ராகு, கேது தோஷம் போக்கும் ஆலயம்

பூஜையின் போது சிவனுக்குரிய வில்வம், பெருமாளுக்குரிய துளசி மாலையை அணிவிக்கிறார்கள்.
Rahu Ketu
Published on

பூஜை

சங்கரன்கோவில் சங்கரநாராயணரை வணங்கினால் வீடுகளில் பூச்சி, பல்லி, பாம்புத் தொல்லை நீங்கும் என்பது நம்பிக்கை. சங்கரன்கோவிலில் காலை பூஜையின் போது துளசி தீர்த்தம் கொடுக்கிறார்கள். மற்ற நேரங்களில் விபூதி வழங்கப்படுகிறது. பூஜையின் போது சிவனுக்குரிய வில்வம், பெருமாளுக்குரிய துளசி மாலையை அணிவிக்கிறார்கள்.

ராகு, கேது தோஷம்

புத்திர தோஷம் உள்ளவர்கள் மா விளக்கில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் உடனடி பலன் கிடைக்கிறது. ராகு கேது தோஷம் நீங்கும். சிவன் சன்னதி எதிரில் உள்ள பஞ்சநாக சிலைகள் மீது பால் அபிஷேகம் செய்தால் நாகதோஷம் விலகும். இத்தலத்தில் சர்ப்ப விநாயகருக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை (4.30 முதல் 6 மணிவரை) ராகு காலத்தில் பால் அபிஷேகம் செய்தால் ராகு, கேது தோஷம் நீங்கும். வீடுகளில் பூச்சி, பல்லி, பாம்புத் தொல்லை இருந்தால், சங்கரலிங்கனாருக்கு வேண்டிக் கொண்டு, அதன் வெள்ளி உருவங்களை வாங்கி காணிக்கையாக அளித்தால் தொல்லை நீங்கும் என்பது நம்பிக்கை.

புற்று மண்

அம்மன் சந்நதி பிராகார வாயு மூலையில் உள்ள புற்று மண்ணை நெற்றியில் இட்டுக் கொள்பவருக்கு கெடுபலன் குறையும் என்பது நம்பிக்கை. சங்கரநாராயணர் சந்நதியில் உள்ள வசனக்குழி எனும் தெய்வீக சக்தி மிக்க பள்ளத்தில் பேய், பிசாசு, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அமர்ந்து பூஜை செய்து நலம் பெறுகின்றனர்.

வித்தியாசமான வடிவமைப்பில் காணப்படும் நந்தி

சுவாமி சங்கரலிங்கனார் கோவிலில் நந்தி வித்தியாசமான வடிவமைப்பை பெற்றிருக்கிறார். இடது காலை மடித்து வைத்து, வலது காலை தூக்கியபடி நந்தி காட்சியளிப்பார். வலது மூக்கை நாக்கால் அடைத்து வைத்து, சற்றே இடது பக்கம் திரும்பி இருப்பது போன்று நந்தி வித்தியாசமாக காட்சியளிப்பார். மேலும் காதுகள் விரிந்து நந்தி ஆக்ரோஷமாக காட்சியளிப்பது சிறப்பு. கோமதி அம்பாளின் ஆலயத்தில் உள்ள நந்தி வலது காலை மடித்து வைத்து, இடது காலை தூக்கியபடி காட்சியளிக்கும். சாந்த கோலத்தில் காட்சியளிக்கும்.

ஊர் பெயர் காரணம்

தென்னாட்டில் மிக சிறந்து விளங்கும் சிவ ஸ்தலங்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலும் ஒன்றாகும். முன்பு இத்திருத்தலத்தின் பெயர் புன்னைவனப்பேரி என்றும், சங்கரரும், நாராயணரும் இணைந்து ஒரு சேரகாட்சி அருளியதால் சங்கரநயினார்கோவில் என்றும் அழைக்கப்பட்டது. இதுவே நாளடைவில் மறுவி சங்கரன்கோவிலாக இன்று வழக்கத்தில் இருந்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com