

உலக பிரசிசத்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகிற 11-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.
முன்னதாக 10-ந் தேதி காலை 11 மணிக்கு காளி பூஜை, 12 மணிக்கு அன்னதானம், மாலை 4 மணிக்கு மகுட இசையும், மாலை 5 மணிக்கு சகஸ்ரநாமம் அர்ச்சனை புஷ்பாஞ்சலியும், மாலை 5.30 மணிக்கு பரத நாட்டியம், இரவு 7 மணிக்கு வில்லிசையும் நடக்கிறது.
11-ந் தேதி அதிகாலை கொடிப்பட்டம் ஊர்வலமும், காலை 5 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. பின்னர் கொடி மரத்திற்கு பல்வேறு அபிஷேகங்களும் சிறப்பு தீபாராதனையும் நடக்கிறது. தொடர்ந்து பக்தர்கள் கோவில் பூசாரியிடம் காப்பு கட்டி தாங்கள் நேர்த்திக்கடன் பட்ட வேடங்கள் அணிந்து காணிக்கை பிரிக்க தொடங்குவார்கள்.
காலை 7 மணி, பகல் 1 மணி, மாலை 5.30 மணி, இரவு 7.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. காலை 10 மணிக்கு சிவலூர் தசரா குழு சார்பில் அன்னதானமும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை கலை நிகழ்ச்சி நடக்கிறது. 12 -ந் தேதி முதல் 19 -ந் தேதி வரை தினசரி காலை 7.30 மணி, காலை 9 மணி, காலை 10.30 மணி, பகல் 12 மணி, பகல் 1.30 மணி, மாலை 3 மணி, மாலை 4.30 மணி, மாலை 6.00 மணி, இரவு 7.30 மணி, இரவு 10 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், மதியம் 12 மணிக்கு அன்னதானமும், மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை கலை நிகழ்ச்சியும் நடக்கிறது.
1-ம் திருவிழாவான 11-ந் தேதி முதல் 9-ம் திருவிழாவான 19-ந் தேதி வரை தினசரி இரவு 10 மணிக்கு அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனம் - துர்க்கை திருக்கோலம், கற்பக விருட்சம் வாகனம் - விசுவகர்மேசுவரர் திருக்கோலம், ரிசபம் வாகனம் - பார்வதி திருக்கோலம், மயில் வாகனம் - பாலசுப்பிரமணியர் திருக்கோலம், காமதேனு வாகனம் - நவநீத கிருஷ்ணர் திருக்கோலம், சிம்ம வாகனம் - மகிசாசுரமர்த்தினி திருக்கோலம், பூஞ்சப்பரத்தில் - ஆனந்த நடராஜர் திருக்கோலம், கமல வாகனம் - கசலெட்சுமி திருக்கோலம், அன்ன வாகனம் - கலைமகள் திருக்கோலம் என ஒவ்வொரு வாகனம் ஒவ்வொரு திருக்கோலத்தில் அன்னை முத்தாரம்மன் திருவீதியுலா நடக்கிறது.
6-ம் திருவிழா முதல் 10-ம் திருவிழா வரை தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தசரா குழுவினர் வேடம் அணிந்து மேளம், டிரம் செட், செண்டா மேளம், தாரை தப்பட்டம் மற்றும கரகாட்டம், டிஸ்கோ டான்ஸ் போன்ற கலை நிகழ்ச்சி நடத்துவார்கள். எனவே நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் எங்கு பார்த்தாலும் தசரா பக்தர்களாக காட்சியளிப்பார்கள்.
10-ம் திருவிழாவான 20-ந் தேதி காலை 6 மணி, காலை 7.30 மணி, காலை 9 மணி, காலை 10.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 11 மணிக்கு அன்னை முத்தாரம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடக்கிறது. தொடர்ந்து இரவு 12 மணிக்கு அன்னை சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளி லட்சகணக்கான பக்தர்கள் முன்னிலையில் மகிஷா சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.
21-ந் தேதி அதிகாலை 1 மணிக்கு சூரசம்காரம் முடிந்தவுடன் கடற்கரையில் அன்னைக்கு அபிஷேக ஆராதனையும், அதிகாலை 2 மணிக்கு சிதம்பரேசுவரர் கோவில் முன்பு எழுந்தருளி சாந்தாபிஷேக ஆராதனையும், காலை 3 மணிக்கு அபிஷேக மேடையில் அபிஷேக ஆராதனையை தொடர்ந்து தேரில் பவனி வந்து தேர் நிலையைம் சென்றடைதல், அதிகாலை 5 மணிக்கு கோவில் கலையரங்கத்தில் அபிஷேக ஆராதனையும், காலை 6 மணிக்கு அன்னை முத்தாரம்மன் பூஞ்சப்பரத்தில் திருவீதியுலா புறப்படுதல், பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 4.30 மணிக்கு சப்பரம் கோவிலுக்கு வந்து சேர்ந்தவுடன் பக்தர்கள் காப்பு களைந்து விரதம் முறிப்பார்கள்.
நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது. 12-ம் திருவிழா 22-ந் தேதி காலை 6 மணி, காலை 8 மணி, காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் 12 மணிக்கு கோவில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன் ஏற்பாட்டில் சிறப்பு பாலாபிஷேகம் மற்றும் புஷ்ப அலங்காரம் நடக்கிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர் ரோஜாலிசுமதா, உதவி ஆணையர்கள் ராமசுப்பிரமணியன், கோமதி, கோவில் நிர்வாக அதிகாரி வள்ளிநாயகம், ஆய்வர் முத்துமாரியம்மாள், கோவில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன், அறங்காவலர்கள் ரவீந்திரன் குமரன், மகாராஜன், கணேசன், வெங்கடேஸ்வரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.