேண்டும். பொறுப்புடன் நடந்து கொண்டால் சிரமங்களைத் தவிர்க்கலாம்.
மகர ராசிக்கு 3,12ம் அதிபதியான குருவின் புனர்பூசம் நட்சத்திர சாரத்தில் கேது பகவான் சஞ்சரிக்கும் காலம் மகர ராசியினருக்கு வாழ்வியல் தத்துவத்தை உணர்த்தும் விதமாக இருக்கும். மனிதன் ஆன்மீக உணர்வோடு தர்மத்திற்கு கட்டுப்பட்டு வாழ்ந்து முக்திக்கு வழி தேட வேண்டுமா? அல்லது சிறு பணத்தை பெரும் பணமாக்க முயற்சித்து மறுபிறவியில் உழல வேண்டுமா? என்பதை உணர்த்தும். திடீர் அதிர்ஷ்டம், லாட்டரி, உயில் சொத்து மூலம் எதிர்பாராத தன வரவு ஏற்படும். சிலருக்கு சட்டத்திற்கு புறம்பான வழியில் பணம் வந்து சேரும். பணத்துடன் வம்பு வழக்கும் சேர்ந்து வரும். வழக்கின் சாதகத்திற்கு எந்த குறுக்கு வழியையும் நாடி வழக்கை முடிப்பீர்கள்.உங்களின் மூத்த சகோதரரின் ஆரோக்யத்தில் அதிக கவனம் வேண்டும்.
ஏழை பெண்களின் திருமணத்துக்கு உங்களால் முடிந்த பொருட்களை தானம் செய்வதால் தடையில்லாத முன்னேற்றம் ஏற்படும்.முறையான துர்க்கை வழிபாடு ஜென்ம ராகு, ஏழாமிட கேதுவின் தாக்கத்தை குறைத்து சுப பலனை மிகுதிப்படுத்தும்.
உயர்வான எண்ணம் கொண்ட கும்ப ராசியினரே! திருக்கணித பஞ்சாங்கப்படி 5.12.2026 அன்று முதல் ருண, ரோக, சத்ரு ஸ்தானத்திற்குள் கேது பகவானும் அயன சயன விரய ஸ்தானத்திற்குள் ராகு பகவானும் நுழைகிறார்கள். இந்த ஒன்றரை ஆண்டில் சனிபகவான் மீனம் மற்றும் மேஷ ராசியில் சஞ்சரிப்பார்.குருபகவான் கடகம், சிம்மம், கன்னி ஆகிய ராசிகளில் பயணிப்பார்.
பனிரெண்டாமிடம் என்பது அயன, சயன, போக, விரய ஸ்தானம் மற்றும் வெளிநாட்டு பயணத்தை குறிக்குமிடமாகும். இதை மோட்ச ஸ்தானம் என்றும் கூறலாம். மறைவு ஸ்தானத்திற்கு வரும் ராகு, கேதுக்கள் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்த மாட்டார்கள் என்பது பலருடைய நம்பிக்கை. தற்போது ஏழரைச் சனியின் பிடியில் நீங்கள் இருப்பதையும் மறக்கக் கூடாது. கோட்சாரத்தில் சர்ப்பகிரகங்கள் மறைவு ஸ்தானத்திற்கு வரும் போது மனிதனை பக்குவப்படுத்தி வாழ்வின் யதார்தத்தை உணர வைத்து விடும். மனிதனை லெளகீக வாழ்க்கைக்கு அழைத்து துன்பத்தை வழங்குபவர் ராகு பகவான் என்றால் துன்பத்தில் இருந்து விடுபடும் ஞானத்தினை அள்ளி வழங்குபவர் கேது பகவான் ஆவார். எத்தகைய தவறுக்கும் அஞ்சாத மனிதனைக் கூட தன் வாழ்வின் கடைசி காலத்தில் அவர் செய்த பாவ புண்ணியத்தினை சித்திக்க வைப்பவர்கள் சர்ப்ப கிரகங்கள். இத்தகைய சர்ப்ப கிரகங்கள் பனிரென்டாம் இடம் எனும் மறைவு ஸ்தானத்திற்கு வரும் போது வினைப்படி அனுபவிக்க வேண்டிய சுப, அசுப பலன்களை முழுமையாக வழங்கி விடும். விரயத்தை ராகு மிகுதிப்படுத்துவார். இன்றைக்கு சம்பாதித்த பணத்தை இன்றே செலவு செய்தால் மட்டுமே நாளைக்கு சம்பாதிக்கும் ஆசை வரும் என்ற கதையாக வரவுக்கு மீறிய செலவு இருக்கும்.
கும்ப ராசிக்கு 3,10ம் அதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திர சாரத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கும் காலம் சமுதாய அங்கீகாரத்தை தரக்கூடிய தொழில் தொடர்பான புதிய எண்ணங்கள் மற்றும் திட்டங்கள் தம்பதிகளுக்கு தோன்றும். மிகக் குறுகிய காலத்தில் பணக்காரர் ஆகும் தொழில் சிந்தனைகள் அதிகரிக்கும். பொருளை பன் மடங்காக பெருக்க குறுக்குவழியில் நாட்டம் மிகும். அதற்காக புதிய பங்கு தாரர்களை தேடும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். பல புதிய தொழில் வாய்ப்புகள், தொழில் முதலீட்டாளர்கள், ஏஜென்சி நிறுவனங்கள் தேடி வரும். இலவச ஆபர் கொடுப்பது, முதலீட்டை இரட்டிப்பாக்கி தருவது, ஆன்லைன் வணிகம், ஷேர் மார்க்கட், சதுரங்க வேட்டை படத்தில் மண் பாம்பை வைத்து பணம் சம்பாதிப்பது போன்ற அவயோக தொழிலை தேர்வு செய்து சட்ட சிக்கலில் மாட்ட நேரும். எனவே பேராசையை தவிர்க்க வேண்டும்.
கும்ப ராசிக்கு ஆறாம் அதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திர சாரத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கும் காலம் வேலை மற்றும் தொழில் மூலமும் வருமானம் குறைவுபடும். உத்தியோகத்தில் இருக்கும் சிலர் மன சஞ்சலத்தால் பார்க்கும் வேலையை விட்டு விடலாம். சிலர் பிழைப்பிற்காக வெளிநாடு அல்லது வெளி மாநிலம் சென்று விட்டால் புகழ், கெளரவம், பொருளாதாரம் உயரும். குடும்ப உறவுகளுடன் கருத்து வேறுபாடு குறையும். நேரத்திற்கு சாப்பிட முடியாமல் உழைக்க நேரும். தாயின் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கரை தேவை. வரவிற்கு தகுந்த செலவும் இருக்கும். வீண் விரயம் மற்றும் பொருளாதார நெருக்கடி மிகுதியாகும். வயது முதிர்ந்தவர்கள் மருத்துவமனையில் தங்கி வைத்தியம் செய்ய நேரும். எது எப்படி இருந்தாலும் படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும்.
கும்ப ராசிக்கு சம சப்தம ஸ்தான அதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கும் காலங்களில் ஆன்மா ஒருவரை கேள்வி கேட்கும். சூரியன் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும் ராகு உங்களின் தன் மானத்தை கூறு போடும் விதத்தில் சோதனைகளை உருவாக்கிக் கொண்டே இருப்பார். சிறிய விஷயத்திற்கு கூட பல முறை முயற்சிக்க நேரும். அதே நேரத்தில் எதையும் தாங்கும் மனப் பக்குவத்திற்கு உங்களை தயார்படுத்தி விடுவார். ஞாபக மறதி அதிகரிக்கும். உங்களின் ஞாபக சக்தி குறைவை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் தவறாக பயன்படுத்துவது உங்களை கவலையில் ஆழ்த்தும். ஒரு சிலருக்கு விபரீத ராஜயோக அடிப்படையில் கைவிட்டுப்போனசொத்து அல்லது வேலை கிடைக்கும்.
குழந்தைகளின் படிப்பு, திருமணம் வீடு, வாகன செலவு என வாழ்க்கைக்கு அனைத்து தேவைகளையும் நிறைவு செய்து மகிழ்வீர்கள். இதுவரை வெளிநாட்டு வேலைக்காக பல முறை முயன்றவர்களின் வெளிநாட்டு கனவு நிறைவேறும். சொத்துத் பத்திரத்தின் வில்லங்களால் சகோதரர்களுக்குள் ஒற்றுமை குறைவு ஏற்படும். உங்களின் மூத்த சகோதரர் உங்களுக்கு விட்டுக் கொடுப்பார். சிலருக்கு வீட்டை ஆல்டர் பண்ணி கட்டி பட்ஜெட் கையை பிடிக்கும் வகையில் விரயம் மிகுதியாகும். சிலர் குறைந்த மதிப்புள்ள சொத்தை அதிக விலை கொடுத்து கண் மூடித்தனமாக வாங்க நேரும். இது தொடர்பான வம்பு வழக்கால் சட்ட நெருக்கடியை சந்திக்க வேண்டிய நிலை உருவாகும். இது போன்ற மன உளைச்சலால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். கால்சிய சத்து குறைவால் பற்களில் தொந்தரவு ஏற்படும். நீண்ட நாட்களுக்கு மருந்து சாப்பிட வேண்டிய சுகர், பிரஷர், தைராய்டு போன்ற நோய் கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். இளவயதினருக்கு பெண் குழந்தை பிறக்கும். வயது முதிர்ந்தவர்களுக்கு பேத்தி பிறப்பாள். மனதை மகிழ்விக்கும் சுப நிகழ்வுகள் அனைத்து நடக்கும்.
கும்ப ராசிக்கு 5,8ம் அதிபதியான புதனின் ஆயில்யம் நட்சத்திர சாரத்தில் கேது பகவான் சஞ்சரிக்கும் காலம் சுய ஜாதகரீதியான தோஷங்களும் சாபங்களும் விலகி புதிதாக பிறந்தது போன்ற உணர்வு உண்டாகும். உயர்வான நிலையை அடைய முடியும். உயர் அதிகாரிகளின் அனுசரனையும் ஆதரவும் உண்டு.அடமானச் சொத்துக்கள் மீட்கக் கூடிய சந்தர்ப்பம் உருவாகும். வீடு கட்டும் விருப்பம் நிறைவேறும். புதிய வாகனம் வாங்கலாம். எதிர்காலத்திற்கு சேமிக்க துவங்குவீர்கள். பல வருடங்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். இழந்த வேலை மீண்டும் கிடைக்கும். புதிய தொழில் ஒப்பந்தம் மற்றும் ஆர்டர்கள் கிடைக்கும். தொழிலுக்கு அரசு அதிகாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் புதிய நட்பு வட்டாரம் உருவாகும்.
கும்ப ராசி அதிபதி மற்றும் விரய ஸ்தான அதிபதியான சனியின் பூசம் நட்சத்திர சாரத்தில் கேது பகவான் சஞ்சரிக்கும் காலம் எப்பொழுதுமே எதையாவது நடக்குமா? நடக்காதா என யோசித்துக் கொண்டே இருப்பார்கள். திடீர் ஞானியாகி விடுவார்கள். தெரிந்தவர்கள் அறிந்தவர்களுக்கு ஆலோசனை கூற ஆரம்பிப்பார்கள். நடை, உடை, பாவனை கூட ஞானி போல் இருக்கும். இல்வாழ்க்கையில் நாட்டம் குறையும். வீட்டில் இருக்கும் வயதான முதியவர்களை பராமரிப்பதில் உறவுகளிடையே சர்ச்சைகள் தோன்றும். சகிப்பு தன்மையோடு இருப்பது உங்களுக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் நல்லது. ஒரு சிலர் தொழில் மற்றும் உத்தியோக நிமித்தமாக வெளியூர், வெளிமாநிலம் சென்று தங்க நேரும். சுப கிரகங்களின் தசை புத்தி இருப்பவர்களுக்கு தடைபட்ட திருமணங்கள் நடக்க வாய்ப்புள்ளது.
கும்ப ராசிக்கு 2,11ம் அதிபதியான குருவின் புனர்பூசம் நட்சத்திர சாரத்தில் கேது பகவான் சஞ்சரிக்கும் காலம் உங்களின் மனதடுமாற்றம் நீங்கி விவேகத்துடன் கூடிய வேகம், நிதானம், தைரியம் மற்றும் தெம்பு உங்களுக்குள் குடிபுகும். அதிர்ஷ்டம் உழைப்பின் மூலம் முறையான, நேர்மையான வழியில் கதவை தட்டும். அளவான நியாயமான ஆசைகள் அனைத்தும் பலிக்கும். பெரும் வாழ்வியல் மாற்றம் ஏற்படப் போகிறது. குடும்பத்தில் நிம்மதி, மகிழ்ச்சி பெருகும். வெளியில் சொல்ல முடியாது தவித்த பல பிரச்சனைகள் தானாக தீரும். குடும்ப உறுப்பினர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளும் தன்மை அதிகரிக்கும். திருமணம் தடை பட்டவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். குழந்தை பாக்கியம் விரும்பியவர்களுக்கு பிள்ளைப் பேறு கிடைக்கும். தடைபட்ட வாடகை வருமானம் வரலாம்.
தினமும் திருக்கோளற்று பதிகம் பாராயணம் செய்ய வேண்டும்.சனிக்கிழமைகளில் சக்ரத்தாழ்வார் நரசிம்மர் வழிபாடு செய்ய மன நிம்மதி தேடி வரும்.
தலைமை பண்பு நிறைந்த மீன ராசியினரே! திருக்கணித பஞ்சாங்கப்படி 5.12.2026 அன்று முதல் பஞ்சம ஸ்தானத்திற்குள் கேது பகவானும் லாப ஸ்தானத்திற்குள் ராகு பகவானும் நுழைகிறார்கள். இந்த ஒன்றரை ஆண்டில் சனிபகவான் மீனம் மற்றும் மேஷ ராசியில் சஞ்சரிப்பார். குருபகவான் கடகம், சிம்மம், கன்னி ஆகிய ராசிகளில் பயணிப்பார்.
கோட்சார சர்ப்ப கிரகங்கள் உப ஜெய ஸ்தானங்களான 3,6,10,11ம் இடங்களுக்கு வரும் போது பெரும் வாழ்வியல் மாற்றத்தை தருவார். வாழ்வில்வெற்றி பெற்று வாழ்வை வளம் பெறச் செய்யும் சூட்சமத்தை கற்றுத் தருவார். ராகு தான் நின்ற பாவக பலனை பெருக்கும் தன்மை வாய்ந்தவர்.எவ்வளவு தாழ்ந்த நிலையில் இருப்பவராக இருந்தாலும் மிகக் குறுகிய காலத்தில் லாப கடலில் நீந்தச் செய்வார். அபார வளர்ச்சி சாத்தியமாகும். உங்களின் அனைத்து தேவைகளையும் ஒவ்வொன்றாக நிறைவு செய்யப் போகிறீர்கள். ஆயுள் ஆரோக்யம் அதிகரிக்கும். வட்டிக்கு வட்டி கட்டி மீள முடியாத கடன் பிரச்சனையில் இருப்பவர்களுக்கு கடன் தொகை தள்ளுபடியாகும். நீண்ட நாட்களாக தீர்க்க முடியாமல் இருந்த சட்டம் தொடர்பான பிரச்சனைகள்முடிவிற்கு வரும். ஆன்மீகப் பெரியோர்களின் நட்பும் நல்லாசியும் கிடைக்கும் பூர்வீகச் சொத்துக்கள் தொடர்பான சர்ச்சைகள் நீங்கும்.சிறிய முதலீட்டில் பெரிய லாபம் தேடி வரும். அதிர்ஷ்ட வருமானம் கிடைக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட புதிய தொழில் துவங்க வாய்ப்பு உள்ளது. அழகு ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை மனதை மகிழ்விக்கும். பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைக்கும். பிரார்த்தனைகளை விட மிகவும் உயர்ந்தது பொறுமை தான். பேச்சை குறைத்து நம்பிக்கை அதிகரிக்கும் ஆன்மீக சொற்பொழிவுகளை கேட்க வேண்டும்.
மீன ராசிக்கு 2,9ம் அதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திர சாரத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கும் காலம் தாராள தன நிறைவு உண்டாகும். குடும்ப உறவுகளிடம் மதிப்பு மரியாதை கூடும். பேச்சுவராத குழந்தைகளுக்கு பேச்சு வரும். இழுபறியாக இருந்த முயற்சிகள் வெற்றி தரும். ஸ்திர சொத்துக்கள் சேரும். கல்வியில் கவனம் கூடும். மேற்படிப்பு எண்ணம் நிறைவேறும். பிள்ளைகளின் தீய நடவடிக்கைகள் மாறும். வாழ்க்கைத் துணைக்கு அரசு உத்தியோகம் கிடைக்கும். பிள்ளைகளுக்கு சுப நிகழ்வுகள் நடக்கும். உடன் பிறப்புகளுடன் இருந்த கோப தாபங்கள் மாறும். பிரிந்து வாழ்ந்த தம்பதிகள் ஒன்றாக இணைவார்கள். பூர்வீகம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். குல தெய்வ, இஷ்ட, தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்ற ஏற்ற காலம்.
மீன ராசிக்கு பஞ்சம ஸ்தான அதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திர சாரத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கும் காலம் எலும்பு, நரம்பு தொடர்பான பிரச்சனைக்கு சிகிச்சை செய்ய நேரும்.மண், மனை, பூமி, வீடு, வண்டி, வாகனம் வாங்கும், விற்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். வாடகை வீட்டில் வசிப்பவர்கள் சொந்த வீட்டிற்கு செல்வார்கள். மருமகன், மருமகளால் ஏற்பட்ட மன உளைச்சல் சீராகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். சொத்துக்களின் மதிப்பு உயரும். குடும்ப பெரியோர்களின் அன்பும் நல்லாசியும் கிடைக்கும். உங்களின் பெயர், புகழ் வெளிஉலகத்தில் பரவும். திடீர் பெயர், புகழலால் ஆழ்மனதில் இனம் புரியாத பயம் கலந்த இன்பம் உங்களை வழி நடத்தும். கண்திருஷ்டி அதிகரிக்கும்.
மீன ராசிக்கு ஆறாம் அதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திர சாரத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கும் காலம் செய்வினை பயம் ஏற்பட்டு அதற்கான பரிகாரத்தை தேடுவீர்கள். பலர் மாந்தரீகம், மந்திரவாதம் என ஊர் ஊராகச் சுற்றி அலைந்து பணத்தையும், நேரத்தையும் வீணடிப்பார்கள். தற்காப்பு கலை, வீர விளையாட்டு வீரர்கள் ஏற்றம் பெறுவார்கள். கெளரவப்பதவி தேடி வரும்.பதவி இழந்த பலருக்கு மீண்டும் பதவி கிடைக்கும். குழந்தை பாக்கியத்திற்கு ஏங்கியவர்கருக்கு கர்மம் செய்ய புத்திரன் பிறப்பான். தொழிலின் அனைத்து யுக்திகளையும் கடைபிடித்து ஆர்வத்துடன் செயல்படுவீர்கள்.
பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வரும் கேது பகவான் ஆன்மீக நாட்டத்தை அதிகப்படுத்துவார். சித்தர்களின் ஜீவ சமாதி வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். உங்களின் முன்னோர்கள் நடத்தி வந்த பரம்பரை பூஜை புண்ணிய காரியங்களை தொடர்வீர்கள். எல்லோரிடமும் கலகலப்பாக பேசி பழகுபவர்கள் கூட அமைதியை விரும்பி மெளனத்தை கடைபிடிப்பார்கள். ஜோதிடம், மாந்தரீகம், தியானம் கற்பதில் நாட்டம் அதிகரிக்கும். அக்குபஞ்சர் மற்றும் இயற்கை மருத்துவம் கற்க ஆர்வம் உண்டாகும். பல இளம் பருவத்தினரின் காதல் கட்டாகும். இந்த காலகட்டங்களில் பலருக்கு குழந்தை வளர்ப்பில் ஆர்வம் குறையும். குழந்தைகளின் சாதனைகளை பாராட்ட வேண்டும். தவறை கண்டிக்க வேண்டும். ஆழ்மனம் மற்றும் ஆழ்ந்த சிந்தனைகளை வெளிப்படுத்தும் ஐந்தாமிட கேதுவால் உங்களின் திறமைகள் அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தும். உங்களின் திறமைகளை வெளி உலகத்திற்கு தெரிவிப்பீகள்.வெளிநாட்டில் வசிப்பவர்கள் பூர்வீகம் வந்து உற்றார் உறவினர்களை சந்தித்து மகிழ்வாகள்.
மீன ராசிக்கு 4,7ம் அதிபதியான புதனின் ஆயில்யம் நட்சத்திர சாரத்தில் கேது பகவான் சஞ்சரிக்கும் காலம் திடீர் அதிர்ஷ்டம் உங்களை வழிநடத்தப் போகிறது. அதிர்ஷ்டம் பேரதிர்ஷடமாகும். சிலர் கடன் வாங்கி புதிய தொழில் முதலீடுகள் செய்யலாம். அதிர்ஷ்டப் பணம் அதிர்ஷ்ட சொத்து, பாலிசி முதிர்வு தொகை கிடைக்கும். விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். தாயின் ஆரோக்கியக் குறைபாட்டில் இருந்த கவலைகள் அகலும். அரசியல் பணிகளில் இருப்பவர்களுக்கு சுமாரான நேரம்.வெளிப்படையான பேச்சால் பிரச்சனையை விலை கொடுத்து வாங்கக் கூடாது. பூர்வீகச் சொத்தை பிரிப்பதில் நிலவிய சர்ச்சைகள் விலகும ஏதேனும் காரணத்தால் இதுவரை ஊதியம் வராமல் தடைபட்டு இருந்தால் மொத்தமாக வந்து விடும்.
மீன ராசிக்கு 11,12ம் அதிபதியான சனியின் பூசம் நட்சத்திர சாரத்தில் கேது பகவான் சஞ்சரிக்கும் காலம் பொருளாதாரத்தில் தன்னிறைவு ஏற்படும். தனியார் நிதி நிறுவனங்கள் வீட்டிற்கு தேடி வந்து கடன் கொடுப்பார்கள். அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கை அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தை அள்ளித்தருவதாக மீடியாக்களில் வரும் விளம்பரங்களைப் பார்த்து அதிர்ஷ்டப் பொருட்களை வாங்கி குவித்து ஏமாறுவீர்கள். மிகுதியான பணப்புழக்கத்தால் கெட்ட சகவாசமும் தேடி வரும். பல வருடங்களாக திருமணத்தடையை சந்தித்த மீன ராசியினருக்கு திருமணம் நடந்து முடியும். ஒரு சிலருக்கு சட்ட சிக்கலான இரண்டாம் திருமணமும் நடக்கும்.
மீன ராசியின் அதிபதி மற்றும் தொழில்தான அதிபதியான குருவின் புனர்பூசம் நட்சத்திர சாரத்தில் கேது பகவான் சஞ்சரிக்கும் காலம்மாற்றம் ஒன்றே மாறாது என்பது போல் மாற்றக் கூடிய அனைத்தையும் மாற்றும் ஆர்வம் ஏற்படும். சிலர் தொழிலை மாற்றுவார்கள் அல்லது தொழில் முறையை மாற்றுவார்கள்.எண்ணத்தை செயல்படுத்துவதில் காலதாமதிப்பீர்கள்.புதிய தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு வீட்டிலும் வேலை செய்யும் இடத்திலும் உங்கள் திறமையை அதிகரிப்பீர்கள்.
தினமும் காலை, மாலை இரு நேரமும் மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம் கேட்க சர்ப்ப கிரகங்களின் தாக்கம் குறையும். ஞாயிறு மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான ராகு கால வேளை நேரத்தில் அரச மரத்தின் அடியில் இருக்கும் எறும்பு புற்றுக்கு நாட்டு சர்க்கரை கலந்த நொய் அரிசியிட தடை தாமதங்கள் அகலும்.