கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன்

திருவிழா நாட்களில் நாகர்கோவில், மார்த்தாண்டத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
kollankodu amman
Published on

வெங்கஞ்சி திருவிழா

குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் கொல்லங்கோடு தூக்க முடிப்புரை கோவிலும் ஒன்று. இந்த பத்ரகாளி அம்மன் கோவிலில் 2 தேவிகள் ஒருசேர அமர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குகின்றனர். இதனால் இங்கு தேவிகள் வசிக்க 2 கோவில்கள் உள்ளது. ஒன்று வெங்கஞ்சி திருவிழா கோவில். மற்றொன்று திருவிழா நாட்களை தவிர மீதமுள்ள அனைத்து நாட்களிலும் அமர்ந்து ஆசி வழங்கும் வட்டவிளை மூலக்கோவில்.

மீன மாதம் திருவிழா

இந்த கோவிலில் ஆண்டுதோறும் தமிழ் மாதங்களில் மீன மாதம் திருவிழா நடத்தப்படுகிறது. 10 நாட்கள் நடக்கும் திருவிழாவில் 10-ம் நாள் மீனபரணி நாளில் மிகவும் பிரசித்தி பெற்ற பச்சிளம் குழந்தைகளின் தூக்க நேர்ச்சை விழா நடக்கிறது. இதில் தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

பூஜைகள்

குறிப்பாக கர்நாடகாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகை தருகிறார்கள். இந்த கோவிலில் பூஜைகள் அனைத்தும் கேரள முறைப்படி நடத்தப்படுகிறது. கோவிலின் அமைப்பும் கேரள முறையில் தான் அமைந்து உள்ளது. குழந்தை பேறு இல்லாத தம்பதியினர் தங்களுக்கு குழந்தை பிறந்தால் அம்மனுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றுவதாக இங்கு வந்து வேண்டிக் கொள்வார்கள்.

திருமணம்

இதேபோல குழந்தைகள் நோய் நொடி இன்றி நீண்ட காலம் வாழவும், திருமணமாகாத பெண்கள், திருமணம் நடக்க அம்மனை வேண்டிக்கொள்கிறார்கள். அதன்படி வேண்டுதல் நிறைவேறியதும் தங்கள் குழந்தைகளை கோவிலுக்கு அழைத்து வந்து அந்தரத்தில் தொங்கியபடி கோவிலை வலம் வரும் நேர்ச்சைக்காரர்களிடம் கொடுத்து தூக்க நேர்ச்சை நிறைவேற்றுகிறார்கள்.

களியக்காவிளை

இதேபோன்று இந்த கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பரணேற்று என்ற ஒரு திருவிழா நடத்தப்படுகிறது. இது கோவிலில் இருக்கும் தேவிகள் அசுரனை வதம் செய்யும் நிகழ்வாக கொண்டாடப்படுகிறது. இந்த கோவில் களியக்காவிளை பகுதியில் இருந்து 11 கிலோ மீட்டர் தொலைவிலும், உச்ச கடை பகுதியில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. களியக்காவிளை பகுதியில் இருந்து அடிக்கடி பஸ் வசதி உள்ளது. திருவிழா நாட்களில் நாகர்கோவில், மார்த்தாண்டத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

அம்மன்

ஆடி மாதம் பெண்கள் இக்கோவிலுக்கு வந்து சிறப்பு வழிபாடு நடத்துவார்கள். மேலும் இந்த மாதத்தில் நடக்கும் நிறைபுத்தரிசி பூஜை மிகவும் விசேஷமானது. அதிகாலை வேளையில் புதிதாக அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்களை அம்மன் முன்பு வைத்து பூஜை நடத்துவர். பின்னர் அந்த நெற்கதிர்களை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவார்கள். ஆடி மாதங்களில் உள்ள செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பத்திரகாளி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்கிறார்கள். மேலும் இந்த கோவிலில் தினமும் அன்னதானம் வழங்கப்படும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com