நவராத்திரி விழாவை முன்னிட்டு வடபழனி முருகன் கோவிலில் ‘சக்திகொலு’ கண்காட்சி

கொலுகண்காட்சி நேரத்தில் ஆன்மீக வினாடி வினா நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும் என்றும் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நவராத்திரி விழாவை முன்னிட்டு வடபழனி முருகன் கோவிலில் ‘சக்திகொலு’ கண்காட்சி
Published on: 

வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு “சக்தி கொலு” எனும் பெயரில் பிரமாண்ட கொலு கண் காட்சி இன்று தொடங்கியது. யாகசாலை பூஜைகள் முடிந்து அம்மன் மண்டபத்தில் சக்தி கொலு வைக்கப்பட்டுள்ளது.

நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலுவில் உற்சவர் அம்மனுக்கு தினமும் அந்தந்த நாளுக்கு உரிய சிறப்பு அலங்காரம் செய்து பூஜை செய்யப்படுகிறது.

ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மன்

அதன்படி இன்று ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மன், நாளை (திங்கட்கிழமை) மீனாட்சி அம்மன், 13 -ந்தேதி அன்னபூரணி அம்மன், 14-ந்தேதி அபிராமி அம்மன், 15-ந்தேதி கெஜ லட்சுமி அம்மன், 16-ந்தேதி கருமாரி அம்மன், 17-ந்தேதி கம்பாநதி அம்மன், 18-ந் தேதி காமாட்சி அம்மன், 19-ந் தேதி சரஸ்வதி அம்மன், 20-ந்தேதி பரி வேட்டை அம்மன் அலங்காரத்தில் அருள்பாளிக்கின்றனர்.

தினமும் காலை 11 மணி முதல் 11.30 வரையிலும் அதேபோல் மாலை 6 மணி முதல் 6.30 மணி வரையிலும் உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜை மற்றும் தீபாராதனை நடத்தப்படும். இதில் கலந்து கொள்ளும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படும்.

ஆன்மீகம்

இதேபோல் தினமும் மாலை 5 மணி முதல் 7 மணி வரை லலிதா சகஸ்ர நாம பாராயணம், வேத பாராயணம், திருமுறை பாராயணம், மகளிர் குழுவின் கொலு பாட்டு நடத்தப்படுகிறது. வருகிற 16-ந் தேதி காலை 7.30 மணி முதல் 12 மணி வரையிலும் மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் ஏகதின லட்சார்ச்சனை நடக்கிறது. மாலையில் பரத நாட்டிய நிகழ்ச்சிகள், இசை கச்சேரி, ஆன்மீக சொற் பொழிவு நடத்தப்படுகின்றன.

கோவில்

கோவிலில் உள்ள சக்தி கொலுவை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் காலை 6.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும் பார்வையிடலாம்.

கொலுகண்காட்சி நேரத்தில் ஆன்மீக வினாடி வினா நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும் என்றும் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com